Abstract:
சங்கப் புலவர்கள் படைப்புநிலை உத்திகளில் ஒன்றாகப் பல்வேறு வயைான கருத்தாடல் கூறுகளைப் பிரக்ஞை பூர்வமாகக் கையாண்டுள்ளனர். கருத்தாடல்' (Discourse) என்பது ஒரு நடத்தை அலகாக உள்ளது. கருத்தாடல் மொழி அமைப்பையும், மொழிப் பயன்பாட்டையும் அடிப்படையாகக் கொண்டு இயங்குகின்றது. கருத்தாடலை அதன் வடிவத்தின் அடிப்படையில் செய்யுள் அல்லது கவிதை என்றும் உரைநடை என்றும் பாகுபடுத்தி நோக்கலாம். சங்க இலக்கியங்களான எட்டுத்தொகை, பத்துப்பாட்டு நூல்கள் எழுத்து வடிவக் கருத்தாடலுக்குள் அமைபவை. இக் கருத்தாடலில் சீர், தளை, தொடை, அணி போன்ற நடைகூறுகள் முதன்மை பெற்றிருக்கும். இதில், எழுதுதல், எழுத்தினூடாக கருத்தை வெளிப்படுத்தும் திறன், வாசித்துணரும் திறன், வாசித்தல் ஆகியவை முக்கியத்துவம் பெறும். மொழியியல் புலமானது கருத்தாடலை மொழியின் ஒரு அலகாகப் (A Unit of Language) பார்க்கிறது. இந்த அலகுகள் சொற்கள் ஓர் ஒழுங்கமைப்புக்குள் வரும்போது கருத்தாடல் வெற்றி பெறுகின்றது. சங்கப் புலவர்கள் குறிப்பாக குறிஞ்சித் திணைப் பாடல்களைப் பாடிய புலவர்கள் கருத்தைப் புலப்படுத்தும் வகையில் பக்தி இணைப்பான்கள் (Paragraph connection) முதல் கேட்போர் (Revevers) முதலான பல்வேறு வகையான கருத்தாடற்கூறுகளைத் திட்டமிட்டுத்தமது பாடல்களில் பயன்படுத்தியிருக்கிறார்கள். இக்கூற்றுக்களைப் பகுத்தாராயும்போது சங்கப்புலவர்களின் படைப்பு ஆளுமைத்திறனை நாம் தெளிவாகக் கண்டுணரமுடியும்.