Abstract:
மெய்யியல் என்பது பல்வேறு ஆய்வுத் துறைகளைத்
தன்னகத்தே கொண்டுள்ளது. மனிதனுடைய பல்வேறு சிந்தனையின்
பரிணாமங்களின் உள்ளார்ந்த விடயங்களை ஆராயும் ஓர் இரண்டாம்
தர ஆய்வாக மெய்யியல் விளங்குகின்றது. இதுவே மெய்யியலில்
பல பிரிவுகள் தோன்றி வளரக் காரணமாயிற்று. அந்தவகையில்
அழகியலோடு சம்பந்தப்பட்ட அழகு, கலை, சுவை, மேதகையழகு
போன்ற பல்வேறு எண்ணக்கருக்களை மீள்பார்வைக்கு உட்படுத்துவது
அழகியல் மெய்யியலாகும்.அழகியல் மெய்யியல் ஆய்வு செய்யும் பல்வேறு
எண்ணக்கருக்களுள் சுவை என்ற எண்ணக்கரு முக்கியமான இடத்தைப்
பெறுகிறது. சுவை என்பது அழகியல் மேம்பாட்டை வெளிப்படுத்த
உதவுகின்ற ஒரு விளைவு என்றோ அல்லது ஒரு வகை அழகியல்
நயப்பு என்றோ பொதுவாகக் கூறப்படின் அது முழுமையான விளக்கம்
ஆகாது.சுவை எனும் பதம் சாதாரண வழக்கில் பல்வேறு அர்த்தங்களில்
பயன்படுத்தப்படுகிறது. சுவையுள்ள உணவு எனும் போது அது நாவின்
சுவை என்ற அர்த்தத்தைக் கொண்டிருக்கும். இந்தக் கவிதை சுவையானது
எனும் போது அது எமது உணர்ச்சியின் வெளிப்பாடாய் இருக்கும்.
சுவையினை ஒரு செயற்பாடாக, ஒரு விளைவாக, ஒரு ஊடகமாக, ஒரு
உருவமாக பல்வேறு நோக்குகைகளுடன் தெளிவுபடுத்தும் முயற்சிகள்
மேற்கொள்ளப்பட்டு வந்துள்ளன. சுவை அல்லது சுவைத்தல் பற்றிய
அனைத்துத் தீர்மானங்களும் அழகியல் தீர்மானங்களாகும். இத்தீர்மானம்
அழகியல் சார் விடயங்களின் பிரதிபலிப்பை காண்போனுக்குத்
தருகின்றது. அழகியல் தீர்மானம் என்பது அழகியல் சம்பந்தமாக
ஒருவர் கொண்டிருக்கின்ற அல்லது வெளிப்படுத்துகின்ற மதிப்பீடு என்றும்
கொள்ளப்படும். தனிப்பட்டவர்களது உளவியல்சார்ந்ததும் ஆளுமை
சார்ந்ததுமான மதிப்பீட்டு எண்ணக்கருவாக அமைந்துள்ள சுவை
மெய்யியலில் இன்றுவரை விவாதத்திற்குரியதாகவே உள்ளது. ஒப்பீடு,
பகுப்பாய்வு, விமர்சனம் போன்ற ஆய்வு முறைகளைப் பயன்படுத்தி
சுவையின் இயல்பு, அதன் அர்த்தம், அதன் செயற்பாடுஎன்பவற்றை
வைத்து ஆராய இக்கட்டுரை முனைகின்றது.