Abstract:
சமகால சமூகத்தில் காணப்படுகின்ற பிரச்சனைகளுள்
தீவிரமான ஒன்றாக இளையோர் மத்தியிலான விலகல் நடத்தை
காணப்படுகின்றது. இளையோர் மத்தியிலான விலகல் நடத்தையும்
நியமமறுநிலையும் என்ற ஆய்வானது யாழ்ப்பாணம் சிறைச்சாலையை
மையமாகக் கொண்டு மேற்கொள்ளப்பட்ட ஆய்வாகும். இதன் பிரதான
நோக்கம் இளைஞர்களின் விலகல் நடத்தைக்கும் நியமமறுநிலைக்கும்
இடையிலான தொடர்பினைக் கண்டறிதல் ஆகும்.இவ் ஆய்வானது
யாழ்ப்பாணம் சிறைச்சாலைக் கைதிகளில் 18-30 வயதுப்பிரிவினரை
மையமாகக் கொண்டு நோக்கங்கருதிய வகையில் 50 மாதிரிகள்
தெரிவு செய்யப்பட்டு தரவுகள் பெறப்பட்டு பகுப்பாய்வு செய்யப்பட்டுள்ளது.
இளைஞர்கள் மத்தியிலான விலகல் நடத்தையும் நியமமறுநிலையும்
என்ற ஆய்வில் அளவு சார் ஆய்வு முறைகளையும் பண்பு சார் ஆய்வு
முறைகளையும் பிரயோகித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளது. விடய
ஆய்வுஇ நேர்காணல்இ அவதானம்,வினாக்கொத்துஇ முதலான தரவு
சேகரிப்பு நுட்பங்களையும் ஒன்றிணைத்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இந்த ஆய்வானது விபரண ஆய்வாக அமைந்துள்ளது. இவ்வாய்வானது
இளைஞர்கள் மத்தியிலான விலகல் நடத்தைகளையும், விலகல்
நடத்தைக்கான காரணங்களையும் கண்டறிந்துள்ளது. பிரதானமான
விலகல் நடத்தையாக களவுஎடுத்தல் என்பது கண்டறியப்பட்டுள்ளது.
அத்துடன் பாலியல் வல்லுறவு, நிதிமோசடி, கொலை, போதைவஸ்து
பாவனை, போதைப்பொருள் விற்பனை,போதைவஸ்து கடத்துதல்,
கப்பங்கோருதல், சண்டை, குழுமுரண்பாடு ஆகிய விலகல் நடத்தைகளும்
இனங்காணப்பட்டுள்ளன. அத்துடன் விலகல் நடத்தைக்கான
காரணங்களாக சமூகம், குடும்பசூழ்நிலை, வறுமை, நண்பர்கள்,
சுயவிருப்பம், காதல், போதைப்பொருட்பாவனை, தொழில் ரீதியான அழுத்தம்
என்பன கண்டறியப்பட்டுள்ளன. சமூகத்தில் இளைஞர்களின் தேவைகள்
பூர்த்தி செய்யப்படாமை, சமூகத்தின் கட்டுப்பாடுகள் அதிகரித்தமை,
தனிப்பட்ட விருப்பம், சமூகம் இளைஞர்கள் மீது ஆரோக்கியமான
செல்வாக்கினை பிரயோகிக்கத் தவறியமை என்ற நியமமறுநிலைக்கான
காரணங்களால் இளைஞர்கள் மத்தியிலான விலகல் நடத்தைகள்
இடம்பெற்றுள்ளன என்பது கண்டறியப்பட்டுள்ளது. விலகல் நடத்தையைக்
குறைப்பதற்காக கல்வியை வழங்குதல்,வறுமை ஒழிப்பு நிகழ்ச்சித்திட்டம்
உருவாகுதல், பெற்றோர்கள் மத்தியில் விழிப்புணர்வினை ஏற்படுத்துதல்,
தொழில் வாய்ப்புக்களை உருவாக்குதல், உளவள ஆற்றுப்படுத்தல்,
ஆன்மீக ர்pPதியான வழிப்படுத்தல், இளைஞர்அமைப்புக்கள் (கழகங்கள்
உருவாகுதல்) விழிப்புணர்வுகளை ஏற்படுத்தல், சமூகமட்ட நிறுவனங்கள்
ஆதரவினை வழங்குதல், மக்களின் மனங்களில் மாற்றத்தினை
ஏற்படுத்துதல், இளைஞர்களுக்கு சந்தர்ப்பம் வழங்குதல் ஆகிய
செயற்பாடுகளை மேற்கொள்ளல் வேண்டும் போன்ற சிபாரிசுகள்
முன்வைக்கப்பட்டுள்ளன. இவற்றின் மூலமே இளைஞர்களை சமூகச்
செயற்றிறனாளிகளாக மாற்ற முடியும்.