Abstract:
போருக்குப் பின்னரான இலங்கையில் தமிழர்கள் பற்றிய ஆய்வுகள் அவர்களது சமூக, பொருளாதார, கலாச்சார, சட்ட
நிலமைகளில் ஏற்படுத்தப்பட வேண்டிய மாற்றங்கள் பற்றிய விழிப்புணர்வினை ஏற்படுத்துவதற்கு அவசியமாகின்றது. இலங்கையின்
30 ஆண்டுகால யுத்தமானது தமிழ்ப் பெண்களின் வாழ்க்கையில் பல விதமான மாற்றங்களை ஏற்படுத்தியுள்ளது. யுத்த காலத்தில்
மாத்திரமல்லாது யுத்தத்திற்குப் பின்னரான காலப்பகுதியில் கூட பெண்களுக்கெதிரான வன்முறைகள் குறைந்து போகாமல் தொடர்ந்த
வண்ணமே உள்ளன. போருக்குப் பின்னரான இலங்கையில் தமிழப் பெண்கள்
மீதான வன்முறைகளை செய்திகளாகப் பிரசுரிக்கும் தமிழ்ப்பத்திரிகைகளில் வன்முறைச் செய்திகளை உள்ளடக்கப் பகுப்பாய்வு செய்து
பெண்கள் தொடர்பான வன்முறை வடிவங்களை வகைப்படுத்தி தமிழ்ச் சமூகத்தினரிடம் விழிப்புணர்வினை ஏற்படுத்துவதை இவ்
ஆய்வு மையப்படுத்தியுள்ளது. பெண்கள் மீதான வன்முறை சார்ந்த 142 பத்திரிகைச் செய்திகளைக் கொண்டு முதல் நிலை உள்ளடக்கப்
பகுப்பாய்வில் 111 விளக்கக் குறியீடுகளும் இரண்டாம்நிலை பகுப்பாய்வில் 48 நடுஊடு வகையான குறியீடுகளும் இறுதியாக 14
விதமான வன்முறை வடிவங்களும் அடையாளம் காணப்பட்டுள்ளன. இவ் வன்முறை வடிவங்களானவன உறவுகள் காணாமல்
ஆக்கப்படுதல், பாலியல் வன்கொடுமை, கொலை செய்தல், பாலியல் துஷ்பிரயோகம், கடத்தல், கற்பழிப்பு, தவறான வீடியோ
பதிவுகள் செய்தல், சமூக வலைத்தளங்களினூடாக ஏமாற்றுதல், கொள்ளையடித்தல், துன்புறுத்தல், சொத்துக்களை மிரட்டிப் பறித்தல்,
பாலியல் இலஞ்சம், கர்ப்பிணி நிலையில் தாக்குதல்கள், பிறப்புறுப்புப்சிதைப்பு என்பனவாகும். இவ் வன்முறைகள் காரணமாக உடல்
மற்றும் உள ரீதியாக பாதிக்கப்பட்ட பெண்களுக்கு சட்ட ரீதியான நீதியான நியாயங்களை வழங்குவதற்கும், உளவியல் ஆதரவுகளை
வழங்கவும் இவ் ஆய்வானது பரிந்துரை செய்கின்றது.