Abstract:
இறைவனிடத்தில் அன்பு செலுத்திக் கடவுளை உணர முயலும் வழிமுறையே பக்தி மார்க்கமாகும். சைவ வைணவ சமயங்களுக்குரிய பல்வேறு பக்தி மார்க்கங்களில் இறைவன் புகழை இசையுடன் பாடுதலும் ஒன்றாக விளங்குகின்றது. இந்த இசையானது குரலிசையாகவும், விரலிசையாகவும் (இசைக்கருவிகள்) இசைக்கப்படுகின்றது. ஆதிகாலத்தில் கோயில்கள் கலை வளர்க்கும் நிலையங்களாக விளங்கின. அரசர்களும், ஜமீன்தார்களும், ஊர்ப்பெரியவர்களும் கலையைப் போஷித்துக், கலைஞர்களுக்கு மரியாதை செய்து அவர்களுடைய வாழ்க்கைக்கு உறுதுணையாக இருந்தார்கள்.கலைஞர்களும் பொதுமக்களுடைய மதிப்பிற்கும் மரியாதைக்கும் உரியவர்களாக இருந்தார்கள். அண்மைக்காலத்தில் பல்வேறு காரணங்களால் கோவில் வருமானம் குறைவடைந்தமையால் கலைஞர்களைக் கோவில்கள் ஆதரிக்க முடியாமல் போய்விட்டது. ஆகவே பல நூற்றான்டுகளாகக் கோவில்களில் வளர்ந்து வந்த கலைகளுக்கும் கலைஞர்களுக்கும் மங்கு நில ஏற்பட்டது. எந்தக் கோயிலில் எந்த இசைக்கருவி இருந்தது என்று தெரியாத நிலை ஏற்பட்டுள்ளது. இவ்வகையில் ஆலயங்களில் பூஜை மற்றும் கிரியை வழிபாடுகளில் பயன்படுத்தப்பட்ட, பயன்படுத்திக் கொண்டிருக்கின்ற துளைக்கருவிகளைத் தெரியப்படுத்தவும், மறைந்து சென்ற இசைக்கருவிகளின் பெயர்கள், அவற்றின் வரலாறு, சிறப்புக்கள், கிரியைகளில் பயன்படுத்தப்பட்ட சந்தர்ப்பங்கள் என்பவற்றை எல்லோரும் அறியச்செய்து மறைந்த இசைக்கருவிகளை மீள்பயன்பாட்டிற்கு கொண்டு வருதலுமே இந்த ஆய்வின் பிரதான நோக்கமாகும். இந்த ஆய்வு வரலாற்று ரீதியிலும், களரீதியான முறையிலும் செய்யப்படுகின்றது. மேலும் இந்த ஆய்வுக்குத் தேவையான தகவல்கள் நூல்கள், இணையத்தளங்கள், நேர்காணல் என்பவற்றின் மூலம் பெற்றுக்கொள்ளப்படுகின்றன. ஆலய வழிபாடுகளில் நரம்புக்கருவி, துளைக்கருவி, கஞ்சற்கருவி, தோற்கருவிகள் பயன்படுத்தப்படுகின்ற போதிலும் ஏனைய கருவிகளை விட துளைக்கருவிகளுக்குக் கொடுக்கப்படும் முக்கியத்துவம் சிறப்பாகக் காணப்படுகின்றது. இவற்றில் துளைக்கருவிகளான நாதஸ்வரம், குழல், சங்கு, முகவீணை போன்றவையும் கொம்பு, திருச்சின்னம், எக்காளம், தாரை, பூரி, வாங்கா, கௌரிகாளம் ஆகிள ஊதுகருவிகளும் பயன்படுத்தப்பட்டு வருகின்றது. ஆனால் தற்போது சங்கு, நாதஸ்வரம் ஆகியவை மட்டும் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. சங்கு என்ற கருவியும் முன்னர் திருவெம்பாவைக் காலங்களில் அதிகாலையில் மக்களைத் துயில் எழுப்புவதற்காகப் பஜனை பாடிச் செல்பவர்களால் இசைக்கப்பட்டு வந்தது. தற்போது சங்கும் ஒலிக்கப்படுவது குறைவாகவே உள்ளது. இவ்வாறே நாதஸ்வரம் வாசிக்கும் போது சுருதிப்பெட்டிக்காக ஒத்து என்ற துளைக்கருவியும் பயன்பாட்டில் இருந்தது. தற்போது மின்சாரத்தில் இயங்கும் சுருதிப்பெட்டியின் வருகையால் ஒத்து என்ற கருவி இல்லாமலே மறைந்துவிட்டது. ஆகவே மறைந்த இசைக்கருவிகளை மீளுருவாக்கம் செய்து பயன்பாட்டிற்கு கொண்டு வரவேண்டியது அவசியமானதொன்றாகும்.