Abstract:
தமிழ் பேசும் மக்கள் பெரும்பாலும் வடக்கு, கிழக்கு
பகுதிகளில் பெருமளவாக காணப்படுகின்றனர். நாட்டு நடப்புக்கள்,
விவகாரங்கள் தொடர்பாக அறிந்து கொள்வதற்கு பிராந்திய ஊடகங்களை
அவர்கள் தங்கியிருந்தாலும் தென்னிலங்கை தொடர்பான அரசியல்
நிலைப்பாடுகளை அறிந்துகொள்ள கொழும்பிலிருந்து வெளியாகும் தேசிய
தமிழ்ப் பத்திரிகைகளையே நம்பியிருக்க வேண்டிய நிலை காணப்படுகின்றது.
தேசிய தமிழ்ப் பத்திரிகைகளில் தென்னிலங்கை தொடர்பிலான
அரசியல் விடயங்களை வெளிப்படுத்துவதில் கேலிச்சித்திரங்களின்
பங்களிப்பு அதிகமாக உள்ளது. எனவே, கேலிச்சித்திரங்கள் வாயிலாக
தெற்கு அரசியல் முன்வைக்கப்படும் விதம் குறித்து ஆராய்வதாக இவ்
ஆய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளது. அந்தவகையில், 'தேசிய தமிழ்
நாளிதழ்களில் தெற்கு அரசியல் பற்றிய கேலிச்சித்திரங்கள்' என்னும்
தலைப்பில் இவ் ஆய்வானது மேற்கொள்ளப்பட்டதுடன், தேசிய ரீதியில்
வெளிவருகின்ற தமிழ்ப் பத்திரிகைகளான தினகரன், தினக்குரல், வீரகேசரி
ஆகிய பத்திரிகைகளில் வெளிவருகின்ற கேலிச்சித்திரங்களானவை
தென்னிலங்கை அரசியலை முன்வைக்கும் விதம் தொடர்பாக ஆராய்வதாக
அமைகின்றது. தெற்கு அரசியல் சார் விடயங்களை கேலிச்சித்திரங்கள்
முன்வைக்கும் விதம், கேலிச்சித்திரங்களில் கையாளப்படும் குறியீடுகளின்
தன்மைகளை இனங்காணல், தெற்கு அரசியல் நிலைப்பாடுகள் குறித்து
கேலிச்சித்திரங்களின் விமர்சனப்பார்வை எவ்வாறுள்ளது. போன்ற
விடயங்கள் ஆய்வுக்கு எடுத்துக்கொள்ளப்பட்டன. இவ் ஆய்வானது
உள்ளடக்கப்பகுப்பாய்வு முறையினை அடிப்படையாக கொண்டு ஒரு
மாதகாலத்தில் வெளியான தேசிய தமிழ்ப் பத்திரிகைகளிலிருந்து
கேலிச்சித்திரங்கள் பெற்றுக்கொள்ளப்பட்டு பகுப்பாய்விற்கு
உட்படுத்தப்பட்டன. கேலிச்சித்திர வரைகலைஞர்களிடமிருந்து
நேர்காணல்கள் பெறப்பட்டு அவையும் பகுப்பாய்விற்குட்படுத்தப்பட்டு
கேலிச்சித்திரங்களின் பேசுபொருட்களாக அரசியல், பொருளாதாரம், சமூகம்,
இன நல்லிணக்கம் போன்ற விடயங்கள் காணப்பட்டாலும் அரசியல் குறித்த
கேலிச்சித்திரங்களே தேசிய தமிழ் நாளிதழ்களில் அதிகமாக இடம்பெறுவதும்,
அங்க அடையாளக் குறியீடுகள் மற்றும் சின்னங்கள் சார்ந்த குறியீடுகள்
அடிப்படையில் வரையப்பட்ட கேலிச்சித்திரங்களே அதிகம் என்பதும்,
கேலிச்சித்திரங்கள் விமர்சன நோக்கம், ஊழல்களினை வெளிப்படுத்தல்,
பிரச்சினைகளை வெளிப்படுத்துதல், தேசிய நலனை முன்னிலைப்படுத்தல்
போன்ற பல வெளிப்படுத்தல்களை கொண்டிருந்தாலும், அரசியல்
தொடர்பான விமர்சன நோக்கம் கொண்டவையாகவே அவை
அதிகம் வெளிவருகின்றன என்பதும், கருத்துருவாக்கம் செய்யும்
நோக்கத்துடனேயே கேலிச்சித்திரங்கள் வரையப்படுகின்றன என்பதுடன்
கருத்துருவாக்கத்தின் மூலமாக பத்திரிகையின் நிலைப்பாட்டை
வெளிக்கொண்டு வருவதில் கேலிச்சித்திரங்களுக்கு அதிக பங்கு
இருக்கின்றது என்பதும், கேலிச்சித்திரங்களில் அரசியல் விவகாரங்கள்
அதிகம் விமர்சனப்பார்வையுடன் வரையப்பட்டு வெளியிடப்படுகின்ற
அதேவேளை, இற்றைப்படுத்தப்படும் தகவல்களை மக்களுக்கு
தெரிவிக்கும்விதமாகவும் கேலிச்சித்திரங்கள் வெளிவருகின்றன என்பதும்
ஆய்வின் முடிவுகளாகக் கண்டறியப்பட்டன