Abstract:
யாழ்ப்பாணப் பல்கலைக்கழக வித்தியானந்தன் நூலகத்தில் தமிழியல்சார் ஆய்வுகளுக்கான நூலகம் ஒன்றை ஸ்தாபிக்கும் செயற்றிட்டம் 2021ம் ஆண்டில் ஆரம்பிக்கப்பட்டது. இதற்கான முழுமையான நிதிப்பங்களிப்பு கந்தையா கார்த்திகேசன் நம்பிக்கை நிதியத்திலிருந்து வழங்கப்படுகிறது. இச் செயற்றிட்டத்தில் தமிழியல் ஆய்வுகளை ஊக்குவிக்கும் செயற்பாடுகளுள் ஒன்றாகத் தமிழுலகில் வாழ்ந்து மறைந்த புலமையாளர்களுக்கான எண்ணிமத்தளம் உருவாக்கப்பட்டு வருகின்றது. 'தமிழியல் கருவூலம்' எனும் இவ் எண்ணிமத்தளத்தினூடாக இலங்கை தமிழியல் சார் அறிஞர்கள் மற்றும் பெரியார்களின் தகவல்களைத தரவுத்தளத்தில் பதிவேற்றி ஓரிடப்படுத்திப் பயன்பாட்டிற்கு வழங்குதல் இச்செயற்றிட்டத்தின் பிரதான செயற்பாடாகும். அறிஞர்களின் அடிப்படைத் தரவுகள், அவர்களின் துறை சார்ந்த செயற்பாடுகள், கையெழுத்துப்பிரதிகள், புகைப்படங்கள் மற்றும் ஒலி ஒளிப் பதிவுகள் போன்றவற்றினைச் சேகரித்துத் தரவுத்தளத்தில் பதிவேற்றம் செய்வதோடு அவர்களால் எழுதப்பட்ட நூல்களின் தலைப்புப் பக்கத்தினையும் பதிவேற்றம் செய்யத் திட்டமிடப்பட்டுள்ளது. இதன் மூலம் இலங்கைத் தமிழியல் சார் அறிஞர்களின் அடிப்படைத் தகவல்கள், செயற்பாடுகள், நூல்கள் போன்றன பதிவுசெய்யப்பட்டு ஒன்றிணைக்கப்படும். இலங்கைத் தமிழியல்சார் அறிஞர்களின் தரவுத்தளமாக இதனை கட்டமைப்பதே இச் செயற்பாட்டின் பிரதான நோக்கமாக உள்ளது.
வாழ்ந்து மறைந்த மற்றும் வாழ்ந்துவரும் புலமையாளர்களின் முழுமையான வரலாற்றை இத்தளம் எதிர்காலத்தில் கொண்டிருக்கும். தமிழ்ப் புலமையாளர்கள் சார்ந்து பல்வேறு வடிவங்களில் (அச்சு, அச்சு அல்லாத) காணப்படக்கூடிய தகவல்களை ஒரிடப்படுத்தி இணையத்தினூடாக எண்ணிமத் தகவல் தேவைப்படுவோருக்கு வழங்குதல் இத்திட்டத்தின் பிரதான நோக்கமாகும். வரலாற்றிற்கு முற்பட்ட காலத்திலிருந்து இற்றைவரை காலங்காலமாகப் பல அறிஞர்கள் வாழ்ந்து மறைந்தனர். இவர்களுள் காலத்தால் மூத்த அறிஞர்களின் வாழ்வியலை ஆவணப்படுத்துதல் இச்செயற்றிட்டத்தின் பிறிதோர் நோக்கமாகும்.