Abstract:
உலகமெங்கும் சமூக வலைத்தளங்களினுடைய பாவனை அதீதமாக வளர்ந்து வருகின்றது. உலக மக்கள் தொகையில் சுமார் முந்நூற்றுப் பதினேழு கோடி மக்கள் இணையத்தளத்தைப் பயன்படுத்தி வருகின்றனர். அதில் இருநூறு கோடி பேர் சமூக வலைத்தளங்களின் தொடர்பில் இருக்கின்றனர் என்கிறன ஆய்வுகள். சமூக வலைத்தளங்களின் பயன்பாட்டில் நன்மைகளும் தீமைகளும் கலந்தே இருக்கின்றன. இதன் நன்மைகளை எப்படி வாழ்வுக்குப் பயன்படுத்திக் கொள்வது என்கின்ற பார்வை மட்டுமே அனைவரையும் முன்னோக்கி நகர்த்தும். இறையாட்சி விழுமியங்களின் ஆரம்பத் தொடர்பு ஊடகமாகத் திரு அவை செயலாற்றி வருகின்றது. திரு அவை உருவாகியபோதே உடைந்துபோன தொடர்பாடல் மீண்டும் புதுப்பிக்கப்பட்டது. இம்மொழிக்குழப்பம் திரு அவையின் பிறப்பு நாளாகிய பெந்தக்கோஸ்து அன்று சீர்செய்யப்பட்டு செம்மையான தொடர்பாடலுக்கான வழி திறந்து வைக்கப்பட்டது. அத்தோடு திரு அவையின் தொடர்பாடலுக்கு தூய ஆவியின் உடனிருப்பு மிக முக்கியமானது என்பதும் இங்கு வலியுறுத்தப்படுகின்றது. தொடக்கத் திரு அவையில் ஒருவரை ஒருவர் அறிந்து கொள்ளவும், ஒருவரோடு ஒருவர் மனந்திறந்து உரையாடவும் வாய்ப்பு ஏற்பட்டது என்று கூறப்படுகின்றது. திருத்தூதர்கள் இயேசுவின் இறையாட்சிப் பணியை ஆற்ற பல மக்கள் தொடர்பு முறைகளைக் கையாண்டுள்ளனர். இவ்வாறு நடைமுறையிலும் செயற்படுவிதத்திலும் திரு அவை இறையாட்சிக்கு ஊழியம் புரிகின்றது. தற்காலத் திரு அவையின் இறையாட்சிப்பணியில் சமகால சமூக வலைத்தளங்களின் வகிபங்கு காத்திரமானது. இயேசுவின் இறைவாக்குப் பணியைத் தொடரும் மாபெரும் பொறுப்பை சமகால சமூக வலைத்தளங்கள் பெற்றுள்ளன. சமகாலத்தில் திரு அவை இயேசுவின் நற்செய்திப்பணியை ஆற்றுவதற்கு சமூக வலைத்தளங்களின் தேவையை உணர்ந்துள்ளது என்பது வலியுறுத்தப்படுகின்றது. சமூக வலைத்தளங்கள் இறைமக்கள் வாழ்வில் இறையாட்சி மதிப்பீடுகளை உருவாக்கி உயர்ந்த ஒரு சமுதாயத்தைப் படைக்க உறுதுணையாகின்றன. இறையாட்சி விழுமியங்களை சுதந்திரமாகவும், திறம்படவும் அறிவித்து கிறிஸ்தவத்தின் மையத்தை உலகின் பிற பகுதிகளோடு தொடர்பு கொள்ளச் செய்வதே இவற்றின் பணியாக உள்ளது போன்ற கருத்துக்களும் இங்;கு வலியுறுத்தப்படுகின்றது. சமூக வலைத்தளங்கள் கடவுளின் கொடைகள் என்ற உண்மையை உணர்ந்து இத்துறைசார்ந்த எல்லா வழிவகைகளையும் பயன்படுத்தி அதனூடாக குறிப்பாக இயேசுவின் இறையாட்சி விழுமியங்கள் மங்கிப்போய்க் கொண்டிருக்கும் இன்றைய சூழலில் இவ்விழுமியங்களைக் கட்டிக்காக்க இவ்வலைத்தளங்களைத் திறம்பட பயன்படுத்தவது பொறுப்புள்ளவர்களின் கடமையாகும். இதனைக் கருத்தில் கொண்டு சமூக வலைத்தளங்கள் கடவுளின் கொடைகள் என்ற உண்மையை உணரச் செய்து “இயேசுவின் இறையாட்சிப்பணியை இன்று நம் மத்தியில் பரப்புவதிலும், நிலைநாட்டுவதிலும் சமூக வலைத்தளங்களின் பங்கு இன்றியமையாதது” என்பதை வெளிக்கொணர்வதே இந்த ஆய்வின் நோக்கமாகும். இந்த ஆய்வில் இயேசுவின் இறையாட்சி பற்றிய போதனைகள், விழுமியங்கள், படிப்பினைகளைப் பெற்றுக்கொள்ள நூல்கள் பயன்படுத்துவதனால் உய்த்தறிவு முறை பயன்படுத்தப்படுகின்றது. மேலும் இன்றைய காலகட்டத்தில் சமூக வலைத்தளங்கள் எவ்வாறு இறையாட்சி விழுமியங்களைப் பரப்பப் பங்களிப்பு செய்கின்றன என்பதை அறிந்து கொள்ளச் சான்றுவழி ஆதாரமுறை பயன்படுத்தப்படுகின்றது. சமகாலத்தில் அதீத பாவனையில் உள்ள சில சமூக வலைத்தளங்கள் மற்றும் அவற்றின் செயற்பாடுகள் போன்றவற்றை அடிப்படையாகக் கொண்டு முதலாவது இயல் பகுப்பாய்வு செய்யப்படுகின்றது. இறையாட்சி விழுமியங்களின் ஆரம்பத் தொடர்பு ஊடகமாகத் திரு அவை செயற்பட்டு வருகின்றமை இரண்டாவது இயலில் பகுப்பாய்வு செய்யப்படுகின்றது. மூன்றாவது இயலானது இரு இயல்களிலும் பகுப்பாய்வு செய்யப்பட்ட விடயங்களை மையப்படுத்தித் தொகுப்பாய்வுக்கு உட்படுத்தப்படுகின்றன.