dc.description.abstract |
கலைஞனொருவன் தான் பெற்ற அனுபவத்தினை
அல்லது தனது உள்ளத்தில் உதித்த ஒரு எண்ணத்தினைக்
கலைப்படைப்பாக பயன்படுத்துகின்ற கருவியே வடிவம். உள்ளடக்கமும்
வடிவத்தின் இணைப்புமே கலைப்படைப்பை இரசிக்கச் செய்கின்றன.
எனவே கலைப்படைப்பில் உள்ளடக்கத் தெளிவும், வடிவச் சிறப்பும்
இருத்தல் வேண்டும். உள்ளடக்கமாகிய முதன்மைக் கருத்தைக்
கலைப்படைப்பாக்கிட வடிவம் தேவையாகிறது. சிறுகதையின் வடிவத்தினை
ஆரம்பம், நடுப்பகுதி, முடிவு இவற்றோடு கதைக்கரு, கதைக்களம், கதை
அளவு, பாத்திரங்கள், மொழிநடை போன்றனவும் தீர்மானிக்கின்றன.
முகவுரையிலே அது நிகழும் இடம், சூழ்வு, பாத்திரங்கள் ஆகியன
அறிமுகப்படுத்தப்படும். கதையின் உடலாகிய நடுப்பகுதியிலே கதையின்
ஓட்டம், வளர்ச்சி, சிக்கல்கள் என்பன காணப்படும். முடிவு எனும் இறுதிக்
கட்டத்திலே சிக்கல்கள் நீக்கப்பட்டு முடிவு விளக்கப்படுகிறது. இத்தகைய
வடிவ வெளிப்பாடு படைப்பில் இல்லாத போது அது பயனற்றதாகின்றது.
எனவே, யதார்த்தமான உண்மைச் சம்பவங்களை மட்டுமே தன்னுடைய
சிறுகதைகளின் கருப்பொருளாகக் கொண்ட பவானி சிவகுமாரின்
சிறுகதைகளின் வடிவம் தொடர்பில் ஆராயும் நோக்கோடு 'பவானி
சிவகுமாரனின் சிறுகதைகளின் வடிவம்' எனும் தலைப்பின் கீழ்
மேற்கூறப்பட்ட ஆய்வுப்பிரச்சினை ஆய்வு செய்யப்பட்டுள்ளது. ஆசிரியரின்
'நிஜங்களின் தரிசனம்' என்ற நூலின் சிறுகதைகளே பிரதானமாக
ஆய்வுக்குட்படுத்தப்பட்டுள்ளன. தனித்துவமான மையக்கருத்துக்களைக்
கையாண்டு சிறுகதைகளைப் படைக்கின்ற பவானி சிவகுமாரனின்
சிறுகதைகளின் வடிவம் செம்மையானதா? என்பது பற்றியதோர் ஆய்வினை
மேற்கொள்ள வேண்டும் என்பதே இவ்வாய்வின் பிரதான நோக்கமாகும்.
இவ்வாய்விலே விளக்கமுறை, பகுப்பாய்வு முறை, சமூகவியல் முறை,
மதிப்பீட்டு முறை போன்ற அணுகுமுறைகள் பயன்படுத்தப்பட்டுள்ளன.
சிறுகதைகளின் வடிவம் என்ற அடிப்படையில் கதைத் தொடக்கம்,
கதையின் நடுப்பகுதி, கதையின் முடிவு, கதைக்கரு, கதைக்களம், கதை
அளவு, பாத்திரங்கள், மொழிநடை போன்றன ஆராயப்பட்டுள்ளன.
ஆசிரியர் கருவை அறிமுகப்படுத்துவது, ஆர்வநிலையைத் தூண்டுவது,
சூழலையோ அல்லது கதை மாந்தரையோ அறிமுகப்படுத்தி களம்
அமைத்துக் கொடுப்பது என்ற நிலைகளிலேயே கதைகளை ஆரம்பிக்கிறார்.
கதையின் இடையில் ஏற்படும் நெகிழ்ச்சி, போராட்டம், ஐயம் என்பன
கதை தன் முடிவை நோக்கி வேகமாகச் செல்லத் துணைசெய்கின்றன.
கதையின் முடிவு செறிவான முறையில் திருப்பத்தை ஏற்படுத்தக்கூடியமாகக்
காணப்படவேண்டும். இயன்றவரை முடிவுகள் வாசகனின் கற்பனைக்கு
விடப்படுதல் நன்று. ஆசிரியரின் சிறுகதைகளிற் இத்தகு பண்புகளைக்
காணலாம். சமகால சமூக பிரச்சினைகளையும், தான் வாழும் சூழலில்
கண்ட நிஜங்களையும் கதையின் கருவாகக் கொண்டு புதுமைகளைப்
புலப்படுத்த வேண்டும் என்ற துடிப்பில் மெய்மையான கதைகளைப்
படைத்துள்ளார். கதையின் ஓட்டத்திற்கு உதவியாக அமையும் வகையில்
பாத்திரங்களைச் சிருஷ்டித்துள்ளார். அவை வாசகனின் கவனத்தை
ஈர்ப்பது மட்டுமின்றிக் கதையின் கட்டமைப்புச் சிதையாதிருக்கவுந்
துணைசெய்கின்றன. மரபுரீதியான புனைகதை வடிவத்திலிருந்து
வேறுபட்டு நவீனரீதியான சிறுகதைகளை பல புதிய உத்திகளைக்
கையாண்டு தொடக்கம், கதைப்பின்னல், முடிவு என்பவற்றோடு
அமைக்கின்ற அதேவேளை உள்ளடக்கத்திற்கேற்ற வகையில் வடிவத்தில்
மாறுதல்களையும் செய்து படைப்பிலக்கியவாதி என்ற அடிப்படையில்
படைப்பின் பொதுத்தன்மை சிதைவடையாது அதனுள் புதுமையை
புகுத்தி சமுதாயத்திற்கு ஆசிரியர் தந்த படைப்புகள் வாசகர் மத்தியில்
புதிய உத்வேகத்தையும் மாறுதல்களையும் ஏற்படுத்தக்கூடியனவாய்
அமைந்துள்ளன. |
en_US |