Abstract:
ஒப்பியல் இலக்கியம் பத்தொன்பதாம் நூற்றாண்டு முதற்கொண்டு தனக்கெனத் தனித்துவமான கோட்பாடுகள் மற்றும் முறையியல்களுடன் வளர்ச்சி பெற்று வருகின்றது. சமகாலத் தேவைகள், எதிர்பார்ப்புகள், நோக்கங்களுடன் ஒப்பியல் இலக்கியத்தினை இற்றைப்படுத்துவதற்கான முக்கிய ஆய்வுகளும் அவ்வப்போது நிகழ்ந்து வந்துள்ளன. இவற்றின் வழி ஒப்பிலக்கியக் கோட்பாடுகளில் மாற்றங்களும், சேர்க்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வந்துள்ளன புதிய கோட்பாடுகளும் அவ்வப்போது அறிமுகம் செய்யப்பட்டுமுள்ளன. இம்மாற்றங்கள், வளர்ச்சிகள், புதிய அறிமுகங்களுக்குப் பின்னால் அக்காலகட்ட சமூக, பண்பாட்டுச் சூழல்கள் மற்றும் ஒப்பியல் இலக்கியக் கோட்பாட்டாளர்களின் நுண் அரசியல் என்பன செல்வாக்குச் செலுத்தி வந்துள்ளதை மறுத்தலியலாது. இலக்கியம் பற்றிய ஆய்வுப் புலங்கள் யாவற்றிலும் இத்தகைய தாக்கங்களை அவதானிக்க முடிந்தாலும் ஒப்பியல் இலக்கியத்தில் இதுகுறித்து அதிக சிரத்தை எடுக்கப்பட்டு வந்தமைக்கு , அது இருவேறு மொழி மற்றும் பண்பாட்டுச் சூழலுக்கிடையில் இடைவினையினை மேற்கொள்வதே காரணமாகும். இதுவரை பத்தொன்பதாம் நூற்றாண்டிலும் இருபதாம் நூற் றாண்டிலும் வளர்ச்சி பெற்ற ஒப்பியல் ஆய்வுக் கருதுகோள்கள், கோட்பாடுகள், முறையியல்கள் அடிப்படையிலேயே ஆய்வுகள் நிகழ்த்தப்பட்டு வந்துள்ளன. இந்நிலையில் இருபத்தோராம் நூ ற்றாண்டில் ஒப்பியல் இலக்கியத்தின் போக்கு அதற்கான கோட்பாடுகள் எவ்வாறு அமைய வேண்டும் என்று சிந்திப்பது அவசியமாகின்றது. பின் காலனித்துவம், கீழைத்தேயவியல், ஆபிரிக்க இலக்கிய எழுச்சி, சீன ஒப்பிலக்கிய ஆய்வுகளின் பெருக்கம் என்பன ஒப்பியல் இலக்கியத்தின் புதிய வழிகள் எவ்வாறு அமைதல் வேண்டும் என்பதை அடையாளப்படுத்தியுள்ளன. இவற்றின் வழி ஒப்பியல் இலக்கியத்தின் எதிர்காலம் குறித்த கருத்துக்களை முன்வைப்பதே இவ்வாய்வின் நோக்கமாக அமைகின்றது. இதன் மூலம் பண்பாட்டு அடையாளங்களைச் சிதைக்காத வகையிலும், மொழித் தனித்துவங்களைப் பேணத்தக்கதாகவும் அதேநேரத்தில் உலக இலக்கியத் தரத்துக்கு ஏற்றவகையிலான படைப்பாளுமை வளர்த்தெடுக்கும், எதிர்கால ஒப்பியல் இலக்கிய ஆய்வுகளின் திசைவழி குறித்த தெளிவினைப் பெற்றுக் கொள்ள முடியும்.