Abstract:
பொருளாதார நோக்கம் கருதி மலாயாவிற்குக் குடிபெயர்ந்த யாழ்ப் பாணத்தவர் அரசியல் நடவடிக்கைகளில் அதிக ஆர்வம் காட்டாது காணப் பட்டனர். ஆனால் இந்நிலை மையானது மலாயாவில் ஏற்பட்ட பொருளா தார மந்தத்தை அடுத்தும் அரசாங்கத் தொழில்களிலிருந்து யாழ்ப்பாணத் தவரை நீக்கியதைத் தொடர்ந்தும் ஓரளவிற்கு மாற்றமடையலாயிற்று. எப்படியிருந்தாலும் இந்தியருடனோ , சீனருடனோ ஒப்பிடக்கூடிய அளவில் இவர்களது அரசியல் நடவடிக்கைகள் காணப்படவில்லை. யாழ்ப்பாணத் தவர் குடித்தொகை மற்றைய இனத்தவருடன் ஒப்பிடுகையில் மிகக் குறை வாகக் காணப்பட்டதால் ஓர் அரசியல் இயக்கமாக, மலாய அரசியலில் பாதிப்பை ஏற்படுத்துமளவிற்கு முக்கியத்துவமானதாக யாழ்ப்பாணத்தவர் நடவடிக்கைகள் காணப்படவில்லை. தம் பொருளாதாரத் தேவைகளை வளம்படுத்தும் நோக்குடன் மலாயாவுக்குச் சென்ற யாழ்ப்பாணத்தவர் அங்கு அரசியல் நடவடிக்கைகளில் ஈடுபட்டுத் தம் நோக்கத்தை வீணாக்க விரும்பவில்லை. அதன் காரணமாகப் பிரித்தானிய ஆட்சியாளர்களுடன் இணைந்தவர்களாக, அவர்கள் பாதுகாப்பை வேண்டியவர்களாகச் செயற் பட்டனர். பிரித்தானிய ஆட்சி எவ்வளவு காலம் மலாயாவில் நீடிக்குமோ அவ்வளவுக்குத் தாம் உழைத்துப் பொருள் திரட்டலாம் என்ற நம்பிக்கை கொண்டவர்களாகக் காணப்பட்டனர். பல இனங்கள் வாழும் மலாயா வில் சிறுபான்மையினரில் ஒரு சிறு பகுதியினராக விளங்கிய இவர்கள் பிரித்தானிய ஆட்சியாளரிடமிருந்து ஆட்சியுறுதியையும், நீதியையும் எதிர் பார்த்தவராக விளங்கினர். இதனால் பிரித்தானியர் ஆட்சியை எதிர்க்கும் அல்லது அகற்றும் தன்மை கொண்டவர்களாகக் காணப்படாததுடன் வளர்ந்து கொண்டுவந்த மலாயத் தேசியத்துள் தம்மைச் சேர்க்காதவராக வும் இருந்தனர். இக் காரணங்களினால் தம் நலன் கருதி மலாயாவில் பிரித்தானியர் ஆட்சிக்கு ஆதரவு, விசுவாசம் காட்டியவர்களாகவும் இயங்கினர். இதனை மலாயாவில் யாழ்ப்பாணத்தவர் மேற்கொண்டிருந்த நடவடிக்கைகள் பலவற்றிலிருந்து அறிந்து கொள்ளலாம். மலாயாவை ஜப்பானியர் கைப்பற்றிய பின்னரும் யாழ்ப்பாணத்தவரில் பெருமள வினோர் பிரித்தானிய ஆட்சியின் ஆதரவாளர்களாகவே விளங்கினர்.