dc.description.abstract |
சைவமக்கள் இரண்டு வகையான வழிபாட்டு முறைகளைக் கையாள்கின்றனர். ஒன்று ஆகம வழிபாட்டு முறையாகும். மற்றையது ஆகமம் சாராத கிராமிய வழிபாட்டு முறையாகும். இக்கிராமியத்தெய்வத்தினை குல தெய்வம், நாட்டார் தெய்வம், சிறுதெய்வம் எனவும் அழைக்கின்றனர். இவ்வழிபாடானது கிராமப் புற மக்களின் வழிபாடாகவும் காணப்படுகின்றது. யாழ்பாணக் குடாநாட்டின் வடக்குக் கிழக்குப் பகுதியாக வடமராட்சிப் பிரதேசம் அமைந்திருக்கிறது. வடமராட்சிப் பிரதேசத்தில் பாரம்பரியமாக்ப் பேணப்பட்டு வந்த இவ்வழிபாடானது ஆகமம்மயாக்கலுக்கு உள்ளாகாமல் தொடர்ந்து பேணப்டுகிறது. இப்பிரதேசத்தில் சிறு தெய்வ வழிபாட்டிடங்களும், வழிபாட்டு முறைகளும் சிறப்பிடம் பெறுகின்றன. இப்பிரதேசத்தில் சிறுதெய்வங்களான காளி, காத்தவராயன், நரசிம்மர் பூதவராயர், மாடன், முனி, வாலையம்மன், முதலிப்பேச்சி, வீரபத்திரர், நாகதம்பிரான், வைரவர், காத்தாசி, கன்னியம்மன், அம்மிணி, பிள்ளையார், ஐயனார், கண்ணகியம்மன், நாச்சியார், அண்ணமார், முருகன், மாரியம்மன், சீதையம்மன், முனியப்பர், பெரியதம்பிரான், ஆஞ்சநேயர், விறுமர், முதலி, மோகினி, திரௌபதியம்மன் ஆகியவற்றிற்கான கோவில்கள் காணப்படுகின்றன. இங்கு பெரும்பாலும் மரத்தடி, குளம், ஏரி போன்றவற்றிற்கு அருகிலும் திறந்த வெளிகளிலும், பெரிய மரங்களின் கீழும் தெய்வமாகக் கருதி வழிபடத்தக்க வேல், கல், சூலம் போன்றவற்றை வைத்து வழிபாடு செய்கின்றனர். சில இடங்களில் பீடங்கள் அமைக்கப்பட்டு வழிபாடுகள் மேற்கொள்ளப்படுகின்றன. அதாவது வழிபடுவோரின் பொருளாதார நிலைக்கேற்ப கோயில் அமைப்பும் தெய்வ உருவங்களும் வேறுபட்டுக் காணப்படுகின்றன. மக்கள் தம் சமூகத்தின் விருப்பு வெறுப்புகளுக்குத் தக்கவாறு வழிபாட்டு முறைகளை அமைத்துக் கொள்கின்றனர். இந்த ஆய்வின் நோக்கம் இப்பிரதேச ஆலயங்களின் கிராமிய வழிபாட்டின் சிறப்பினை இளம் தலைமுறையினருக்குக் கையளிப்பதுடன் கிராமிய வழிபாட்டின் சிறப்பினை வெளிக்கொணர்தலும் ஆகும். இந்த ஆய்வானது வரலாற்றியல் ஆய்வு முறையாகவும், ஒப்பீட்டு ஆய்வு முறையாகவும் காணப்படகின்றது. ஆலயங்கள் தொடர்பான வரலாற்று நூல்களும் கள ஆய்வும் முதனிலைத் தரவாக கொள்ளப்படுகின்றது. மேலும் மாநாட்டு மலர்கள், பருவ இதழ்கள், ஆய்வுக் கட்டுரைகள், கும்பாபிஷேக மலர்கள் போன்றன இரண்டாம் நிலைத் தரவுகளாகவும் அமைகின்றன. தேவையேற்படுகின்ற போது இவ்வழிபாடு பற்றி உரியவர்களிடம் செவ்வி காணலும் இடம்பெறுகின்றது. |
en_US |