Abstract:
மாணவர்கள் தாம் கற்ற கல்விக்கேற்ப சிறந்த தொழிலைப் பெறுவதென்பது அவர்களது
எதிர்கால வாழ்க்கைக்கு மிக முக்கியமானதாகும். எனினும் தொழில் உலகில் ஏற்பட்டு
வருகின்ற போட்டி வளர்ச்சிக்கேற்ப கற்றல் செயற்பாடுகளில் பெரும்பாலான மாணவர்கள்
தமது தொழில் ஆர்வம் தொடர்பாக அக்கறையற்று இருப்பதனைக் காணலாம். தமது
விருப்பங்களுக்கும் திறமைகளுக்கும் ஏற்றவாறான தொழில்களைத் தெரிவுசெய்யாது
வாழ்க்கைக்காலம் முழுவதும் பல்வேறு சவால்களுக்கு முகங்கொடுக்க வேண்டியநிலை
உருவாகின்றது. இந்த ஆய்வுப்பிரதேசத்திலும் மாணவர்கள் தமது எதிர்காலத்தொழில்
தொடர்பான முன்திட்டமற்றவர்களாகக் காணப்படுகின்றனர். அந்தவகையில் இந்த
ஆய்வானது மாணவர்களின் தொழில்சார்பான எதிர்பார்ப்புக்களை இனங்காண்பதுடன்,
அவர்களின் எதிர்கால தொழில் ஆர்வத்தில் செல்வாக்குச் செலுத்தும் குடும்பம், மாணவர்
மற்றும் பாடசாலை சார்பான காரணிகளைக் கண்டறியும் முகமாக மேற்கொள்ளப்பட்டது.
கலப்பு விபரண ஆய்வு வடிவமைப்பைப் பயன்படுத்தி அளவுசார் மற்றும் பண்புசார்
முறைகளை உள்ளடக்கிய ஆய்வாக முன்னெடுக்கப்பட்டுள்ளது. பருத்தித்துறை கல்விக்
கோட்டத்திலுள்ள ஐந்து பாடசாலைகள் எழுமாற்று மாதிரியெடுப்பு அடிப்படையில் தெரிவு
செய்யப்பட்டன. 66 ஆசிரியர்கள் மற்றும் 118 மாணவர்களிடமிருந்து வினாக்கொத்துக்கள்
மூலமும் ஐந்து பாடசாலை அதிபர்களிடமிருந்து நேர்காணல் மூலமும் தரவுகள்
சேகரிக்கப்பட்டன. தரவுகள் நூற்றுவீதப்பகுப்பாய்வு, மையநிலை அளவீடுகள் மற்றும் கருப்
பொருள் பகுப்பாய்வுக்கு உட்படுத்தப்பட்டு விளக்கமளிக்கப்பட்டன. இவ்வாய்வு முடிவுகளின்
படி 94சதவீதமான மாணவர்கள் எதிர்காலவாழ்க்கைக்கு தொழிலை மேற்கொள்வதற்கு
விருப்பமுடையவர்களாக காணப்படுகின்றனர். மாணவர்களின் தொழில் ஆர்வத்தினை
தீர்மானிக்கின்ற குடும்பக்காரணிகளாக குடும்பத்தின் கல்விநிலை 70சதவீதமும்,
குடும்பத்தின் தொழில்நிலை 32சதவீதமும் செல்வாக்கு செலுத்துவதோடு குடும்ப ஒத்துழைப்
பின்மை 64சதவீதமாக காணப்படுகின்றது. மாணவர்சார் காரணிகளில் தொழில் வழிகாட்டல்
தேவை என்ற மனப்பாங்கு 69சதவீதமும், பாடசாலை சார்பான காரணிகளில் தொழில்சார்
அமைப்புக்கள் செயலமர்வுகளை நடாத்தாமை 64சதவீதமும் காணப்படுகின்றது. குடும்ப
ஒத்துழைப்பு போதாமை, தேசிய தொழில்சார் தகைமை பற்றிய விழிப்புணர்வின்மை,
பாடத்தெரிவில் சுயவிருப்பம் அதிக செல்வாக்கு செலுத்துகின்றமை, அரசதுறை சார்ந்த
தொழிலில் அதிக ஈடுபாடு, தொழில் வழிகாட்டல் செயற்பாட்டின் வினைத்திறனற்ற தன்மை
போன்றன மாணவர்களின் தொழில் ஆர்வத்தில் தாக்கத்தினை ஏற்படுத்துகின்றன. இதனை
நீக்கி தொழில் ஆர்வத்தை மேம்படுத்த பெற்றோருக்கு பிள்ளைகளது எதிர்கால தொழில்
வாழ்க்கை தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்தல், தொழிற்பயிற்சிநெறிகள் தொடர்பாக
விழிப்பூட்டல், பாடத்தெரிவின்போது தகுந்த வழிகாட்டல்களை வழங்குதல், தொழில்
வழிகாட்டல் செயலமர்வுகளை நடத்துவதனை அதிகரித்தல் போன்ற தீர்வாலோசனைகளும்
முன்வைக்கப்பட்டுள்ளது.