Abstract:
தமிழகப் பண்பாட்டு மரபுகளைப் புலப்படுத்தும் சைவத்தமிழ் இலக்கியங்களுள் பெரியபுராணம் தனிச்சிறப்புடையது. இப்பண்பாட்டுப் பனுவலைப் படைத்தவர் அருண்மொழித்தேவர். தமிழ் நாட்டில் பல்வேறு இடங்களில், வெவ்வேறு காலங்களில் வாழ்ந்த தனியடியார்கள் அறுபத்து மூவரும் தொகையடியார்கள் ஒன்பது பேருமாக மொத்தம் எழுபத்திரெண்டு திருத்தொண்டர்களின் வரலாற்றையும், மகிமையையும் கூறுகிறார். இதனைச் சேக்கிழார் இரு காண்டங்கள், பதின்மூன்று சருக்கங்கள், எழுபத்தெட்டு புராண உட்பகுப்புக்கள், நாலாயிரத்து இருநூற்று எண்பத்தாறு விருத்தங்களாக்க் கட்டமைத்துள்ளார். சிவனடியார்களின் வரலாற்றினை ஊர்தோறும் தேடிச்சென்று பக்தி சார்ந்த வரலாற்றுக் காப்பியமாகப் பதிவு செய்வதிலும் தமிழகப் பண்பாட்டை முதன்மைப்படுத்துவதிலும் சேக்கிழார் வெற்றி பெற்றுள்ளார். ”உலகெலாம் உணர்ந்து” என்று தொடங்கும் கடவுள் வாழ்த்துடன் காவியத் தொடக்கத்தை ஏற்படுத்தி அறம், பொருள், இன்பம், வீடு என்ற வகையில் சுந்தரரின் வாழ்வியலைக் காட்டுகிறார். வருபொருள் உரைத்தல் என்னும் நிலைப்பாட்டில் அடியார்களின் வரலாற்றை வெளிப்படுத்தி பாவிக மரபு குறையாமல் காப்பியத்தைக் கட்டமைக்கிறார். உலகியல் இன்பங்களை ஆன்மிகத்தோடு இணைத்துப்பாடும் மரபும் இங்கு முக்கியமானது. காதல், மணம், முடிசூட்டு, தூது, போர், வெற்றி உள்ளிட்ட பல விடயங்களைக் கூறி, காவியத்திற்குரிய புதுமையான மற்றும் பொதுமையான பண்புகளையும் அறிமுகப்படுத்துகிறார். இது இலக்கியச் சிறப்புக்களை உடையதாய், கற்பனை வளம், வர்ணனைச் சிறப்பு, சொல்லாட்சி, அணிகள் என்பவை ஒருமிக்கும் காப்பியமாகப் படைப்பதில் சேக்கிழார் வெற்றி பெறுகிறார். தமிழ்நாட்டுச் சமூகப் பின்புலத்துடன் வரலாற்றுப் போக்கில் இக்காப்பியத்தைப் படைத்தாலும், மும்மலக்கொள்கை, வினைக் கொள்கை, இருவினையொப்புக் கொள்கை, சமயப் பண்பாடு, திருக்கோயில் வழிபாடு, குருலிங்க சங்கம வழிபாடு, கல்வி மரபுகள், கலைமரபுகள் உள்ளிட்ட சைவப்பண்பாட்டு மரபுகளையும் வெளிப்படுத்தித் தான் கூற வந்த காப்பிய நோக்கத்தை (முத்தியின்பம்) அடியார்களின் வாழ்க்கை நெறிமூலம் எடுத்தியம்பிச் சைவதத்துவ உண்மையையும் நிலைபெறச் செய்துள்ளார். இதனால், சைவ பக்தி மரபைக் காப்பியக் கட்டமைப்பில் கொண்டுவருவதில் சேக்கிழாரின் புலமைத்துவம் எத்தகையது என்பதை ஆராயவேண்டிய தேவை உள்ளது. எனவே சேக்கிழாரின் பெரியபுராணப் பிரதியை வாசிப்பிற்கு உட்படுத்தி அவரின் காப்பியத்திறனை மதிப்பீடு செய்து ஆவணப்படுத்தும் நோக்கில் இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்த ஆய்வானது பண்புசார் முறைமையைக் கொண்டமைந்து, விபரணப் பகுப்பாய்வு முறை, இரசனை முறைத்திறனாய்வு ஆகிய அணுகுமுறைகளைப் பயன்படுத்தி மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்த ஆய்விற்குச் சேக்கிழாரின் பெரியபுராணப் பிரதி முதன்மைத் தரவாகப் பயன்படுத்தப்பட்டுள்ளதுடன், துணைநிலைத் தரவுகளாக ஆய்வுத் தலைப்புடன் தொடர்புடைய நூல்கள், கட்டுரைகள், இதழ்கள், மின்னூடகக் கருத்துக்கள் போன்றவையும் பயன்படுத்தப்பட்டுள்ளன. இலக்கியப் படைப்பாளிகளை முன்னிறுத்தி இது போன்ற மேலும் பல ஆய்வுகள் ஆய்வாளர்களால் முன்னெடுக்கப்பட வேண்டும் என்றும் இந்த ஆய்வு பரிந்துரை செய்கிறது.