dc.description.abstract |
இலங்கையில், குறிப்பாக யாழ்ப்பாண சமுதாய மொழிச்சூழலில் பழைமை போற்றும் பண்பும், பண்டைய மொழிக்கூறுகளை வலியுறுத்தும் பாங்கும் வழக்கிலிருப்பதே இயல்பானதே. பழைமைக் கூறுகளின் ஸ்திரத்தன்மை தொடர்ந்தும் நிலைத்திருப்பதனை வெளிப்படுத்தும் முகமாக இலங்கை தமிழ் சொற்றொகுதி அமையப்பெற்றுள்ளது. இவை யாழ்ப்பாணத் தமிழரின் பாரம்பரிய மரபுரிமையினை நிலைநாட்டுவனவாக விளங்குகின்றன. மரபுரிமைச் சொத்துக்களைப் பாதுகாத்து அடுத்த தலைமுறையினருக்கு வழங்க வேண்டிய தலையாய கடமையினை உணர்ந்து அவற்றுடன் தொடர்புடைய சொற்றொகுதிகளையும் பாதுகாத்து, ஆவணப்படுத்துவதும் அவசியமே. அந்தவகையில் கலாசார மரபுரிமையின் ஓர் அங்கமாக விளங்கும் பிரயோக்க்கலையாகிய மரச்சிற்பக் கலை, விஸ்வகுலத்தைச் சார்ந்த மரச் சிற்பாசாரிய சமுதாயத்தினரால் கடந்த பல்லாயிரம் ஆண்டுகளுக்கு மேலாகப் பின்பற்றப்படும், புதிய பரிமாணங்களையும் உள்வாங்கி, தொடர்ந்தும் வழக்கிலிருப்பதுடன் அடுத்த தலைமுறையினருக்குக் கற்றுக்கொடுக்கப்பட்டும் வருவது சிறப்பானதொரு அம்சமாகும். மிக நீண்ட வரலாற்றினையுடைய யாழ்ப்பாண மரச்சிற்பக் கலையுடன் தொடர்புடைய கலைச்சொற்கள், குறிப்பிட்ட பயன்பாட்டெல்லையினைக் கொண்டிருப்பதனை யாழ்ப்பாணச் சிற்பக்கலைஞர்களின் மொழிப்பயன்பாட்டின் மூலம் அறியமுடிந்தது. இதுவரை காலமும் மேற்கொள்ளப்பட்ட மொழியியல் ஆய்வுகள் எவையும் மரச்சிற்பக் கலைஞர்களினது சிற்ப மொழி பற்றி முழுமையாக ஆய்வு செய்யவில்லை. இதன் விளைவாக இந்த ஆய்வானது யாழ்ப்பாண விஸ்வகுல சமூகத்தினைச் சார்ந்த குறிப்பாக அராலி ஸ்ரீ விஸ்வேஸ்வரி சிற்பாலய மரச்சிற்பக் கலைஞர்கள் மரபுவழியாகப் பயன்படுத்தி வருகின்ற மரச்சிற்ப தொழில் சார் கலைச்சொற்களைத் தொகுத்து அவற்றிற்குரிய விரிவான பொருள் விளக்கத்தினை வழங்குதல் அக்கலைச்சொற்களின் பயன்பாட்டு எல்லையினை விளக்கதல் ஆகியவற்றினைப் பிரதான நோக்கங்களாக்க் கொண்டுள்ளது. நேரடி அவதானிப்பின் மூலமாகவும், நேர்காணல் மூலமாகவும் பெறப்பட்ட கலைச்சொற்கள் கலைச்சொல் அகராதியில் நெறிமுறைகளுக்கு உட்பட்டு விளக்கமுறை மொழியியல் அடிப்படையில் ஆய்விற்குட்படுத்தப்ட்டன. மரச்சிற்ப தொழில் சார் கலைச்சொற்கள் விஸ்வகுல சமூகப் பண்பாட்டு அடையாங்கள், பழக்கவழக்கங்கள், ஆலயங்கள் மற்றும் சமயச்சடங்குகள், கிரியைகளுடனான தொடர்பு போன்றவற்றினை மிக நேர்த்தியாக வெளிப்படுத்தி நிற்றலின் பொருட்டு யாழ்ப்பாணத் தமிழ்த் தொழில்சார் கிளைமொழி வரலாற்றில் முக்கிய இடம் வகிப்பதனை வெளிக்கொணர முடிந்தது. சொற்களின் காப்பகமாக விளங்கும் கலைச்சொல் அகராதிகளின் தொகுப்பினால் மட்டுமே மரபு வழியிலான கலைச்சொற்களின் வழக்கிழந்து செல்லும் தன்மையினைத் தடுத்து நிறுத்த முடியும் என்பது இந்த ஆய்வின் பரிந்துரையாகும். |
en_US |