Abstract:
ஈழநாட்டு இந்துக்களது சமயமும் சரி, தத்துவமும் சரி, இந்திய சமயத் தத்துவப் பாரம்பரியத்துடன் நீண்டகாலத் தொடர்புடையதாகவே வளர்ந்து வந்துள்ளது. அறுவகை இந்து தரிசனங்கட்குப்பின் இறுதியாக வைத்தெண்ணப்படும் சைவசித்தாந்தாந்தம் 'தென்னாட்டுச் சித்தாந்தம்', எனச் சிறப்பிக்கப்படும். தென்னிந்தியாவிற்கும் ஈழத்திற்குமுள்ள புராதன காலத் தொடர்புகளின் பயனாக ஈழத்தறிஞர் பலரும் தென்னாடு சென்று தமது தமிழ்ப்புலமை, சமயப்புலமை என்பவற்றை வளர்த்துக்கொண்ட தோடு தத்துவக் கோட்பாடுகளில் சிறந்த பயிற்சியாளராகவும் விளங் கினர். ஏனைய தரிசனங்களைவிட சைவசித்தாந்தத்துடன் ஈழத்தறிஞர்களது நெருக்கமான தொடர் பினதும், பயிற்சியினதும் காரணமாக ஈழத்திலும் சித்தாந்தம் முழுமுதற் கோட்பாடுடைய ஒரு தத்துவமாக வளர்க்கப்பட லாயிற்று. நாவலரும் வைதிக சைவ நெறியில் தலைசிறந்து விளங்கியமை யினால் சைவசித்தாந்தம் அவரது உயர்வான தத்துவக்கோட்பாடாயிற்று.
சைவசித்தாந்த மரபினை சாஸ்திரக்கோட்பாட்டு முறையிலே முதன் முதல் ஈழத்திலே ஆரம்பித்துவைத்த பெருமை 17ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த திருநெல்வேலி கமலை ஞானப்பிரகாசரைச் சாரும் {1625-1658). மெய் கண்டசாஸ்திரங்களில் ஒன்றான சிவஞானசித்தியார் பரபக்கத்திற்கு உரை செய்த அறுவருள் ஞானப்பிரகாசரும் ஒருவராவர். இது 'அறுவர் உரை' என்ற பெயரிலே வழங்குகின்றது. 1 இவ்வாறு ஞானப்பிரகாசர் தொடக்கி வைத்த சைவசித்தாந்த மரபானது ஈழத்திலே நாவலர் காலத்தில் நன்கு வேரூன்றியுள்ளது. இத்தகைய ஞானப்பிரகாசர் மரபிலேதான் நாவலரும் தோன்றினார்.2 நாவலர் தம்முடைய நூல்கள் சிலவற்றிலே ஞானப்பிர காசர் பற்றிய சில செய்திகளையும் தந்துள்ளார். ' 'சிதம்பரத்திலே ஞானப் பிரகாசம் என்னும் திருக்குளம் செய்வித்தவரும், சமஸ்கிருதத்திலே பௌஷ்கராமவிருத்தி, சிவஞானபோதவிருத்தி, சித்தாந்தசிகாமணி, பிரா மண தீபிகை, பிரசாததீபிகை, சிவயோகசாரம், சிவயோகரத்னம் என்பவை களையும், சிவஞானசித்தியாருக்கு ஓர் உரையை இயற்றியவரும் திரு வண்ணாமலை ஆதீனத் தம்பிரான்களுள் பலருக்குச் சைவாகம உபதேசம் செய்வித்தவருமான ஸ்ரீஞானப்பிரகாச முனிவர் யாழ்ப்பாணத்தவர்'' என நாவலர் தமது ' நல்லறிவுச் சுடர் கொளுத்தல்' என்னும் பிரசுரத்தில் கூறியிருப்பது கவனிக்கத்தக்கது.