Abstract:
இசை என்பது உலகப் பொதுமொழி என்பார்கள். தனித்துவமான பண்புகள் கொண்ட ஒவ்வொரு இனத்தினதும் அடையாளங்களை வெளிப்படுத்தும் சிறந்த கலையாக இசை வளர்க்கப்பட்டு வந்துள்ளது. இந்துக்களால் பல நூற்றாண்டுகளாக வளர்த்தெடுக்கப்பட்ட செந்நெறி இசையானது இறைவனைப் போற்றிப் புகழவும் உச்சமான ஆன்மிக உணர்வை அடையவும் பொருத்தமான ஒன்றாகப் பண்டு தொட்டு வளர்க்கப்பட்டு வந்துள்ளது. உலக அளவில் கர்நாடக இசை என அழைக்கப்படும் இசை மரபில் தமிழ், தெலுங்கு, வடமொழி போன்ற மொழிகளிலும் ஏனைய சில மொழிகளிலும் இசைப்பாடல்கள் கையாளப்பட்டு வருகின்றன. அப்பாடல்கள் பல விதமான இறை மூர்த்தங்களைப் போற்றிப் பாடும் பாடல்களாகவே வாக்கேயக்கார்ர்களால் இயற்றப்பட்டுள்ளன. சைவ, வைணவக் கடவுளர்கள் மீதான துதிப் பாடல்களாக இவை அமைந்துள்ளமை இந்த இசை மரபின் சிறப்பு எனலாம். இப்பாடல்கள் பஜனை முறைகள் ஊடாகப் புகழ் பெற்று அதன் பின்னர் இசை அரங்கின் உருப்படிகளாகவும் மாற்றம் கண்டன. செந்நெறி இசையின் நோக்கத்தை வெளிப்படுத்தலும். செந்நெறி இசையில் தற்காலத்தில் ஏற்பட்டு வரும் மாற்றங்களை அறிதலும் இந்த ஆய்வின் நோக்கங்களாகும். விவரண ஆய்வாகவும் கள ஆய்வாகவும் முன்னெடுக்கப்பட்ட இந்த ஆய்வின் வழியாக அவை இனங்காணப்பட்டுள்ளன. குறிப்ப்பாக ஆன்மிகத்தை மட்டும் அடிப்படையாகக் கொண்டு வளர்க்கப்பட்ட இசையரங்குக்ள, அண்மைக்காலத்தில் வியாபாரத்தை மட்டும் முழுமையான நோக்கமாகக் கொண்ட திரைத்துறையால் ஆட்கொள்ளப்பட்டு செந்நெறி இசையின் தூய்மை சிதைக்கப்பட்டு விட்டதை உணரக் கூடியதாக உள்ளது. பொதுமக்களால் விரும்பப்படும் பலம் வாய்ந்த கலையாக விளங்கும் திரைத்துறையின் மாயையில் இசையாளர்களும் இசை ஆய்வாளர்களும் ஈர்க்கப்பட்டுச் சிந்தனைப் பிறழ்வு கொண்டவர்களாகவும் இசையரங்கின் அடிப்படைப் பண்புகளை மாற்றும் இயல்புடையோராகவும் மாறிவருகின்றமை யாவரும் அறிந்ததே. இசையரங்குகளில் திரைப்படப் பாடல்களைப் பாடுதல், திரையிசையும் செந்நெறி இசையும் சரிசமம் எனக் கருத்துரைத்தல், காலத்திற்கேற்ப மாற்றம் தேவை என துறைசாராதோர் சிந்தனைகளைத் தூண்டுதல், செந்நெறி இசைபற்றிய கருத்தாடல்களின் போது திரைப்படங்கள் பற்றிய கருத்துக்களை இணைத்துக் கருத்தாடல்களை மலினப்படுத்துதல் போன்றவற்றை எடுத்துக் காட்டுக்களாகக் கூறலாம். அத்துடன் ”சென்னையில் திருவையாறு” எனும் நிகழ்வானது திரைப்பாடல்கள் நிகழ்வாக மாற்றம் கண்டுள்ளமை செந்நெறி இசையின் எதிர்காலத்தையே கேள்விக் குறியாக்கி உள்ளது என்பதுடன் இளையோர் மனங்களையும் தவறான வழிக்கு இட்டுச் சென்றுள்ளது. இவ்வாறான நிலையில் செந்நெறி இசையானது அதன் ஆன்மிகத் தடத்தில் இருந்து விலகி வருகின்றது என்னும் கருத்தியலின் அடிப்படையில் இந்த ஆய்வு மேற்கொள்ளப்படுகின்றது.