Abstract:
சடங்குகள் என்பது ஓர் இனத்தின் பண்பாட்டு பிரதிபலிப்புக்களாகும். சடங்கு முறைகள் ஒவ்வொன்றும் ஒரு சமுதாயத்தின் பண்பாட்டுக் கோலங்களைச் சித்தரிக்கும கருவிகளாகும். ஒரு மனிதன் பிறப்பது முதல் இறக்கும் வரை பல சடங்கு முறைகளுடன் கூடவே வாழ்ந்து வருகின்றான். மனித சமுதாயம் பயத்துடன் கூடிய பக்திமுறையாகச் சடங்கு நெறிமுறைகளைக் கைக்கொண்டு வருகின்றது. இந்த ஆய்வுக் கட்டுரையானது யாழ்ப்பாண பிரதேச இந்து நமுதாயத்தினை அடிப்படையாகக் கொண்டு அவர்களின் சடங்கு முறைகளுடன் வழிபாட்டு முறைகள் சிலவற்றில் பயன்படுத்தப்படும் மொழிப்பிரயோகத்தை, குறிப்பாகச் சடங்கு முறைகளில் பயன்படுத்தப்படும் சொற்பிரயோகங்கள் அடையாளம் காணப்பட்டு அவற்றின் தற்காலப் போக்கு பற்றியதாக அமைகிறது. இவ்ஆய்வுக் கட்டுரையானது யாழ்ப்பாண இந்து சமுதாயத்தில் சடங்குகள் ஊடாக வெளிப்படுத்தப்படும் மொழிப்பயன்பாட்டினையும் அதன் சமகாலப் போக்கினையும் ஆய்வு செய்வதினை நோக்கமாகக் கொண்டுள்ளது. இந்த ஆய்வானது விபரண ஆய்வு முறையியலாகவும் (Descriptive methodology) கள ஆய்வு முறையியலாகவும் அமைவதுடன் ஆய்வினுடைய நோக்கத்தினை அடையும் வகையில் முதல்நிலைத் தரவாக அவதானிப்பு முறை (Observation method) பயன்படுத்தப்படுகிறது. இரண்டாம் நிலைத் தரவாக ஆய்வோடு தொடர்புடைய நூல்கள், ஆய்வுக்கட்டுரைகள் என்பன எடுத்துக்கொள்ளப்படுகின்றன. ஆய்வு முடிவாக யாழ்ப்பாண பிரதேச இந்து சமுதாயத்தில் பயன்படுத்தப்படுகின்ற சடங்குகள் சார்ந்த பல சொற்கள் வழக்கொழிந்து போய்க்கொண்டிருக்கின்றன. அதற்கான காரணந்களாக, பிறநாட்டார் தொடர்பு, கிராமப்புறங்களிலிருந்து நகர்ப்புறம் நோக்கிய மக்கள் இடப்பெயர்வு, நாகரிகப்போக்கு, பிறமொழித் தாக்கம் என்பவற்றைக் குறிப்பிடலாம். இவ்வகையில் ஆவணப்படுத்தல் செயற்பாடுகளை மேற்கொண்டு ஒவ்வொரு காலத்திற்குமுரிய சடங்குசார் முறைகளும், அவற்றிற்குரிய மொழிப்பயன்பாடுகளையும் நம் சமுதாயத்திலிருந்து மறைந்து போகாமல் பேணப்பட வேண்டியது அவசியமானதென இந்த ஆய்வு பரிந்துரை செய்கிறது.