| dc.description.abstract |
இந்த ஆய்வு, கொழும்பு தெற்கு கல்வி வலய தமிழ்மொழிமூல இடைநிலைப் பாடசாலைகளில் ஆசிரியர்-மாணவர் உறவு மாணவர்களின் கற்றல் விளைவுகளில் ஏற்படுத்தும் தாக்கத்தை ஆராய்வதனை நோக்கமாகக் கொண்டது. தனிநபர் மற்றும் சமூக வளர்ச்சிக்குக் கல்வி இன்றியமையாதது. மேலும், ஆசிரியர்-மாணவர் உறவின் தரமானது, மாணவர்களின் கற்றல் செயற்பாடு, ஊக்கல், உணர்வு மற்றும் முழுமையான கற்றல் அனுபவம் ஆகியவற்றை வடிவமைப்பதில் முக்கிய பங்காற்றுகிறது. பரஸ்பர மரியாதை, நம்பிக்கை, ஆதரவு மற்றும் இடைவினை ஆகியவற்றால் வளர்த்தெடுக்கப்படும் நேரான ஆசிரியர்-மாணவர் உறவு, உள்ளடங்கல் கற்றல் சூழலை வளர்க்க உதவுகின்றது. மாறாக, எதிரான ஆசிரியர்-மாணவர் உறவு கற்றல் ஈடுபாடின்மைக்கும் பாதகமான விளைவுகளுக்கும் வழிவகுக்கின்றது. இந்த ஆய்வானது விபரண மற்றும் இணைவு ஆய்வு வடிவங்களைப் பின்பற்றி அளவு சார்ந்த அணுகுமுறையில் முன்னெடுக்கப்பட்டது. தொடர்பாடல், ஒத்துழைப்பு, நம்பிக்கை, ஈடுபாடு மற்றும் ஊக்கல் போன்ற பரிமாணங்களை மதிப்பிடும் வகையில் Likert அளவுத்திட்டத்தை அடிப்படையாகக் கொண்ட கட்டமைக்கப்பட்ட வினாக்கொத்துக்கள் மூலம் 100 ஆசிரியர்கள் மற்றும் 100 மாணவர்களிடமிருந்து தரவுகள் சேகரிக்கப்பட்டன. ஆய்வுக் குடித்தாகையின் சரியான பிரதிநிதித்துவத்தை உறுதி செய்வதற்காக, படைமுறை எழுமாற்று மாதிரி முறை மூலம் மாதிரி தெரிவு செய்யப்பட்டது. மேலும், தரவுப் பகுப்பாய்வில் விபரணப் புள்ளிவிபர நுட்பங்கள், பியர்சனின் தொடர்புச் சோதனை மற்றும் பிற்செலவு மாதிரிகள் பயன்படுத்தப்பட்டன. இந்த ஆய்வின் முடிவுகளாக, ஆசிரியர்-மாணவர் உறவுமுறை கற்றல் அடைவில் மிதமான தாக்கத்தை ஏற்படுத்துகின்றது, ஆசிரியர் -மாணவர் உறவின் தரம், மாணவர் ஈடுபாடு மற்றும் ஊக்கல் ஆகியவற்றுக்கு இடையே பொருண்மையான நேர்த் தொடர்புகள் (r = .68 முதல் .75 வரை P < .001) காணப்படுகின்றன. ஆசிரியர்களிடமிருந்து கிடைக்கும் ஒத்துணர்வும் ஊக்கலும் மாணவர்களின் சுயஊக்கலையும் திருப்தியையும் கணிசமான அளவில் பாதிக்கின்றன. மாணவர்களுடனான தங்கள் உறவுகள் மற்றும் கற்பித்தல் நடைமுறைகள் குறித்து ஆசிரியர்கள் கொண்டிருக்கும் புலக்காட்சிக்கும் கற்பித்தலுக்கும் இடையில் நேரான தொடர்பு நிலவுகின்றது. மாணவருடனான உறவுகள் குறித்து நேரான புலக்காட்சியைக் கொண்ட ஆசிரியர்கள், மாணவர்களை மையமாகக் கொண்ட கற்பித்தல் உத்திகளை அதிகம் பின்பற்ற முனைகிறார்கள் என்றும், இது அதிக ஈடுபாட்டிற்கும் மேம்பட்ட கற்றல் விளைவுகளுக்கும் பங்களிக்கிறன, கலாசார ரீதியாகப் பன்முகத்தன்மை வாய்ந்த சூழல்களில், தொழில்முறை மேம்பாட்டின் மூலம் வலுவானதும் ஒத்துணர்வானதுமான ஆசிரியர்-மாணவர் உறவை வளர்ப்பதன் முக்கியத்துவத்தை இந்த முடிவுகள் எடுத்துக்காட்டுகின்றன. உறவுமுறை தொடர்புகளுக்கு முக்கியத்துவம் அளிப்பதன் மூலம் கல்வித் தரத்தையும் சமத்துவத்தையும் மேம்படுத்த முடியும் என்பது இந்த ஆய்வினூடாக வெளிப்படுத்தப்பட்டது. |
en_US |