Abstract:
இந்துசமயத்திருநூல்களான இதிகாச புராணங்களின் சமய மெய்யியற் சிந்தனைகள் பிற்காலத்தைச் சேர்ந்த பல்வேறு சமய நூல்களில் செல்வாக்கு செலுத்தியுள்ளன. இந்நிலையில் சம்ஸ்கிருத மொழியிலமைந்த யேசு நாதருடைய வாழ்க்கை வரலாற்றை மூலக் கருப்பொருளாகக் கொண்டு உருவாக்கப்பட்ட கிறிஸ்து பாகவதம் என்ற நூல் சம்ஸ்கிருத மகாகாவியங்களின் இலட்சணங்களுக்கு அமைவானதாக கேரளாவைச் சேர்ந்த பேராசிரியர் தேவேஸ்யா என்பவரால் இயற்றப்பட்டது. சமஸ்கிருத மொழியில் யேசு நாதருடைய வாழ்க்கை வரலாற்றைக் கூறுகின்ற முதல் நூல் என்ற வகையில் இது முப்பத்து மூன்று சர்க்கங்களையும் ஆயிரத்து ஐநூற்று எழுபத்து மூன்று பாடல்களையும் உள்ளடக்கியது. இதன் கதாநாயகனாக யேசு நாதர் கூறப்படுவதுடன் அவரின் முப்பத்துமூன்று ஆண்டு கால வாழ்வியல் வரலாற்றை மையப்படுத்தியதாக முப்பத்துமூன்று சர்க்கங்களும் காணப்படுகின்றன. இவ் ஆய்வுக் கட்டுரையானது கிறிஸ்து பாகவத உருவாக்கத்தில் நூலாசிரியர் எவ்வாறு இந்துத் தெய்வவியல் கோட்பாடுகளை அடியொற்றிய இதிகாச புராண சமய மெய்யியற் சிந்தனைகளை பின்புலமாகப் பயன்படுத்தியிருந்தார் என்பதனை இலக்கிய நுண்ணாய்வு முறையியல், விவரண முறையியல் என்பவற்றின் துணை கொண்டு மேற்கொள்ளப்பட்டுள்ளதுடன் ஆய்விற்கான தரவுகள் கிறிஸ்து பாகவதத்திலிருந்தும் ஏனைய தொடர்புடைய இலக்கியங்களிலிருந்தும் பெறப்பட்டுள்ளன. இலக்கிய நுண்ணாய்வின் வழியாக இம் மஹாகாவியத்தில் இந்துத் தெய்வவியல் கோட்பாடுகளை அடியொற்றி இதிகாச புராண செய்திகள் பலவும் அமைந்து காணப்படுவதனை கண்டுகொள்ள முடிகிறது. குறிப்பாக கிறிஸ்து பாகவதத்தில் வரும் ஒப்பீட்டு வர்ணனைகளில் புராணக்கதைகளான பாற்கடல் கடைந்த செய்தி மன்மத தகனம், திரிபுர தகனம், கம்ஸ பரிபாலனம், முதலியன குறித்த செய்திகள் கூறப்படுகின்றன. மேலும் இராமாயண கருத்து நிலைகளான தசரதனிடம் இராமனின் வனவாசத்தை வரமாகப் பெற்ற கைகேயி, சீதை குறிக்கும் மைதிலீ என்ற சொல்லாட்சி, ராவணன் கைலாசமலையைப் பெயர்த்தெடுக்க முயற்சித்த செய்தமை போன்றவை குறித்து பேசப்படுகிறது. பேரிதிகாசமான மகாபாரதத்திலிருந்து பாண்டவர், யுதிஷ்டிரன், அர்ஜீன்ன், அஸ்வத்தாமன், துரோணர், அர்ஜீனன் கிருஷ்ணனின் விஸ்பருப தரிசனத்தைக்கண்டு ஆச்சரியமுற்றமை பீஷ்மரின் அம்புப்படுக்கை என்பன குறித்த செய்திகள் காணப்படுகின்றன. முடிவாக நோக்குமிடத்து ஆசிரியரின் கிறிஸ்தவ சமயம் குறித்த அறிவும் சம்ஸ்கிருத பழமை இலக்கியங்களான இதிகாச புராணங்களில் அவருக்கு இருந்த ஆளுமையும் இம் மகா காவியத்தின் உருவாக்கத்தில் பெரிதும் பங்களித்துள்ளமையை அறிந்துகொள்ள முடிகிறது. மேலும் இன்றைய காலகட்டம் வரை இந்துசமயம் நின்று நிலைக்க அடித்தளமிட்ட சமய மெய்யியற் சிந்தனைகளும், அவை எடுத்தாளப்பட்ட நுட்பங்களும் பிறசமயங்களை வளப்படுத்தியிருக்கும் முறை குறித்த வரலாற்று ரீதியான புதிய ஆய்வுகளைத் தூண்டும் வகையில் ஒப்பீட்டுச்சமயச் சிந்தனைகளை விரிவுபடுத்துவதாகவும் இவ் ஆய்வு அமைகிறது.