Abstract:
இலங்கையின் பொருளாதார கட்டமைப்பில் விவசாயம் முக்கிய இடம் பெறுகின்றது. விவசாயம் உள்நாட்டு விவசாயம், பெருந்தோட்ட விவசாயம் எனும் இரண்டு வகையாகக் பாகுபடுத்தப்பட்டுள்ளது. அந்த வகையில் உள்நாட்டு விவசாயத்தில் நெற்செய்கை பிரதான இடம் வகிக்கின்றது. இன்று இலங்கையின் அனைத்து மாவட்டங்களிலும் நெல் உற்பத்தி மேற்கொள்ளப்பட்டு சந்தைப்படுத்தப்படுகின்றது. நெல் உற்பத்தி சந்தைப்பருத்தல் தொடர்பாக பல்வேறுபட்ட ஆய்வுகள் காலந்தோறும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்த வகையில் மாமருகிராமத்தின் நெல் உற்பத்தி முறைகளையும், சந்தைப்படுத்தல் உத்திகளையும் நெல் உற்பத்தி மற்றும் சந்தைப்படுத்தலுக்கான தடைகளையும் கண்டறிந்து இத்தடைகளுக்கான தீர்வினை முன்வைப்பதே இவ் ஆய்வின் நோக்கமாகும். இவ்வாய்வுமுதலாம், இரண்டாம் நிலைத்தரவுகளைப் பயன்படுத்தி விபரணப்புள்ளிவிபரவியல் அடிப்படையில் பகுப்பாய்வு செய்யப்பட்டுள்ளது. இதன்படி ஆய்வுப்பிரதேசத்தில் விவசாயிகளின் பிரதான பயிர்ச்செய்கையாகநெற்செய்கை காணப்படுகிறது. நெற்செய்கை மூலமே மக்கள் அதிகளவு வருமானத்தைக் பெற்றுக்கொள்கின்றனர். இங்கு நெல் உற்பத்தி அதிகரிக்கும் போது விவசாயிகளின் வருமானமும் அதிகரிக்கின்றது. அத்துடன் உற்பத்தி செய்யப்படுகின்ற நெல்லினை விவசாயிகள் அதிகளவு தனியாரிடமே சந்தைப்படுத்துகின்றனர். உற்பத்தி ரீதியாக நீர் ஓரளவு போதுமானதாகக் காணப்படுகின்ற போதும் நிலம், கூலி, கடன் , மூலதனம், உயர்ந்தரக நெல்லினம் தொழில்நுட்ப பயன்பாடு போன்ற உற்பத்தி சார்ந்த பிரச்சினைகளும் விலைத்தளம்பல் போக்குவரத்துப் பிரச்சினை, களஞ்சியப்படுத்தல் வசதியின்மை, அரசாங்க துறையின் திருப்திகரமற்ற செயற்பாடு போன்ற சந்தைப்படுத்தல் பிரச்சினைகளும் இவ் ஆய்வின் மூலம் இனங்காணப்பட்டுள்ளன. இவற்றிற்கான தீர்வாக்குறுகிய காலத்தில் அதிகளவு விளைச்சலைத் தரக்கூடிய நெல் இனங்களை அறிமுகப்படுத்துவதுடன் நெல்லிற்கான உத்தரவாத விலைத்திட்டத்தினை சரியான முறையில் நடைமுறைப்படுத்தி விவசாயிகளின் வருமானத்தினை உறுதிப்படுத்தக் கூடிய நடவடிக்கைகளையும் சட்ட ரீதியாக மேற்கொள்ளுதல், நவீன இயந்திர சாதனங்களின் பயன்பாட்டினை அதிகரித்தல் போன்ற செயற்பாடுகளின் மூலம் இப்பிரதேசத்தின் நெல் உற்பத்தி, சந்தைப்படுத்தல் நடவடிக்கைகளை முன்னேற்ற முடியும்.