dc.description.abstract |
இலங்கையின் கிழக்குப் பிராந்தியத்திலுள்ள மட்டக்களப்பு, அம்பாறை மாவட்டங்களை 1960களுக்கு முன்னர் மட்டக்களப்பு தேசம் என அழைக்கும் வழக்கம் நிலவியது. மட்டக்களப்பு தேசத்தில் வழக்கிலுள்ள வழிபாட்டு மரபுகளை இருபெரும் பிரிவுகளாக வகைப்படுத்தி நோக்க முடியும். அவற்றிலே ஆகம சிற்பசாத்திரங்களை அடிப்படையாகக் கொண்டு இயற்றப்படுவது ஒரு வகை, மற்றைய வகை, மரபு வழியாகப் பேணப்பட்டும், பத்ததிகளை ஆதாரமாகக் கொண்டும் இயற்றப்படுவது ஆகும். மேற்குறிப்பிட்ட இரண்டாம் வகைக்குரிய வழிபாட்டு மரபுகளே இப்பிராந்தியத்தில் பிரசித்தமானவை. இவ்வகை வழிபாட்டில் பத்ததிகளின் வகிபாகம் இன்றியமையாதது. வழிபாட்டிற்குரிய பூசைவிதி முறைகளையும் அதற்கான மந்திரங்களையும், பாவனைகளையும் தொகுத்துக் கூறும் விதி நூலே பத்ததிகள் ஆகும். பத்ததியைப் பத்தாசி எனவும் அழைப்பர். பத்தாசி என்பது மட்டக்களப்பு தேசத்து மக்கள் மத்தியில் பயில்நிலையில் உள்ள பிரதேச வழக்காற்றுச் சொற்பதமாகும். அவற்றிலே பல உப்பிரிவுகளும் உள்ளன. கண்ணகையம்மன் பத்ததியில், கூனற்பலகை விதிமுறை, திரைசேர்மடந்தைப்பத்ததி, சிந்களப்பத்ததி, குளக்கட்டுப்பத்ததி எனப் பல உப்பிரிவுகளும் உண்டு. இவை பிரதேசத்திற்குப் பிரதேசம் கோயிலுக்குக் கோயில் வேறுபடுகின்றன. கன்னன்குடா கண்ணகையம்மன் கோயில் வழிபாட்டுக்கு ஆதாரமான பத்ததி கூனற்பலகை விதிமுறையாகும். இப்பத்ததியில் பூசகர் விதிமுறை, கங்கை அரட்டுதல் (தீர்த்தம் எடுத்தல்) கதவு திறத்தல், கும்பம் வைத்தல், மடை வைத்தல், மந்திரப்பானை, செயல்முறை, யந்திரங்கள் முதலிய இன்னோரன்ன அம்சங்கள் காணத்தக்கன. பத்ததிகள் வழிபாட்டை நெறிப்படுத்தும் விதிநூல்கள் உன்ற வகையில் அவற்றின் தோற்றம் தொடர்பான காலத்தினை அறிதல், ஏனைய தெய்வ வழிபாடுகளைக் கூறுகின்ற பத்ததிகளுடன் கூனற்பலகை விதிமுறையினை ஒப்பு நோக்குதல், பொதுவாக பத்ததிகளுக்கிடையிலான பொதுமைகளையும், தனித்துவங்களையும் இனங்காணுதல் முதலியன இவ்வாய்வின் நோக்கங்களாகும். இவ்வாய்வுக்கு முதல்நிலைத் தரவுகளாகத் தற்காலத்தில் வழக்கிலுள்ள பத்ததிகளும், இரண்டாம் நிலைத்தரவுகளாகப் பத்ததிகள் தொடர்பாக வெளிவந்துள்ள நூல்கள், சஞ்சிகைகள், பத்திரிகைகள், இணையத்தளக் குறிப்புகள் ஆகியன உபயோகிக்கப்பட்டுள்ளன. பெரும்பாலும் இந்த ஆய்வு வரலாற்றியல் ஆய்வு முறையியல், விபரண ஆய்வு முறையியல் மற்றும் ஒப்பீட்டு ஆய்வு முறையியைலைப் பின்பற்றிச் செய்யப்படுகின்றது. ஆய்வின் முடிவாக, மட்டக்களப்பில் பத்ததி முறையிலான வழிபாடுகள் சமஸ்கிருதமயமாக்கம் காரணமாகத் தனித்துவங்களை இழந்து வரும் அதேவேளை பழைமையான பத்ததிகளும் மறைபொருளாக்கப்பட்டுள்ளன. பத்ததிகளைக் குறித்த பரம்பரையினர் தவிர ஏனையோர் கைகளுக்கு சேரக்கூடாது என்ற மனோநிலை காரணமாக பல பத்ததிகள் அழிந்து போயுள்ளன. எஞ்சியுள்ள பத்ததிகளில் கன்னன்குடா கண்ணகையம்மன் பத்ததியும் ஒன்று. இப் பத்ததி வாய்மொழி மரபாக இருந்து, ஏட்டு வடிவில் எழுதப்பெற்று பின்னர் கையெழுத்துப் பிரதியாக மாற்றம் பெற்று அச்சுருப்பெற்றுள்ளமை மட்டக்களப்பில் பத்ததி தொடர்பாக்க் காணத்தக்க ஒரு சிறந்த முன்னேற்றமாகும். |
en_US |