Abstract:
தமிழர் வரலாற்றில் இந்துசமயமரபில் ஒரு திருப்புமுனையாக காரைக்காலம்மையார் விளங்கினார். சிவனடியார்கள்ளை உபசரிக்கும் பண்பினைக் கொண்ட இவர், இறைவனால் ஆட்கொள்ளப்பட்டு இந்து சமய மறுமலர்ச்சிக்காக பணியாற்றிய பென்பாற் புலவராவார். இவர் வாழ்ந்த காலம் தொடர்பில் ஆய்வாளர்களிடையே இடர்பாடுகள் உண்டு. சமணமும், பௌத்தமும் மேலோங்கி ஆதிக்கம் செலுத்திய அறநெறிக் காலத்தில் ஒடுக்கப்பட்டுக் கொண்டிருந்த சைவசமய விழுமியங்களைப் புத்துயிர் பெற வைத்த பெருமை அம்மையாருக்குரியது. புனிதவதியார் என்னும் இயற்பெயர் கொண்ட இவர் ஒரு பெண்ணாக இருந்து கொண்டு ஆதிக்கநிலையிலிருந்த வணிக மேலாண்மைச் சமூகத்திக் கட்டுப்பாடுகளைத் தகர்த்துக் கொண்டு இல்லற வாழ்வினையும் துறந்து இந்துசமயத் தத்துவங்களயும், அறக் கருத்துக்களையும், இறைவனது பெருமைகளையும், சமய வாழ்வின் நெறியினையும் உலகறியச் செய்வதற்காகவும், இந்து சமய மறுமலர்ச்சிக்காகவும் உழைத்த பெண் பக்தி இலக்கியவாதியாகத் திகழ்கிறார். அம்மையாரது வரலாறு திருத்தொண்டர் பெரியபுராணத்தில் ஐந்தாவது சருக்கமான நான்காவது புராணமாய் அமைந்துள்ளது. இவரது இலக்கியங்கள் பதினொராம் திருமுறைக்குள் உள்ளடக்கப்பட்டுள்ளன. ஐம்பொறிகளும் உந்துவதால் இயங்குகின்ற ஐம்பொறிகளையும் பாலியல் நடத்தைகளையும் கட்டுக்குள் கொண்டுவருவதனூடாக ஒழுங்கமைக்கப்பட்ட வாழ்வியலை வாழமுடியும் என வற்புறுத்திய அறநெறிக்காலத்தில் அறம் கூறும் இலக்கியங்கள் பல தோற்றம் பெற்றன. இவ்விலக்கியங்களினூடாக மதப்பிரசாரங்கள் மேற்கொண்டு சமணமும் பௌத்தமும் வெற்றிகண்டன. கட்டற்ற வாழ்வியலில் இருந்து கட்டுப்பாடான வாழ்வியலை நோக்கி நகர்ந்த மக்களுக்கு அதீத கட்டுப்பாடு மனதில் விரக்தியைத் தோற்றுவித்த தருணத்தில் காரைக்கால் அம்மையாரால் இந்து சமய மறுமலர்ச்சிக்காக இலக்கியங்கள் படைக்கப்பட்டன. வையத்துள் வாழ்வாங்கு வாழ்வதனூடாகப் பேரின்பப் பெருவாழ்வினை அடையலாம் என்றும், இல்வாழ்வானே இயல்புடைய மூவருக்கும் துணைவன் என்றும் நெறிப்படுத்திய அம்மையார், வாழ்வியலின் நிலையாமை, அறநீதிக் கருத்துக்களைத் தன் இலக்கியங்களில் உள்ளடக்கிப் பாடினார். அறத்துடன் கூடிய இல்லற வாழ்வியல் துறைவைவிடச் சிறந்த்தெனக் கூறி மனித வாழ்வியலைச் செம்மைப்படுத்தினார். அம்மையார் தன் இலக்கியங்களில் வைதிகம் சார்ந்த அறக்கருத்துக்களைக் கையாண்டது மட்டுமல்லாது சமண, பௌத்தர்கள் எடுத்துக்கூறிய அறக்கருத்துக்கள், ஒழுக்க விழுமியங்கள், நிலையாமைக் கருத்துக்கள் என்பவற்றையும் கையாண்டுள்ளார். அத்துடன் இறைவனை அறக்கடவுளாகக் காட்டி அறத்தினை வலியுறுத்தியுள்ளார். காரைக்காலம்மையாரின் அறக்கருத்துக்களின் கையாட்சி பக்தி இலக்கிய மரபில் எத்தகைய வகிபங்கைப் பெறுகின்றது? என ஆராயும்முகமாக இக்கட்டுரை அமைகிறது. இந்த ஆய்வில் வரலாற்று முறையியல், விவரண முறையியல் என்பன ஆய்வு முறையியல்களாக அமைந்துள்ளன.