Abstract:
நூலகங்கள் நல்ல முறையில் சேவை புரிய வேண்டுமானால் அங்கு சேகரிக்கப்படும் ஆவணங்கள் யாவும் பயனுடையவகையிலும் நிரந்தரமாகவும் புத்தகத் தட்டுக்களிலே ஒழுங்கமைக்கப்பட வேண்டியது இன்றியமையாதது. சரியான முறையில் ஒழுங்கமைப்பதன் மூலம் மாத்திரமே நூல்களை எளிதில் இனங்கண்டு பயன்படுத்திக்கொள்ள முடியும். நூலகங்களின் இத்தகைய ஒழுங்கமைப்புச் செயற்பாட்டிற்கு அடிப்படையாக உள்ளவை நூலகப்பகுப்பாக்க மற்றும் பட்டியலாக்க விதிமுறைகள் ஆகும். இதற்கான கருவிநூல்களாக தயிதசமப் பகுப்பாக்கம், ஆங்கில அமெரிக்கப் பட்டியலாக்கம் ஆகியவை இரண்டும் இலங்கையின் நூலகங்களிலே அதிகளவாகப் பயன்ப டுத்தப்படுகின்றன. இவ்விதிமுறைகள் மேனாட்டார் சிந்தனையில் உதித்து உருக்கொண்டவை ஆகும். இவை கீழைத்தேய பழந்தமிழ் நூல்களை ஒழுங்கமைத்துக்கொள்வது தொடர்பான விதிமுறைகளை நுணுக்கமாக உருவாக்குவதில் பெரிதும் சிரத்தை கொள்ளவில்லை. சங்க மற்றும் சங்கமருவிய காலத்தமிழ் இலக்கியங்கள் தமிழ்மொழியின் செந்நெறி இலக்கியங்களாக விதந்துரைக்கப்படுகின்றன. இவை தமிழ் மரபிற்கேயுரிய தனித்துவம் வாய்ந்த இலக்கியத் தொகுதிகள் ஆகும். இந்நூல்கள் எமது பிரதேசத்திலேயே அதிகளவில் பயன்படுத்தப்படுகின்றன. இதனால் இவை நூலகங்களிலே அதிக எண்ணிக்கையில் சேகரிக்கப்படுகின்றன. ஏனைய பிரதேசங்களிலிருந்தும் இத்தகைய நூல்களைத்தேடி வாசகர் எமது பிரதேச நூலகங்களுக்கே வருகை தருகின்றனர். எனவே இவற்றைக் கருத்துள்ள வகையில் நுணுக்கமாக ஒழுங்கமைத்துப் பாதுகாக்க வேண்டிய பாரிய கடமைப்பாடு எமது பிரதேச நூலகவியலாளர்களுக்கு உண்டு. பிரதேச வெளியீடுகளை ஒழுங்கமைக்கக் கூடிய அங்கீகரிக்கப்பட்ட நியமங்கள் இதுவரை காணப்படவில்லை. இதனால் மேனாட்டாரது விதிமுறைகள் இதற்காகப் பயன்படுத்தப்படுகின்றன. தூயிதசமப் பகுப்பாக்கம் இலக்கிய நூல்களுக்கான ஒழுங்கமைப்பைப் பற்றிக் குறிப்பிடும் போது உலகின் முதன்மை மொழிகளிலமைந்த இலக்கியங்களான ஆங்கில, ஜெர்மனிய, பிரான்சிய, இத்தாலிய, ஸ்பானிய, இலத்தீன் மற்றும் கிரேக்க, இலக்கியங்களை ஒழுங்குபடுத்துவதற்காக வழங்கப்பட்டுள்ள அறிவுறுத்தல்களைப் பின்பற்றுமாறு குறிப்பிடப் பிடுகின்றது. அந்த அறிவுறுத்தல்களைச் செவ்வனே பழந்தமிழ் இலக்கியங்களுடன் பொ ருந்திப்பார்த்து ஒழுங்கமைக்கும் போது, நடைமுறையில் சில ஒவ்வாத தன்மைகள் உணரப்படுகின்றன. பழந்தமிழ் இலக்கியங்களுள் ஒன்றான திருமுருகாற்றுப்படை சங்க இலக்கியப் பத்துப்பாட்டு நூல்களுள் முதலாவது நூலக வகையீடு செய்யப்பட்டுள்ளது. இதனைத் தூயிதசமப் பகுப்பாக்கத்தின் துணை அட்டவணை (3 - A) குறிப்பிடும் உருவகப் பிரிவுகளின்படி தமிழ்க்கவிதை நூலாக ஒழுங்கமைத்துக் கொள்ளலாம். அல்லது திருமுருகாற்றுப்படை கூறும் உட்பொருளை அடிப்படையாகக் கொண்டு அறுவகைச் சமய நெறிகளுள் ஒன்றாகக் கருதி கௌமாரம் பற்றிக் கூறும் நூல்களுடனும் ஒழுங்கமைத்துக்கொள்ளலாம். இவ்வாறே பதினெண் கீழ்க்கணக்கு நூலாகிய திருக்குறள் தமிழ்க்கவிதை என்பதனுள் ஒழுங்கமைக்கப்படலாம் அல்லது நீதிநூல் என்னும் வகையால் தூயிதசமப் பகுப்பாக்கம் குறப்பிடும் ஒழுக்கவியல் என்ற பாடத்துறைக்குள் ஒழுங்கமைக்கப்படலாம். இவ்வாறான சூழ்நிலையில் எட்டுத்தொகை, பத்துப்பாட்டு பதினெண்மேற்கணக்கு பதினெண்கீழ்க்கணக்கு என்ற பழந்தமிழ் இலக்கியத்தொகுதிகளைக் குறிப்பிடும் மரபுவழிபட்ட சொற்றொடர்களைச் சீரமைவுத் தலையங்கங்களாக உபயோகித்து வேறுபட்ட உட்பொருள்களைக் கொண்ட நூல்களை ஒரே பாடத்துறைக்குள் ஒரு தொகுதியாக ஒழுங்குபடுத்துவது பொருத்தமானதா? என்பதில் தெளிவின்மை காணப்படுகின்றது.