dc.description.abstract |
சைவசமயக்குரவர்களாகப் போற்றப்படும் நாவுக்கரசர், சுந்தரர் ஆகியோரின் தேவாரத் திருப்பதிகங்கள் இறைவனின் மேன்மையையும், கருணையையும். சைவநெறியின் சிறப்பையும், அடியார்களின் ஈடுபாட்டையும் வியந்து போற்றுகின்றன. திருமுறைகள் வாழ்க்கையை முறையாக வாழ்வதற்குரிய நெறிமுறைகளைக் கூறுவன. தம் வாழ்வில் பெற்ற இன்ப துன்ப அனுபவங்களையும் அவற்றால் கண்டறிந்த உண்மைகளையும் கூறுவதுடன், அன்பும் தொண்டுமே இறைவனை அடையச் சிறந்த வழி என்பதனைத் தேவாரப்பதிகங்கள் மூலமாகக் காட்டுகின்றனர். இவற்றை எளிய நடையில் சிறுசொற்கள், சொற்றொடர்கள், இலக்கணக்கூறுகள், மொழிக்கூறுகள் மூலமாக மேன்மையான தத்துவக் கருத்துக்களையும் சிறப்பியல்புகளையும் பாமரமக்களின் மனதில் நிற்கும் வண்ணம் பாடியிருப்பதைக் காணலாம். மொழி என்பது கருத்தைப் பரிமாற்றம் செய்யும் ஊடகம் என்பது மொழியியலாளர்களது கருத்து. ஆயினும் அவ்வவ்மொழகளைப் பேசும் மக்கள் கூட்டத்திற்கு அவை உணர்ச்சிகரமான வெளிப்பாட்டுக் கருவியும்கூட. அவ்வகையில் நடையின் நல்லியல்புகளான சுருங்கச் சொல்லல், விளங்க வைத்தல், படிப்பவருக்கு இனிமை, நல்ல சொற்கையாட்சி, சொற்புணர்ச்சி, ஓசையுடைமை, ஆழமுடைத்தாதல், முறையின் வைத்தல், சிறந்த பொருள் பயத்தல், உயிரோட்டமான கற்பனை போன்றன எல்லாம் ஆறாம் ஏழாம் திருமுறைகளில் இழையோடியுள்ளதைக் காணமுடிகிறது. இப்பதிகங்களில் ஒலிநிலை, சொல்நிலை, தொடர்நிலை, பொருள்நிலை, அணிநிலை போன்ற பல மொழிக்கூறுகளைத் தத்தமக்கேயுரிய தனித்தன்மை வாய்ந்த நடையியல் உத்திமுறைகளைக் கையாண்டு பாடியுள்ளார். அம்மொழிக்கூறுகளை, நடையியற் கூறுகளை மொழியியல் அடிப்படையில் தெளிவாக ஆராய்ந்து, அவை பற்றிய சிந்தனையை வெளிக்காட்டுவதாக இந்த ஆய்வு அமைந்துள்ளது. ஆறாம் ஏழாம் திருமுறைகளில் கையாளப்பட்டுள்ள மொழிநடைப் பிரயோகங்கள் குறித்த கருத்துக்களை ஆய்வு செய்வதன் மூலம் அவர்களின் மொழிநடைச் சிறப்பையும், அவர்கள் காலத்து மொழிநடை அமைப்பினையும் அறிதலே இவ்வாய்வுக் கட்டுரையின் நோக்கமாகும். இவ்வாய்வானது ஆறாம் ஏழாம் திருமுறைகளில் கையாளப்பட்டுள்ள மொழிநடை அமைப்புக்களை விபரிக்கும் ஒரு விபரண ஆய்வாக அமைகின்றது. |
en_US |