Abstract:
முன்பள்ளிக் கல்வி அனைத்துப் பிள்ளைகளுக்கும் பெறுமதி மிக்கதொன்றாகும்.
இக்காலப் பகுதியில் மனிதவளங்களை பயன்மிகு வகையில் விருத்தி செய்வதற்கு
முன்பள்ளிக் கலைத்திட்டத்தின் பொருத்தப்பாடு, வளங்களுக்கு இடையிலான
பிணைப்பு, வினைத்திறான கல்விச் செயற்பாட்டின் வெற்றியில் தங்கியுள்ளது. இந்த
ஆய்வானது மட்டக்களப்பு மாவட்டத்தில் புதிய கல்விச் சீர்திருத்தத்திற்கமைய,
முன்பள்ளிகளில் எதிர்பார்க்கப்பட்ட தேர்ச்சிகளை அமுலாக்கலுக்கும், வளங்களின்
பொருத்தப்பாட்டுக்குமான இடைவெளிகளை கண்டறிந்து, அவற்றை
நிவர்த்திப்பதற்கான பரிந்துரைகளை முன்வைப்பதுமாகும். இந்த ஆய்வானது, ஒரு
ஒப்பீட்டு ஆய்வு வடிவத்தில் அமைந்த கலப்பு ஆய்வாக மேற்கொள்ளப்பட்டது. எளிய
எழுமாற்று மாதிரி எடுப்பு மற்றும் படையாக்க நுட்பம் மூலம் 30 முன்பள்ளிகளிலிருந்து
ஆசிரியர்கள் தலா ஒருவர் வீதமும் ஒவ்வொரு முன்பள்ளிகளிலிருந்து தலா ஐந்து
மாணவர்கள் வீதம் 150 மாணவர்கள் மாதிரிகளின் பெற்றோர்கள் 150 பேரும்
மாதிரிகளாகத் தெரிவு செய்யப்பட்டனர். வினாக்கொத்து, அவதானிப்பு, இலக்குக்குழுக்
கலந்துரையாடல் மூலம் தரவுகள் பெறப்பட்டன. ஆய்வு நோக்கங்களின்
அடிப்படையில திரட்டப்பட்ட தரவுகள் விவரணப் பகுப்பாய்வுக்குட்படுத்தப்பட்டது. இந்த
ஆய்வின் கண்டறிதல்களாக, ஆய்வுக்குட்படுத்தப்பட்ட முன்பள்ளி பிரதேச சபைகள்,
தனியார், சமய நிறுவனங்கள் மற்றும் அரசசார்பற்ற நிறுவனங்களினாலும்
நிர்வகிக்கப்படுகின்றன. மட்டக்களப்பு மாவட்டத்தில் குறைந்தளவு பௌதிக
வசதிகளுடனேயே முன்பள்ளிகள் இயங்குகின்றன. பெருமளவான ஆசிரியர்கள்
பிள்ளைவிருத்திக் கோட்பாடுகள் பற்றி அறிந்தவர்களாக உள்ளனர். கிராம
முன்பள்ளிகளில் மாணவர்களின் மொழிவிருத்தி குறைவானதாகவும் உள்ளது.
முன்பள்ளிகளில் இடம்பெற்ற ஆயத்தப்படுத்தல்கள் கல்விக் கோட்பாடுகளுக்குப்
பொருத்தமற்றதாக அமைகின்றன. முன்பள்ளி ஆசிரியர்களில் பெருமளவானவர்கள்
க.பொ.த (சா/த) வரை கற்றவர்களாக உள்ளனர். முன்பள்ளி வகுப்பறைகளில்
பிள்ளைநேய விருத்திச் சூழல் காணப்படவில்லை. பிள்ளைப்பருவ விருத்தி
நியமங்களுக்கு ஏற்ப அறிவாற்றல், உள இயக்கத்திறன், மனவெழிற்சிப் பண்புகள்,
சமூகமயமாக்கல் திறன்களை வழங்குவதில் பாரிய இடர்பாடுகள்
இனங்காணப்பட்டுள்ளது. முன்பள்ளிகளில் நீர்வசதி, மின்சாரவசதி, மலசல கூட
வசதியும் முழுமையாகப் பூர்த்திசெய்யப்படவில்லை. அத்துடன் கற்றலுக்கான
வளங்களும், பௌதீக வளங்களும் குறைந்தளவே காணப்படுகின்றன. குறிப்பாக கிராம
முன்பள்ளிகளில் கற்றலுக்கான உபகரணங்கள் பற்றாக்குறையாக உள்ளன. இவ்வாய்வு
கண்டறிலூடான ஆலோசனைகளாக, கற்றல் கற்பித்தல் செயற்பாடுகளில்
போதுமானளவு தரஉள்ளீடுகள், பௌதீக வளங்களை அரசு முன்னுரிமை
அடிப்படையில் வழங்குதல் வேண்டும். முன்பள்ளிகள் பிள்ளைநேய விருத்திக்கேற்ப
உருவாக்கப்படுதல் வேண்டும்.