Abstract:
இலங்கையின் நவீன வரலாற்றில் போர்த்துக்கேயரைத் தொடர்ந்து ஒல்லாந்தர்கள் கி.பி 1658 – 1796 வரையான காலப்பகுதியில் தமது ஆதிக்கத்தை ஏற்படுத்தியிருந்தனர். இவர்கள் இலங்கையின் கரையோரப் பிராந்தியங்களை கொழும்பு, காலி, யாழ்ப்பாணம் என மூன்று “கொமாண்டரி“களாக (Commandry) வகுத்து நிர்வாகத்தை மேற்கொண்டனர். இந்த நிர்வாக ஒழுங்குமுறையில் ஆளுநர்களின் பங்களிப்பு பிரதானமானது. இலங்கையில் மூன்று முறை ஆளுநராக இருந்த “றிக்லோஃப் வான்கோயன்ஸ் (Ryckloff Vangoens) (1660-1661), 1663, 1664-1675) காலத்தில் யாழ்ப்பாணக் “கொமாண்டரி“யானது தனித்துவமான பிராந்தியமாக விளங்கியதுடன், அவரது நிர்வாகத்தின் கீழ் அதன் அரசியல், பொருளாதார, சமய, சமூக ரீதியில் பல்வேறு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டன. போர்த்துக்கேயரின் ஆட்சிக் காலத்தைப் போலவே ஒல்லாந்தர்களது ஆட்சிக்காலத்திலும் சைவசமயமானது பல சவால்களை எதிர்கொள்ள வேண்டிய சூழ்நிலை காணப்பட்டது.ஒல்லாந்தரது புரட்டஸ்தாந்து சமயக் கொள்கையை இப்பிராந்தியத்தில் நிலைப்படுத்திக் கொள்வதற்காக முன்னெடுக்கப்பட்ட செயற்பாடுகள் சைவசமயப் பண்பாடு தளர்வடையக் காரணமாக இருந்தன. ஒல்லாந்தரின் மதக்கொள்கைகளை நிலைநாட்டுவதில் போர்த்துக்கேயரால் பரப்பப்பட்ட கத்தோலிக்க மதமும் சுதேச சமயங்களும் தடையாகக் காணப்பட்டன. ஆயினும் ஒல்லாந்தர்கள் கத்தோலிக்க சமயத்தின் மேல் காட்டிய இறுக்கமான கொள்கைகளைச் சைவசமயத்தின் மீது பிரயோகிக்கவில்லை. குறிப்பாக வான்கோயன்ஸின் நிர்வாகத்தில் சைவசமயம் தொடர்பாகச் சற்று நெகிழ்வான போக்கு கடைப்பிடிக்கப்பட்டதைக் காணமுடிகிறது. இப்பின்னணியில் யாழ்ப்பாணக் “கொமண்டரி“யில் ஆளுநர் வான்கோயன்ஸ் காலத்தில் சைவசமயத்தின் நிலையைக் கண்டறியும் நோக்குடன் இவ்வாய்வு மேற்கொள்ளப்படுகிறது. இவ்வாய்வானது முதலாம், இரண்டாம் நிலைத் தரவுகளைப் பயன்படுத்தி வரலாற்று அணுகுமுறையைப் பின்பற்றி மேற்கொள்ளப்படுகின்றது. முதலாம் நிலைத் தரவுகளான வான்கோயன்ஸினால் வெளியிடப்பட்ட டச்சு ஆவணங்கள், அறிக்கைகள், மேலாணைகள், குறிப்புக்கள், கடிதங்கள் போன்றன பயன்படுத்தப்படுகின்றன. இந்த ஆய்வினை மேற்கொள்வதன் மூலம் வான்கோயன்ஸின் நிர்வாக நடவடிக்கையில் கடைப்பிடிக்கப்பட்ட புரட்டஸ்தாந்து மதக்கொள்கைகள் சைவசமயத்தவர்களுக்கு எத்தகைய நிலையைத் தோற்றுவித்தன என்பது தொடர்பிலும் அக்கொள்கைகளினால் சைவசமயத்தவர்களுக்கு ஏற்பட்ட சாதக, பாதக அம்சங்கள் தொடர்பிலும் அறிந்துகொள்ளலாம்.