Abstract:
சமநீதி, சமத்துவம், சமவாய்ப்பு, நல்லிணக்கம், பொறுப்புக்கூறுதல், குற்றம் இழைத்தவர் களுக்குத் தண்டனை வழங்குதல் என்பவைகளை உறுதிப்படுத்துதல் இலங்கை அரசாங்கத்தின் சட்டபூர்வக் கடமையாகும். இலங்கையில் தேசிய நல்லிணக்கத்தினை உருவாக்குதல் மற்றும் பொறுப்புக்கூறுதல் போன்றன தொடர்பாகக் கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் சிபார்சுகள் மிகவும் காத்திரமான பல அம்சங்களைக் கொண்டிருந்தாலும், தேசியச் செயற்பாட்டுத் திட்டத்தினூடாகச் சிலரிபார்சுகளை மட்டும் நடைமுறைப்படுத்த இலங்கை அரசாங்கம் நடவடிக்கை எடுத்திருந்தது. கற்றுக் கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் சிபார்சுகள் உள்நாட்டு யுத்தத்தில் நிகழ்ந்த சர்வதேச மனித உரிமை மற்றும் மனிதாபிமானச் சட்ட மீறல் செயற்பாடுகளை விசாரணை செய்வதற்குப் பொருத்தமானதல்ல என்பது ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் தீர்மானமாகும். எனவே, இதற்கான தொழில்நுட்ப உதவியை வழங்க ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவை விருப்பம் தெரிவித்திருந்தது. நல்லிணக்கத்தினை உருவாக்க உண்மையைக் கண்டறியும் பொறிமுறையை உருவாக்க வேண்டும் என்பது ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் தீர்மானமாக இருந்தது. ஆனால் இதனை நிறைவேற்றுவதில் இலங்கை தோல்வியடைந்ததால், உள்நாட்டு யுத்தத்தில் சர்வதேச மனித உரிமைகள் மற்றும் மனிதாபிமானச் சட்டங்கள் மீறப்பட்டதனை விசாரிப்பதற்காகச் சுதந்திரமானதும் நம்பகத்தன்மையானதுமான சர்வதேச விசாரணை நடைபெற வேண்டும் என்ற தீர்மானத்தினை ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவை நிறைவேற்றியது. காணாமல் போனவர்கள் மற்றும் நீதிக்குப் புறம்பான கொலைகள் தொடர்பான நம்பகத்தன்மையான விசாரணை, அதிகாரப் பகிர்வு மூலமான அரசியல் தீர்வு, சுதந்திரமான சிவில் நிறுவனங்களைப் பலப்படுத்துதல், சட்ட ஆட்சியை நிறுவுதல் போன்றவைகளுடாகச் சாமந்தியை வழங்குவதில் இலங்கை இதுவரை தோல்வியடைந்துள்ளது. பொறுப்புக்கூறுதல், தண்டனை பெறுதல் ஆகிய இரண்டினையும் தவிர்த்து நல்லிணக்கம் தொடர்பாகப் பேசுவதையே இலங்கை விரும்புகின்றது.