dc.description.abstract |
திரைப்படங்களின் கதையாடல் கட்டமைப்பினை
அடிப்படையாகக் கொண்டு அமைந்த இந்த ஆய்வானது தமிழ்
சினிமாஇயக்குனர்களான பாலா மற்றும் அமீர் போன்றோரை
அடிப்படையாக கொண்டு அமைந்துள்ளது. இவர்கள் இருவரின் சிறந்த
கதைக்களம் மாறுபட்ட சிந்தனை போன்றன தமிழ் சினிமாவைத் தாண்டி
இந்தியச் சினிமாவிலும் தனி இடத்தினை பிடித்துக் கொண்டுள்ளது.
கடினமான கதைக்களத்தினை தெரிவு செய்து அடித்தள மக்களின் சாதாரண
வாழ்வினை பிரதிபலித்து மாறுபட்ட சிந்தனையினை வெளிப்படுத்தும்
கதைக்கருவினை தெரிவு செய்து இயக்குவதாலும் இவர்களின்
திரைப்படங்கள் அதிகமாக மக்களிடையே பேசப்படுவதோடு இவ்விரு
இயக்குனர்களுக்கும் தேசிய அளவில் பல விருதுகளையும் பெற்றுக்
கொடுத்துள்ளன. திரைப்படங்கள் ஒரே கதைக்களத்தினையும், கதைக்
கருவினையும் கொண்டிராமல் மாற்றுச் சிந்தனையுடன் வெளிவரும் போதே
அது பார்வையாளர்களுக்கு அதிகமான தாக்கத்தினை ஏற்படுத்தக்கூடியதாக
அமையும். அந்த வகையில், இவ்விரு இயக்குனர்களும் எவ்வாறான
கதைக்கருவினை தெரிவு செய்கின்றனர்? இவர்களின் திரைப்படங்கள்
எவ்வாறான கதைக்களத்தினை கொண்டு அமைகின்றன,இவர்களின்
பாத்திரப்படைப்புக்கள் எவ்வாறு கதைக்கருவிற்கு துணை புரிகின்றது
என்ற கேள்விகளுக்கு விடை காண்பதே இந்த ஆய்வின் நோக்கமாக
அமைந்துள்ளது. இந்த ஆய்வின் பரப்பாக இரு இயக்குனர்களின் முதல்
நான்கு திரைப்படங்கள் உள்ளடங்கலாக அமைகின்றன. இவ்விரு
இயக்குனர்களின் திரைப்படங்கள் எப்போதும் வேறுபட்ட சிந்தனையினை
கொண்டிருப்பதோடு புதுமையான கதைக்கருவினையும் கொண்டு
அமைந்துள்ளன என்பதே இந்த ஆய்வின் கருதுகோளாகும். கதைக்
கருவினை அடிப்படையாகக் கொண்ட இந்த ஆய்வானது கதைக்களம்,
மொழிநடை, பாத்திரப்படைப்பு, வாழ்க்கை முறை, என்பவற்றோடு
கதைக்களத்தில் இடம்பெறும் சடங்குகள், போக்குவரத்து, இயற்கை
வளங்கள், குறியீடுகள், எனப் பல்வேறுபட்ட விடயங்கள் இவ் ஆய்வில்
மேற்கொள்ளப்பட்டுள்ளதுடன், இவர்கள் இருவரும் மேற்குறிப்பிடப்பட்ட
பல்வேறு விடயங்களுக்கு அதிகமான முக்கியத்துவத்தினை
கொடுத்துள்ளனர். இந்த ஆய்வின் முதல் நிலைத்தரவுகளாக குறிப்பிட்ட
இயக்குனர்களின் முதல் நான்கு திரைப்படங்களும் அமைவதோடு
இரண்டாம் நிலைத்தரவுகளாக ஆய்வின் பொருண்மையோடு
தொடர்புடைய ஆய்வுகள், ஆய்வுக்கட்டுரைகள், நூல்கள் போன்றன
அமைகின்றன.இரண்டு இயக்குனர்களின் திரைப்படங்களினை
அடிப்படையாகக் கொண்டு அமைந்த இந்த ஆய்வானது எண்சார்,
பெறுதி சார் மற்றும் நேர்காணல் போன்றவற்றில் பெறப்பட்ட தரவுகளை
அடிப்படையாகக் கொண்டு ஒப்பீட்டளவு மற்றும் பகுப்பாய்வு முறையினை
பயன்படுத்தி மேற்கொள்ளப்பட்டுள்ளது. அந்த வகையில் இவ்விரு
இயக்குனர்களின் மாறுபட்ட சிந்தனை, கதை தெரிவு, புதிய கதைக்களம்
என்பன தமிழ் சினிமாவில் தரமான இயக்குனர்களாக பரிணமிப்பதற்குத்
துணைபுரிவது எனலாம். இவ்விரு இயக்குநர்களும் தமது கதைக்கருத்
தெரிவிலும், கதைக்கள தெரிவிலும் மாறுபட்ட சிந்தனையினைக்
கொண்டவர்களாகக் காணப்படுகின்றனர். இவர்கள் இருவரும்இயக்குநர்
பாலுமகேந்திராவின் கீழ் வளர்ந்ததினாலும், ஒரே பின்புலத்தினைக்
கொண்டு அமைவதினாலும் ஒரே வகையிலான எண்ணப்பாங்கினை
கொண்டு காணப்படுகின்றனர். இவ்விரு இயக்குநர்களின் ஆரம்பகட்ட
நான்கு திரைப்படங்களும் ஒரே வகையான கதைக்கரு, கதைக்களம்
போன்றவற்றினைக் கொண்டு அமைவதினை அவதானிக்க முடிகின்றது. |
en_US |