dc.description.abstract |
சமூகத்தில் பொதுவில் ஆண், பெண் பாலின
வேறுபாடுகள் முதன்மைப்படுத்தப்பட்டு வருகின்ற நிலையில் அப்பாலின
வேறுபாடுகளையும் கடந்து மூன்றாம் பாலினம் குறித்த சிந்தனைகள்
இன்று பேசுபொருளாக கருக்கொள்ள ஆரம்பித்துள்ளதுடன் அவை
முன்னரைப் போலல்லாது, முரண்பாடான சமூக இருப்புக்குரியனவாக
அல்லாது, இசைவான சமூக அங்கீகாரத்தையும் பெற்றுவருகின்றன.
உலக நாடுகள் பலவற்றிலும் அங்கீகரிக்கப்பட்டு வருகின்ற திருநங்கைகள்
குறித்து உள்ளூர் சமூகத்தில் பல்வேறு விதமான எண்ணப்பாடுகளை,
கருத்தியல்களை திரைப்படங்கள் ஏற்படுத்தியிருப்பது குறிப்பிடத்தக்கது.
இவ்வாறான நிலையில், மக்களின் கருத்தியல்களில் செல்வாக்குச்
செலுத்தும் வலுவான ஊடகமாகக் கருதப்படக்கூடிய திரைப்படங்களில்
மூன்றாம் பாலினத்தவர் அதிலும் குறிப்பாக, திருநங்கைகளின்
பிரதிநிதித்துவம் எவ்வாறு அமைகின்றது என்பதைப் பற்றிய ஊடக
அறநெறி சார்ந்த பார்வை குறித்த தேவை இன்று ஏற்பட்டிருக்கின்றது.
அந்த வகையில், இந்த ஆய்வானது தமிழ்த் திரைப்படங்களில் குறிப்பாக,
தென்னிந்தியாவில் தயாரிக்கப்பட்டு வெளிவருகின்ற திரைப்படங்களில்
திருநங்கைகள் பிரதிநிதித்துவப்படுத்தும் முறைமையை ஆராய்கின்றது.
இங்கு, திருநங்கைகள் குறித்த கதாபாத்திரங்கள் எவ்வாறான சித்திரிப்புக்கள்
வழியாக உருவாக்கப்படுகின்றன என்பதுடன், கதாபாத்திர வகிபாகம்,
உடல்மொழி, குறியீடுகள் என்ற தளங்களில் குறித்த கதாபாத்திரங்களின்
தன்மைகளை ஆராய்வதாக இந்த ஆய்வின் நோக்கம் அமைகின்றது.
தென்னிந்தியத் தமிழ்த் திரைப்படங்களில் திருநங்கைகள் குறித்த
பிரதிநிதித்துவம் - திருநங்கைகளுக்கான காட்சிகளின் எண்ணிக்கை,
கதாபாத்திர வகிபாகம், ஆடையமைப்பின் தன்மை, வசனங்கள்,
உடல்மொழி வெளிப்பாடுகள், குறியீடுகள் என்ற கூறுகளின் அடிப்படையில்
மதிப்பிடப்பட்டது. குறித்த ஆய்விற்காக 2006 ஆண்டு முதல் 2016
ஆண்டு வரையில் வெளிவந்த தென்னிந்தியத் தமிழ்த் திரைப்படங்களில்
திருநங்கைகள் குறித்த கதாபாத்திரங்கள் இடம்பெற்ற பதினெட்டுத்
திரைப்படங்கள் மாதிரிகளாக எடுத்துக் கொள்ளப்பட்டன. திரைப்படங்களின்
உள்ளடக்கம் மற்றும் நேர்காணல்கள் என்பவற்றிலிருந்து பெறப்பட்ட
தரவுகள் அளவுசார், பண்பு ரீதியில் ஆய்வு செய்யப்பட்டுள்ளன.
மேற்குறித்த பிரதிநிதித்துவ விடயங்கள் அடிப்படையில், தென்னிந்தியத்
தமிழ்த் திரைப்படங்கள் திருநங்கைகள் தொடர்பில் எதிர்மறையான
தோற்றப்பாட்டைக் கொடுப்பதுடன் திரைப்படங்களில் திருநங்கை
கதாபாத்திரங்களின் முக்கியத்துவம் ஒப்பீட்டளவில் குறைந்தளவிலும்
கொடுக்கப்பட்டிருக்கின்றது என்பது ஆய்வின்வழி கண்டறியப்பட்டது.
தென்னிந்திய தமிழ்த் திரைப்படங்களில் திருநங்கைகள் குறித்த
சித்திரிப்புக்களாக இனங்காணப்பட்டவற்றில் நான்கு விடயங்களில்
எதிர்மறையானதாகவும் நான்கு விடயங்கள் நேர்மறையானதாகவும்
ஆய்வின் இறுதியில் கண்டறியப்பட்டுள்ளன. வசனங்களினூடாக
வெளிப்படுத்தப்படும் சித்திரிப்புக்கள், நடத்தை வெளிப்பாடுகள்,
பின்னணியிசை, ஒளிப்பதிவுசார் தொழில்நுட்பங்கள் ஆகியவை
ஆய்வாளரால் எடுத்துக் கொள்ளப்பட்ட மாதிரிகளின் அடிப்படையில்
திருநங்கை கதாபாத்திரங்களை பெருமளவில் நேர்மறையானதாகச்
சித்திரித்துள்ளமையும் கதாபாத்திரத்தின் வகிபாகம், ஆடையமைப்பின்
தன்மை, உடல்மொழி வெளிப்பாடுகள், குறியீடுகள் ஆகியன
திருநங்கை கதாபாத்திரங்களை பெருமளவில் எதிர்மறையானதாகச்
சித்திரித்துள்ளமையும் கண்டறியப்பட்டது. |
en_US |