Abstract:
ஆரம்பக்கல்வி என்பது மாணவர்களின் அடிப்படை அறிவு, திறன் மற்றும் ஆளுமை வளர்ச்சிக்கான முக்கிய கட்டமாகும். இந்நிலையில் ஆசிரியர்களின் கற்பித்தல் செயற்றிறன் மாணவர்களின் கல்வி முன்னேற்றத்தில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்துகின்றது. இவ்வாய்வு, யாழ்ப்பாண கல்வி வலயத்திலுள்ள நல்லூர் கோட்ட வகை II பாடசாலைகளில் பணியாற்றும் ஆரம்பக்கல்வி ஆசிரியர்களின் கற்பித்தல் செயற்றிறனில் செல்வாக்குச் செலுத்தும் ஆசிரியர்சார் காரணிகளை ஆய்வு செய்வதை நோக்கமாகக் கொண்டது. இவ்வாய்வில் விவரண மற்றும் விளக்க ஆய்வு முறைகள் பயன்படுத்தப்பட்டன. குறுக்குவெட்டு கணக்கெடுப்பு ஆய்வு முறை (Cross-sectional Survey Research) பயன்படுத்தப்பட்டு, 65 ஆரம்பக்கல்வி ஆசிரியர்கள் குடித்தொகை மாதிரியாகத் தேர்ந்தெடுக்கப்பட்டனர். தரவுகள் வினாக்கொத்து மூலம் சேகரிக்கப்பட்டு, Spearman Correlation பகுப்பாய்வு மூலம் ஆய்வு செய்யப்பட்டது. ஆய்வின் முடிவுகள் ஆசிரியர்களின் தயார்நிலை, மனப்பாங்கு, வகுப்பறை முகாமைத்துவத் திறன் மற்றும் படைப்பாற்றல் திறன் ஆகியவை கற்பித்தல் செயற்றிறனுடன் குறிப்பிடத்தக்க தொடர்பு கொண்டுள்ளதை வெளிப்படுத்தின. குறிப்பாக வகுப்பறை முகாமைத்துவத் திறன் கற்பித்தல் செயற்றிறனுடன் அதிகமான நேர்மறைத் தொடர்பைக் காட்டியது. மேலும், ஆசிரியர்களின் மனப்பாங்கும் தயார்நிலையும் உயர்ந்த நிலையில் காணப்பட்டாலும், வகுப்பறை முகாமைத்துவம் மற்றும் படைப்பாற்றல் தொடர்பான சில குறைபாடுகள் காணப்பட்டன. இவ்வாய்வு ஆசிரியர்களுக்கான தொடர்ச்சியான தொழில்முறை பயிற்சிகள், வகுப்பறை முகாமைத்துவ மேம்பாட்டு நடவடிக்கைகள், கற்பித்தல் வளங்களின் அதிகரிப்பு மற்றும் ஆசிரியர் ஊக்குவிப்பு திட்டங்கள் ஆகியவற்றை வலுப்படுத்த வேண்டிய அவசியத்தை வலியுறுத்துகிறது. இதன் மூலம் ஆரம்பக்கல்வி ஆசிரியர்களின் கற்பித்தல் செயற்றிறனை மேம்படுத்தி மாணவர்களின் கல்வி அடைவுகளை உயர்த்த முடியும்.