dc.description.abstract |
நாயன்மார்களில் ஒருவராகத் திகழும் மாணிக்கவாசகரின் திருவாசகமானது பன்னிரு திருமுறைகளின் வரிசையில் எட்டாந் திருமுறையில் வைத்துப் போற்றப்படுகிறது. தெய்வத்தன்மை வாய்ந்த வாசகம் “திருவாசகம்”என்னும் சொல்லுக்கமைய இது ஐம்பத்தொரு பதிகங்களால் தத்துவக் கருத்துக்களையும், வாழ்வியல் கோட்பாடுகளையும், பக்திச் சுவையையும் விளக்குவதாக அமைந்துள்ளது. திணிந்த இருளில் கட்டுண்டு கிடக்கும் ஆன்மா பேரொளியைத் தேடிச்செல்லுங்கால் தோன்றும் பல வகையான நிகழ்ச்சிகளையும், உணர்ச்சிகளையும் சுவைபொதிந்த திருப்பதிகங்களால் எடுத்தோதும் தெய்வீகக் கவிதையாகவும் இது விளங்குகின்றது. திருவாசகத்தை பக்திப் பாடலாக மட்டும் பார்க்காமல் அதனை கவிதையாக பார்க்க வைப்பது அதன் கண்ணுள்ள உவமைகளும், மெய்ப்பாடுகளுமேயாகும். இவையே கவிதைக்கு அழகைத் தருவன. அந்த அழகு படிப்போரின் உள்ளத்தைக் கவர்ந்து நெஞ்சை உருக்கவைப்பதாக உள்ளது. உள்ளத்தை உருக்கும் மெய்ப்பாடுகளுள் அழுகை என்ற மெய்ப்பாட்டினை மாணிக்கவாசகர் எவ்வாறு பயன்படுத்தியுள்ளார் என்பதனை எடுத்துக் காட்டுவதே இவ்வாய்வின் நோக்கமாகும். விபரண முறை, பகுப்பாய்வு முறை ஆகிய அணுகுமுறைகளில் இந்த ஆய்வானது மேற்கொள்ளப்பட்டு ஆய்வுமுடிவுகள் பெறப்பட்டன. இவ்வகையில் திருவாசகத்தில் மாணிக்கவாசகர் தமது பக்தி வைராக்கிய நிலையினை வெளிப்படுத்தும் விதமாக மெய்ப்பாட்டினை ஓர் உத்தியாகக் கையாண்டுள்ளார். மெய்ப்பாட்டியலில் ஒன்றாகிய அழுகை என்பது பக்திப் பாடல்களில் துன்பத்தின் வெளிப்பாடன்று. இறையருளை முழுமையாகப் பருக நினைக்கும் போது அடியவர்களது உள்ளத்து உணர்வாக அழுகை என்னும் உணர்ச்சி வெளிவருகின்றமையினைக் கண்டுகொள்ளக் கூடியதாகவுள்ளது. தொல்காப்பியர் கூறிய அழுகையெனும் மெய்ப்பாட்டையும் அது தோன்றுவதற்கான நிலைக்களன்களையும் திருவாசகப்பாடல்களில் மாணிக்கவாசகர் பயன்படுத்தியதோடு அவற்றை இன்னும் விரிந்த தளத்திற்கு இட்டுச்சென்றுள்ளமையை இவ்வாய்வின் வழி கண்டுணரமுடிகிறது. |
en_US |