Abstract:
பண்டைத்தமிழரின் வழிபடு தெய்வங்களாக இயற்கையின் கூறுகள் அமைந்திருந்தன. இயற்கை எழில்மிகு இடங்களில் இறைவன் விரும்பி உறைவதாகக் கருதி வழிபட்டனர். இயற்கையின் தன்மைக்கேற்ப நிலங்கள் ஐந்திணைகளாக வகைப்படுத்தப்பட்டு ஒவ்வொரு திணைகளுக்கும் உரிய தெய்வங்களும் சுட்டப்பட்டன. மலைப்பிரதேசமாகிய குறிஞ்சி நிலத்திற்குரிய தெற்வமாக முருகன் போற்றப்பட்டான். முருகனைப் பற்றிய செய்திகளோடு குறிஞ்சி நிலத்தின் இயற்கை அழகும் பழந்தமிழ் இலக்கியப் புலவர்களால் புனைந்துரைக்கப்பட்டுள்ளது. சிவனுடைய பாடல்பெற்ற தலங்களும் மலை மீதிருக்கும் கோயில்கள் மிகச்சிலவே. திருஈங்கோய்மலை எழுபது என்னும் நூல் பதினொராம் திருமுறைக்குள் அடங்குகின்றது. திருஈங்கோய்மலையில் எழுந்தருளியிருக்கும் சிவபெருமானின் திருக்கோல அழகினையும் அற்புதங்களையும் குறிஞ்சி நிலப் பின்னணியில் நக்கீரதேவனாயனார் திருஈங்கோய்மலை எழுபதில் வர்ணித்துப் பாடியுள்ளார். இவருக்கு முன்பே திருஞானசம்பந்தரும் இத்தலத்தின் மீது பதிகமொன்றைப் பாடியுள்ளமை குறிப்பிடத்தக்கது. திருஈங்கோய்மலை எழுபதை இலக்கிய நோக்காகக் கொண்டு ஆய்வு செய்வதே ஆய்வின் முக்கிய பிரச்சினையாகக் கொள்ளப்படுகிறது. நக்கீரதேவனாயனாரின் திருஈங்கோய்மலை எழுபது ஆய்வின் முதன்மை ஆதாரமாக்க் கொள்ளப்படுகிறது. இது தொடர்பாக எழுந்த கட்டுரைகள் துணைமை ஆதாரங்களாகக் கொள்ளப்படுகின்றன. இந்நூல் இலக்கிய பண்புகளைக் கொண்டு விளங்குகின்றது என்ற கருதுகோளின் அடிப்படையில் ஆய்வு மேற்கொள்ளப்படுகிறது. இப்பிரபந்தத்தில் இலக்கியப் பண்புகள் எவ்வாறு வெளிப்பட்டு நிற்கின்றன என்பதை விவரண மற்றும் பகுப்பாய்வு முறையியல்களைத் துணைகொண்டு ஆராய்வதாக இக்கட்டுரை அமைகின்றது. முடிவாக இலக்கிய நோக்கு நிலையில் ஆய்வு செய்யும் பொழுது இப்பிரபந்தம் தமிழ் இலக்கிய உலகில் சிறப்புப்பெற்ற இலக்கியங்களில் ஒன்றாக அமைகின்றது என்பது தெளிவாகின்றது. இந்நூல் பக்தி இலக்கிய வரிசையில் இடம்பெற்றிருந்தமையால் அதனுடைய இலக்கியத்தரம் புலனாகாதவகையில் அமைந்திருக்கலாம். நக்கீரதேவரிடம் காணப்பட்ட தமிழ்ப்புலமையும், ஆன்மிக நாட்டமும் தமிழ்ச்சுவையின் வழி பக்திச்சுவையைப் புலப்படுத்தும் ஆற்றலைத் தோற்றுவித்திருக்கும். பக்தி என்ற வரையறைக்கு அப்பால் தமிழ் இலக்கியம் என்ற தளத்தில் நக்கீரதேவநாயனாரின் திருஈங்கோய்மலைப் பதிகத்தை வைத்துப் பார்ப்பதே பொருத்தமானதாகும் என இந்த ஆய்வு பரிந்துரைக்கிறது.