Abstract:
சினிமா மக்கள் மத்தியில் ஒரு கலைப்படைப்பாக
மட்டுமன்றி ஒரு பொழுதுபோக்குச் சாதனமாகவும் பெருமளவில்
பார்க்கப்படுகின்றது. மகிழ்ச்சியாய் பொழுதைக் கழிப்பதற்குரிய ஒரு வழிதான்
சினிமா எனப் பெருமளவில் கருதப்படுவதால் சமூகத்தில் கேள்விகளின்றி
சினிமாமொழி ஆழமாக ஊடுருவி நிற்கின்றது. சினிமா காட்சிரூப மொழி
என்பதால் அதன் கட்டுமானமாக காட்சி, கட்டம், அங்கம், தொகுப்பு
ஆகியன அமைந்துள்ளன. இவைவழியே கதைகூறப் பயன்படுத்தும்
ஊடகமுறைமையே சினிமாமொழி எனப்படுகின்றது. இத்தகைய
சினிமாவின் வெளிப்படுத்தற் பரிமாணமாகவே காணொளிப்பாடல்கள்
காணப்படுகின்றன. காணொளிப்பாடல் என்பது இயக்குநர் தான்
கூறவந்த ஒரு விடயத்தை காட்சியமைப்போடு சேர்த்து இசைப்பாடலாக்கி
வெளியிடுவதாகக் காணப்படுகின்றது. தொலைக்காட்சி முதலிய
காட்சி ஊடகங்களில் காணொளிப்பாடல்கள் அதிகமான வரவேற்பை
பெற்றுள்ளமையாலும் சமூகத்தில் புதிய காணொளிப்பாடல்களின்
உருவாக்கம் அதிகரித்துவருகின்றமையாலும் இளைய சமூகம்
மத்தியில் இந்த காணொளிப்பாடல்கள் அதிக செல்வாக்கைக்கொண்டு
காணப்படுகின்றன. மிகச்சமீபத்திய காட்சிப்புல படைப்பாக்கமாக எழுந்துவரும்
இந்த வடிவத்தை, அதன் போக்கை அடையாளம் காண்பதற்குரிய தேவை
இன்று ஏற்பட்டிருக்கின்றது. இதனை ஒரு முறைசார்ந்த ஆய்வுநோக்கில்
அணுகுவதற்காக ஈழத்திலிருந்து 2011முதல் 2016ஆம் ஆண்டுவரையான
காலப்பகுதியில் வெளியான காணொளிப்பாடல்களில் அனைவருக்கும்
கிடைக்கப்படக்கூடிய வகையிலமைந்த 27 காணொளிப்பாடல்கள்
மாதிரிகளாக தெரியப்பட்டிருந்தன. இதனடிப்படையில் ஈழத்து தமிழ்
காணொளிப்பாடல்களில் கையாளுகின்ற விடயங்கள் பற்றிய போக்கினை
அடையாளங்காணுதல் மற்றும் இந்த காணொளிப்பாடல்களின்
உருவாக்கத்தில் படைப்பாளிகளுக்கு இருக்கக்கூடிய சாதக, பாதகத்
தன்மைகளைக் கண்டறிதல் போன்றவற்றை வெளிக்கொண்டு
வருமுகமாக பெறுதிகள் சார்ந்து, உள்ளடக்கப் பகுப்பாய்வாக இவ்
ஆய்வானது மேற்கொள்ளப்பட்டது. இதில் காணொளிப்பாடல்களினுடைய
விடயப்பரப்பு, அதனுடைய வரிகள், இசை, பாடலுக்குரிய காட்சியமைப்பு,
நடிப்பு என்பவை கருத்திற்கொள்ளப்பட்டன. காணொளிப்பாடல்களைப்
பற்றிய ஆர்வம் உள்ளவர்கள், இயக்குநர்கள், இலக்கிய ஆர்வலர்கள்,
இசையமைப்பாளர்கள் போன்றோரிடம் நேர்காணல்கள், குவிமையக்
கலந்துரையாடல்கள் மூலம் பெற்றுக் கொள்ளப்பட்ட தரவுகள்
பகுப்பாய்விற்கு உட்படுத்தப்பட்டன. இதன்மூலம் ஈழத்தில் உருவாகும்
தமிழ் காணொளிப்பாடல்களினுடைய போக்கானது போரினுடைய
தாக்கம், பிரபலத்துவம், நாயகத்துவம், காதல் ஆகிய விடயங்களை
உள்ளடக்கியிருப்பதோடு, பொருத்தமான ஒலியமைப்பு, ஒளியமைப்பு மற்றும்
தொழிநுட்பத்தகைமைகளைக் கொண்டமைகின்ற அதேவேளையில்
வணிகரீதியான சந்தைவாய்ப்புக்களையும் தக்கவைத்திருப்பது ஆய்வின்வழி
கண்டறியப்பட்டது. காணொளிப்பாடல்களின் காட்சியமைப்புக்களைப்
பொறுத்தவரையில், அவை சட்டகம், ஒருங்கிணைப்பு, படிமம், வேறுபடும்
காட்சிப்புலங்கள் என்பவற்றில் படிமுறைவளர்ச்சி பெற்றுவருவதையும்,
உணர்வு வெளிப்பாடுகளைப் பொறுத்தளவில் பின்வந்த சில
படைப்புக்களில் வன்முறை சார்ந்த நாயகத்துவத்தின் செல்வாக்கு
அதீதமாகக் காணப்படுவதையும் ஆய்வு இனங்காட்டியது. ஆரம்பத்தில்
உள்ளூர் விடயங்களை மையமாகக்கொண்டு காணொளிப்பாடல்கள்
தயாரிக்கப்பட்டிருந்தாலும் அண்மைய காலத்தில் அதன் போக்கு
மாற்றமடைந்து அதிகப்படியான பேசுபொருட்கள் தென்னிந்திய சினிமா
நகர்வுகளையொட்டியே காணப்படுவதையும் ஆய்வு சுட்டிநிற்கின்றது.