Abstract:
இலங்கை சுதந்திரம் அடைந்த காலத்திலிருந்து சீனாவுடன் சமாதான சகவாழ்வு தத்துவத்தினடிப்படையில் பரஸ்பர உறவினை வளர்த்து வந்தாலும், 1957 ஆம் ஆண்டு தொடக்கம் இராஜதந்திர உறவினை வளர்த்து வருகிறது. இலங்கைக்கும் சீனாவிற்கும் இடையிலான இராஜதந்திர உறவு ஆரம்பிக்கப்பட்டு (1957- 2017) அறுபது வருடம் நிறைவடைகிறது.சீனக்குடியரசு மக்கள் சீனக்குடியரசாக மறுஅவதாரம் எடுத்த காலத்தில் அதனை இலங்கை அங்கீகரித்துக் கொண்டதுடன், நிலைத்திருக்கும் அபிவிருத்திக்காக இரண்டு நாடுகளும் இணைந்து பணியாற்றி வந்துள்ளன. சிறிய பெரிய நாடுகள் பரஸ்பரச் சமத்துவம், நட்புறவு, பரஸ்பர நன்மைக்கான கூட்டுறவு என்பவற்றை நூற்றாண்டு கடந்து மதித்துப் பேணிவருவதற்கு இரு நாடுகளும் சிறந்த உதாரணமாகும். கடந்த அறுபது வருடங்களில் இரு நாடுகளுக்கும் இடையிலான உறவு சர்வதேச அதிகார ஒழுங்கு மாற்றத்திற்கு ஈடுகொடுத்து உறுதியாகவும், ஆரோக்கியமாகவும் நிலைத்திருக்கிறது. முப்பது வருடங்களாக நடைபெற்ற உள்நாட்டு யுத்தத்தில் 2009 ஆம் ஆண்டு இலங்கை வெற்றிபெறுவதற்குச் சர்வதேச நாடுகளுடன் இணைந்து சீனா பலமான உதவிகளை வழங்கியது. உள்நாட்டுயுத்தத்திற்குப் பின்னர் தேசக்கட்டுமானத்திற்காகக்குறைந்த வட்டியிலான நீண்டகாலக் கடன்கள், முதலீடுகளை இலங்கைக்குச் சீனா வழங்கி வருகிறது. தொடர் உள்கட்டுமானத் திட்டங்களான நுரைச்சோலை நிலக்கரி மின்நிலையம், கொழும்புத் துறைமுக புதிய கொள்கலன்களைக் கையாளும் மையம், கொழும்பு பண்டாரநாயக்கா சர்வதேச விமான நிலைய அதிவேக நெடுஞ்சாலை, ஹம்பாந்தோட்டைத் துறைமுக மேம்படுத்தல், தெற்கு அதிவேக நெடுஞ்சாலை போன்றன இலங்கையின் சிதைவடைந்த பொருளாதாரத்தை மீண்டும் கட்டியெழுப்பச் சீனா வழங்கிய உதவிகளுக்கான சில உதாரணங்களாகும். இரண்டு நாடுகளும் இணைந்து கொழும்புத் துறைமுக நகரக் கட்டமைப்பினை உருவாக்கி வருகின்றன. கைத்தொழில்மையமாக இலங்கையினை புதிப்பிப்பதற்குச் சீனா ஆழமானதொரு அத்திவாரத்தை இட்டுள்ளது. இரண்டு நாடுகளுக்கும் வெற்றி என்னும் கோட்பாட்டினடிப்படையில் கடந்த பல வருடங்களாக சீனா முன்னெடுத்துவரும் பட்டுவீதிப் பொருளாதாரக் கட்டமைப்பிற்கு இலங்கை தனது முழுமையான ஆதரவினை வழங்கி வருகிறது. இருபத்தியொராம் நூற்றாண்டில் சீனாவினை மையப்படுத்திய உலகப் பொருளாதாரச் செயற்பாடுகளுக்குப் பொருத்தமான பட்டுவீதிப் பொருளாதராத் திட்டத்திற்கு இலங்கை வழங்கும் ஆதரவு இருநாடுகளுக்குமிடையிலான தந்திரோபாயக் கூட்டுப் பங்காளர் உறவிற்கும், இலங்கையின் பொருளாதார அபிவிருத்திக்கும் ஏற்ற எதிர்காலத்தைக் கோடிட்டுக் காட்டுகிறது.