dc.description.abstract |
சங்ககால இலக்கியங்கள் தமிழின் செம்மொழி
அந்தஸ்துக்கு கட்டியம் கூறிய பெருமைக்குரியன. இந்த சங்க
இலக்கியங்கள் பற்றிய பல ஆய்வுகள் பலவிதங்களில் பல பார்வைகளில்
மேற்கொள்ளப்பட்டுள்ளன. அவை சான்றோர் இலக்கியங்கள் எனவும்
தமிழர் தமது நாகரிகத்தின் உச்சக் காலத்தில் எழுந்தவை எனவும் கொண்டு
ஒரு சாரார் ஆய்வு நடத்தினர். தொல்காப்பிய பொருளிலக்கணத்துக்கும்
சங்ககால நூல்களுக்குமிடையே உள்ள தொடர்பை இலக்கியம் கண்டதற்கு
இலக்கணம் இயம்பல் என்ற அடிப்படையில் வைத்தும் ஆராய்ந்தனர்.
மற்றுமொரு பிரிவினர் தொல்காப்பிய தரவுகளையும் சங்க இலக்கியத்
தரவுகளையும் ஒப்பிட்டும் வேறுபடுத்தியும் அவை சுட்டும் சமூகவியல்
காரணிகளின் அடிப்படையில் தமது இலக்கிய ஆய்வை நடத்தினர். இவற்றில்
எல்லாம் ஈழத்துத் தமிழ் அறிஞர்களின் வகிபாகம் கவனத்துக்குரியது ஆகும்.
இலங்கையைப் பொறுத்தவரையில் சங்க இலக்கியங்களைக் கற்றும்
கற்பித்தும் உரைவிளக்கம் தந்தும் பதிப்பித்தும் வந்ததன் பயனாகவே
தமிழரின் வரலாறு, பண்பாடு, சமூகவாழ்வு என்பவற்றைத் தேடுகின்ற
ஆய்வுப்புலம் உதயமாகியது எனலாம். மல்லாகம் வி.கனகசபைப்பிள்ளை,
பேராசிரியர்களான சுவாமி விபுலானந்தர், சு.வித்தியானந்தன்,
க.கைலாசபதி, கா.சிவத்தம்பி, அம்மன்கிளி முருகதாஸ் மற்றும் கலாநிதி
மனோன்மணி சண்முகதாஸ் என்று சங்க இலக்கிய ஆய்வுப்புலத்தில்
ஈடுபட்டவர்களை வரிசைப்படுத்தலாம். இவர்களில் தொடக்கமும்
முதன்மையும் ஆழமும் மிக்க சங்க இலக்கிய ஆய்வைத் தன்னுடைய
'தமிழர் சால்பு' நூலுக்கு ஊடாக அறுபது ஆண்டுகளுக்கு முன்னரே
வெளிக்கொணர்ந்த பெருமைக்குரியவர் பேராசிரியர் சு.வித்தியானந்தன்
ஆவார். 'தமிழர்சால்பு' நூலுக்கு ஊடாக வெளிப்படும் அவரது சங்க
இலக்கிய ஆய்வுப்பணியின் கனதியையும் முக்கியத்துவத்தையும்
தனித்துவத்தையும் வெளிப்படுத்துவதே இவ்வாய்வுக்கட்டுரை
ஆகும். சங்ககால அரசரின் வரலாறு, அரசியல், போர் முறைகள்,
வழிபாட்டுமுறைகள், நம்பிக்கைகள், சமயவாழ்க்கை, மக்கள் பாகுபாடு,
தொழிலும் வணிகமும், அக்காலப் பெண்களின் சமுதாய நிலை, கல்வியும்
கலைகளும் போன்ற துறைகளையும், பகுதிளையும் பதினான்கு
இயல்களில் விரிவாக ஆராய்ந்துள்ளார். தமிழியல் என்ற துறை வளர்வதற்கு
முன்னரே அத்துறையில் ஆழமான ஆய்வைச் சங்க இலக்கியங்கள்
வழியாக மேற்கொண்டவர் என்ற பெருமையை இவர் பெறுகின்றார்.
ஆராய்ச்சியாளர்கள் பலரின் தவறான முடிவுகளிற்கு இவரின் ஆய்வு பதில்
சொல்லுவதாக அமைந்தது. தொடர்ந்து வந்த ஆராய்ச்சியாளர்களுக்கு
வழிகாட்டுவதாகவும் இன்றும் நினைத்து வியப்படையக்கூடியவாறும்
இவரது தமிழர் சால்பு ஆய்வு அமைந்தது. இந்த ஆய்வானது விவரண
ஆய்வு முறைக்கு ஊடாக மேற்கொள்ளப்படுகின்றது. இதன்மூலம்
பேராசிரியரின் தமிழ்ப்பணியில் முதன்மைப் பணிகளில் ஒன்றாக இந்த
ஆய்வினைத் தெளிதலும், சங்க இலக்கியம் தொடர்பான வரலாற்றுப்
பண்பாட்டு ஆய்வில் இவ்வாய்வின் தனித்துவத்தினை இனங்காட்டலும்
இவ்வாய்வின் மூலம் நிகழ்த்தப்படுகின்றது. மிகக்குறைவானவர்களே சங்க
இலக்கிய ஆய்வில் இலங்கையிலிருந்து ஈடுபட்ட போதிலும் ஈடுபட்டவர்கள்
அனைவரும் ஆழமான தமது தனித்துவங்களை பதிந்து சென்றதற்கு
வித்தியானந்தனின் தமிழர்சால்பு மிகச்சிறந்த சான்றாக விளங்குவதை
இவ்வாய்வு கண்டடைகின்றது |
en_US |