Abstract:
ஆலயம் என்பது ஆன்மா லயப்படும் இடமாகும். அதாவது அலைகின்ற மனதைப் பக்குவப்படுத்தி வயப்படுத்தும் இடம் எனப்பொருள் தருகின்றது. அமைதியையும் தூய்மையையும் எடுத்துக் காட்டும் பக்தி நிலையங்களாக ஆலயங்கள் விளங்குகின்றன. இசை வழியே இறைவனைக் கண்டவர்கள் நம் முன்னோர்கள். இசையானது மிடற்றிசை என்றும் கருவியிசை என்றும் இருவகைப்படும். மனிதனது குரல் கூட ஒரு இசைக்கருவி தான். அதைக் காத்திர வீணை என்றும் கூறுவர். குரலிசைக்குத் துணையாக இசைக்கருவிகள் இசைக்கப்படுகின்றன. அந்தவகையில் ஆலய வழிபாட்டில் வாத்திய இசைமரபு பற்றிய இந்த ஆய்வில் இசைக்கருவிகளின் வகைகள், ஆலய வழிபாட்டில் வாத்திய இசைமரபின் தோற்றம் மற்றும் தொன்மை, ஆலய வழிபாட்டில் வாத்திய இசையின் பங்களிப்பு மற்றும் எவ்வாறு வாசிக்கப்படுகிறது என்பது பற்றியும் இன்றைய உலகில் ஆலய வழிபாடுகளில் வாத்திய இசைமரபு பற்றியும் ஆராய்வதாக இக்கட்டுரை அமைகிறது. இந்த ஆய்வானது வரலாற்றியல் ஆய்வு, விபரண ஆய்வு மற்றும் பகுப்பாய்வு முறையில்களைப் பயன்படுத்தி மேற்கொள்ளப்பட்டுள்ளது. அன்றும் இன்றும் கோவில்களின் இசை வழிபாட்டில் முன்னிலையில் இருப்பது நாதஸ்வர இசையாகும். பொழுது புலருங்காலத்து வழிபாடு முதற்கொண்டு இரவில் பள்ளியறைப் பூஜை வழிபாடு ஈறாகக் கோவில்களில் நாதஸ்வரக் குழுவின் இசை ஒலித்துக்கொணடிருக்கும். அன்றாடப் பூஜை வேளைகளில் இசைப்பதற்கென்றும் திருவிழக்காலங்களில் இசைப்பதற்கென்றும் தனித்தனியான மரபுகள் உருவாக்கப்பட்டு பாதுகாக்கப்பட்டு வந்துள்ளன. எந்தெந்த இசைக்கருவி , எவ்வப்போது, தனித்தோ, சேர்ந்தோ இயங்க வேண்டுமென்றவொரு முறைமையும் இருந்திருக்கிறது. நாதஸ்வரம், திருச்சின்னம், எக்காளம், முகவீணை, கொம்பு, புல்லாங்குழல், சங்கு, துத்தரி, மத்தளம், தவில், பேரிகை, பஞ்சமுக வாத்தியம், செண்டை, தப்பு, திமிலை, தாளம், சேமக்கலம், வீணை இவ்வாறு இறை வழிபாட்டில் இடம்பெறும் கருவிகள் பலவுண்டு. கிராம தேவதைகளின் வழிபாட்டில் உடுக்கை, பம்பை, கைச்சிலம்பு முதலியன இடம்பெறுகின்றன. காலப்போக்கில் பல கருவிகள் அருகிப்போக இன்று சில கருவிகள் மட்டும் தொடந்து இசைக்கப்படுகின்றன. இந்த அடிப்படையில் ஆய்வானது மேற்கொள்ளப்படுகின்றது.