Abstract:
திருக்கோவையார் எனும் நூலானது மாணிக்கவாசக சுவாமிகளால் அருளப்பட்ட தலைசிறந்த ஒரு பக்தி நூலாகக் காணப்படுகின்றது. உலகியல் வாழ்வுடன் தொடர்புடைய காதல் பற்றிக் கூறுகின்ற ஒரு அகத்திணை நுலாகவும் இது திகழ்கின்றது. மனிதனது வாழ்வியலுடன் காதல் என்னும் உணர்வானது அன்றும் இன்றும் பின்னிப் பிணைந்த வண்ணமே விளங்குகின்றது. வாழ்வியலினை இயக்கும் ஆற்றல் சமுதாயத்திடம் தான் உள்ளது. தனிமனிதர்கள் சேர்ந்திருப்பது குடும்பமாகவும், குடும்பங்கள் பல சேர்ந்து வாழ்வது சமுதாயமாகவும் உருவாகின்றன. குடும்பமின்றி சமுதாய அமைப்போ, பண்பாட்டு வளர்ச்சியோ அமைவதில்லை. இயற்கை நெறியின் ஒரு பகுதியான உலகியற் காதல் இல்லையெனின் குடும்ப அமைப்பில்லை. ஆகவே பக்திப் பனுவல்களைப் பாடிய புலவர்கள் இயல்பாக எழும் காதல் உணர்ச்சிகளைக் கடவுள் மேல் வெளிப்படுத்தி இலக்கியங்களை உருவாக்கியமை குறிப்பிடத்தக்க சிறப்பாகும்.
பொதுவாக காதல் என்பது உயிரினங்களுக்கிடையே ஏற்படும் பாலியல் ஈர்ப்பு, மனித நேயம், இரக்கம், அன்பு, அக்கறை உணர்வு மற்றும் சேர்ந்து வாழ்தல்
ஆகியவற்றினைக் குறிக்கின்ற நல்லொழுக்கமாகும். அந்த வகையில் திருக்கோவையார் என்னும் பக்தி நூலில் எங்ஙனம் அதிகளவில் தெய்வீகக் காதல் உணர்வுகள் வெளிப்படுத்தப்பட்டுள்ளன என்பதே இவ்வாய்வின் பிரச்சினையாக அமைகிறது. திருக்கோவையாரில் காணப்படுகின்ற தெய்வீக்க் காதல் பற்றிய கருத்தியல்களை அடையாளம் காணல் மற்றும் மனித வாழ்வில் தெய்வீகக் காதலினைக் கடைப்பிடிப்பதனால் ஏற்படும் நன்மைகளை எடுத்துக்காட்டுதல் போன்றனவே இவ்வாய்வின் நோக்கங்களாகும்.
இதன் பொருட்டு இலக்கியப் பகுப்பாய்வு முறை இவ்வாய்வின் பிரதான ஆய்வு முறையாக பயன்படுத்தப்பட்டுள்ளது. இதற்காக திருக்கோவையாரின் உரைகள் அடங்கிய மூல நூல்கள் முதனிலைத் தரவுகளாகவும் திருக்கோவையார் மற்றும் தெய்வீக்க் காதல் தொடர்பாக வெளிவந்த கட்டுரைகள், சஞ்சிகைகள், பத்திரிகைகள் போன்றன இரண்டாம் நிலைத்தரவுகளாகப் பயன்படுத்தப்பட்டுள்ளன. இவ்வாய்வு முற்றுமுழுதாக பண்புசார் ஆய்வாகவே அமைந்துள்ளது. அந்தவகையில் மாணிக்கவாசகர் இறைவன் மீது கொண்டிருந்த தனது காதலினை திருக்கோவையார் எனும் இலக்கியத்தில் வெளிப்படுத்திய விதத்தினை ஆராய்வதுடன் தெய்வீகக் காதல் பற்றிய சிந்தனைகளின் ஊடாக மனிதநேயம், இறைவனின் அருட்திறம் மற்றும் வாழ்வின் நிலையான இன்பம் போன்றவற்றினை மானிடர்க்கு எடுத்துக்கூறுவதாக இவ்வாய்வு அமைகிறது.