Abstract:
கல்வியை வழங்குவதில் பாடசாலைகள் காத்திரமான பங்கினை வகிக்கின்றன. பாடசாலைகள் தமது பணியினை நிறைவேற்ற கல்விசார் வளங்கள் அவசியமாகும். தென்மராட்சிக் கல்வி வலயப் பாடசாலைகளின் பெளதிகவளங்களின் கிடைப்பனவு, பெளதிக வளங்களின் பயன்பாட்டு நிலை, ஆளணிவளக் கிடைப்பனவு என்பனவற்றினைத் தீர்மானிக்கும் காரணிகளில் அதிக ஆதிக்கம் செலுத்தும் காரணியினை அறிவதாகவும் அதிபரின் செயற்பாடுகள் மற்றும் வலயக் கல்விப் பணிமனையின் வழிகாட்டல் என்பன பௌதிக வளக் கிடைப்பனவுடன் எவ்வகையான தொடர்புடைமையைக் காட்டுகின்றன என்பது பற்றியதாக இவ்வாய்வு அமைகின்றது. தென்மராட்சிக் கல்வி வலயத்தில் IAB, IC, வகை II பாடசாலைகள் யாவும் கருதப்பட்டு குறுக்குவெட்டுப் பரப்பளவாய்வாக இவ்வாய்வு அமைகின்றது. வினாக் கொத்துக்கள், நேர்காணல்கள், அவதானிப்புகள் மூலம் தரவுகள் சேகரிக்கப்பட்டு வகைப்பிரிப்புச் செய்யப்பட்டு SPSS மென்பொருள் மூலம் பகுப்பாய்வு செய்யப்படுகின்றது. பகுப்பாய்வுக் கருவியாக காரணிப் பகுப்பாய்வு, பல்தரப் பிற்செலவு முறைகள் கைக்கொள்ளப்படுகின்றன. அதிபர் சார் தரவுகளை ஆய்வு செய்ததன் பேரில் அரச சார்பற்ற நிறுவனங்களின் பங்களிப்பானது அதிகளவில் ஆதிக்கம் செலுத்தும் காரணியாகக் காணப்படுகின்றது. ஆசிரியர் சார் தரவுகளின் அடிப்படையில் ஆசிரியரது செயற்பாடுகள், வளக்கிடைப்பனவு, வளப்பயன்பாட்டில் காத்திரமான தாக்கத்தினை ஏற்படுத்துவதாக உள்ளது. அதிபர்களது செயற்பாடுகளுக்கும், பெளதிக வளக் கிடைப்பனவிற்குமிடையில் பொருண்மையான தொடர்பு அவதானிக்கப்பட்டுள்ளது. வலயக். கல்விப் பணிமனையின் வழிகாட்டலுக்கும், பெளதிக வளக் கிடைப்பனவிற்குமிடையில் பொருண் மையான தொடர்பு காணப்படவில்லை. இதனை அடிப்படையாகக் கொண்டு என்னென்ன காரணிகளை எந்தளவிற்கு உயர்த்த வேண்டும் என்ற விதத்தில் ஆய்வுப் பிரதேசத்தில் சீராக்கங்கள் மேற்கொள்ளப்படலாம்.