Abstract:
அம்பிடு' என்னும் வினைச் சொல் யாழ்ப்பாணத்துப் பேச்சு வழக்கில் வழங்கக் காண்கிறோம். 'அகப்படு' என்னும் வினைச் சொல் இலக்கிய வழக்கில் வழங்கக் காண்கின்றோம். இவ்விரு சொற்களும் ஒரே பொரு ளைக் குறிப்பன.
சில சொற்கள் தோற்றத்திலே தொடர்பு உள்ளவை. 'அம்பிடு', 'அகப்படு' ஆகிய இரு சொற்களுக்கும் ஏதேனும் தொடர்பு உண்டா ? இரு வடிவங்களினதும் ஒலிகளையும் பொருளையும் நோக்குமிடத்து இவற் றைத் தொடர்பற்ற தனித்தனித் தோற்றங்கள் எனக் கொள்வதைவிட ஒன்றில் இருந்து மற்றது தோன்றியது எனக் கொள்வதே பொருத்தமாகத் தோன்றுகிறது. இவ்வாறு ஒன்றில் இருந்து மற்றது தோன்றியது எனக் கொள்ளுமிடத்து ஏதோ ஒன்றைக் காலத்தால் முந்தியதாகக் கொள்ளுதல் வேண்டும். அது எது? அது எவ்வாறு? என ஆராய்வதே இக்குறிப்பின் நோக்கமாகும்.
இலக்கியத்திலே வரும் சொற்கள் தாம் காலத்தால் முந்தியவை என் னும் ஒரு நம்பிக்கையைப் பொதுவாக அறிஞர் பலரிடம் காண்கின்றோம். இதனை எற்றுக் கொண்டால் 'அகப்படு' என்பதையே காலத்தால் முந்திய தாகக் கொள்ளவேண்டும். ஆயின் அவ்வாறு இங்கு கொள்ள முடியவில்லை. 'அம்பிடு' என இன்று பேச்சு வழக்கில் உள்ள வடிவத்தின் ஒரு முந்திய தோற்றத்தையே காலத்தால் முற்பட்டது எனக் கொள்வது பொருத்த மானது போலத் தோன்றுகிறது.