dc.description.abstract |
இலங்கையின் கிழக்குக் கரையோரப் பகுதியில்
அமைந்துள்ள மட்டக்களப்பு மாவட்டம் நீண்ட காலமாக இந்துப்பண்பாடு
நிலைபெற்றுள்ள ஒரு பிரதேசமாகும். இப்பிரதேசத்தின் பூர்வீகக்குடிகளாக
இந்துக்கள் வாழ்ந்துவருவதுடன் காலத்துக்குக்காலம் இந்தியாவின் பல்வேறு
பகுதிகளிலிருந்தும் மட்டக்களப்பின் பல பாகங்களிலும் மக்கள்குடியேறினர்.
பின்னர்ஐரோப்பியர்களின்வருகையினால்புதியமதங்களையும்,
கலாசாரங்களையும் மட்டக்களப்பு பெற்றுக்கொண்டது. குறிப்பாக,
பிரித்தானியராட்சிக்காலத்தில் ஏற்பட்ட கிறிஸ்தவ சமயப்பரவல்
இங்குள்ள இந்துக்கள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படக் காரணமாக
அமைந்ததுடன், இந்துப் பண்பாட்டு மறுமலர்ச்சிக்கும் வித்திட்டது.
இத்தகைய இந்துப்பண்பாட்டு மறுமலர்ச்சியில் சுவாமி விபுலாநந்தரின்
வகிபங்கினைக் கண்டறிதலை நோக்கமாகக்கொண்டு இவ்வாய்வு
இடம்பெறுகின்றது. சுவாமிவிபுலாநந்தர் தொடர்பாகப் பல்வேறு ஆய்வுகள்
வெளிவந்துள்ள போதிலும், இந்துப்பண்பாட்டு மறுமலர்ச்சியில் அவரது
பங்களிப்புக் குறித்து இதுவரை எவ்வித ஆய்வுகளும் வெளிவரவில்லை
என்பது இவ்வாய்வின் பிரச்சினையாக அமைகின்றது. விபரண
ஆய்வுமுறை, வரலாற்று ஆய்வுமுறை ஆகிய ஆய்வுமுறையியல்கள்
இவ்வாய்வில் பயன்படுத்தப்பட்டுள்ளன. மட்டக்களப்புக் கிராமங்கள்தோறும்
அமைக்கப்பட்ட சைவப்பாடசாலைகள், கல்லடி உப்போடையில்
உருவான ஆங்கிலமொழிப் பாடசாலை, மாணவர் இல்லங்களின்
உருவாக்கம், கல்வி பற்றிய சிந்தனைகள் ஆகியவற்றின் மூலம்
கல்வித்துறையில் சுவாமி விபுலாநந்தர் ஏற்படுத்திய மறுமலர்ச்சிகள்
இவ்வாய்வில் வெளிக்கொணரப்படுகின்றன. ஆலயங்கள் தோறும்
நிகழ்த்திய சொற்பொழிவுகள், எளிமையான வழிபாட்டு முறைகள்,
இந்துசமய இலக்கியங்களின் தோற்றம், மொழிபெயர்ப்பு முயற்சிகள்
என்பன அவரது சமய மறுமலர்ச்சியை வெளிக்காட்டிநிற்கின்றன.இந்து
சமயப்பாரம்பரியத்தில் தோன்றிய சுவாமிவிபுலாநந்தர் அச்சமயத்தை
வளர்ப்பதில் முன்னின்ற அதேவேளை, பிறசமயங்களையும் மதித்து
சமய சமரசத்தைப் பேணியமையும் இங்கு ஆராயப்படுகின்றது. சாதிப்
பாகுபாட்டை எதிர்த்தமை, இராமகிருஷ்ண மிஷன் மூலம் மேற்கொண்ட
பல்வேறுசமூகப்பணிகள் சமூக மறுமலர்ச்சியை ஏற்படுத்துவனவாக
அமைந்தமையும் இவ்வாய்வால் தெரியவருகின்றது. மேலும், மட்டக்களப்பில்
சைவசித்தாந்த மரபும் வேதாந்தமரபும் இணைந்து வளர்ச்சியடைவதற்கு
விபுலாநந்தர் ஆற்றியபணிகளும் வெளிக்கொணரப்படுகின்றன.
இவ்வாய்வின் மூலம்மட்டக்களப்பின் இந்துப்பண்பாட்டு மறுமலர்ச்சியில்
சுவாமிவிபுலாநந்தரின் பங்களிப்புக்கள் வெளிவருவதுடன், இலங்கையின்
இந்துப் பண்பாட்டு மறுமலர்ச்சிபற்றிய அறிவும் விரிவாக்கம்பெறும்.
இவ்வாய்வானது மட்டக்களப்பின் இந்துப்பண்பாட்டு மறுமலர்ச்சியில் சுவாமி
விபுலாநந்தரின் வகிபங்கை மாத்திரமே ஆராய்வதாக அமைகின்றது.
எதிர்காலத்தில் ஆய்வாளர்கள் ஏனைய சமய ஆளுமைகளின் மறுமலர்ச்சிச்
செயற்பாடுகளை ஆராய்வதற்கு இவ்வாய்வு வழிவகுக்குமெனலாம். |
en_US |