dc.description.abstract |
ஆதியும் அந்தமுமில்லாத பராபரனான, சிவனை மூலநாதமாகக் கொண்டு விளங்குபவை பன்னிரு திருமுறைகளாகும். இவற்றில் பத்தாம் திருமுறையாகக் கொள்ளப்படும் திருமந்திரம் தமிழ் மூவாயிரம் என்று போற்றப்படுகின்றது. திருமூலரால் இயற்றப்பட்ட இந்நூல் ஒன்பது ஆகமங்களின் சாரமாக ஒன்பது தந்திரங்களைக் கொண்டமைந்துள்ளது. திருமூலர் திருமந்திரத்தில் பெரும் தெய்வமாக சிவனை ஏற்றுக்கொண்டுள்ளார் உடலில் உயிர் பொருந்தி உடலை இயக்குதல் போல உலகை இயக்குபவன் சிவன். ஆதலால் சிவனே உலகிற்கு உயிரும் மூலாதாரமும் ஆவார். உலகங்கள் பலவற்றையும் உடலாக உடையவர் அவர். அவரே அனைத்து உலகங்களுக்கும் ஒரே தெய்வமாக விளங்குபவர். பஞ்சபூத்த்தினாலாகிய இவ்வுலகில் ஐந்தொழிலைப் புரியும். உலகமாதாவாகிய சிவசக்தியின் புதல்வர்கள் பிரம்மன், விஷ்ணு, உருத்திரன், மகேசுவரன், சதாசிவன் என ஐவராவார். உயிர்கள் அவை செய்த வினைகளுக்குப் பரிசாக இப் பிறப்புத் தொடர்கின்றது. இதை அறிந்தும் மனிதர்கள் உலக வாழ்வியலில் ஆசை வைத்துத் துன்புறுகின்றனர் என்பதைத் திருமந்திரம் விளக்குகின்றது. தியானத்தின் மூலம் முப்பத்தெட்டுக் கலைகளிலும் ஆன்மா குண்டலினி சக்தியை எழுப்பி நிறுத்தும் அனுபவத்தைக் கூறும் போது, ஒவ்வோர் இடத்திலும் ஒவ்வோர் இசை கேட்கப்படுவதை அனுபூதிமான்கள் கூறியிருக்கின்றார்கள். எளிமையும் இனிமையுமுடைய திருமந்திரப் பாடல்கள், மனிதப்பிறவி-யெடுத்தலின் பின் சரியை, கிரியை, யோகம், ஞானமாகிய நால்வகை வழிகளின் மூலம் பக்திநெறி கொண்டு, முக்திக்கு வழிகாட்டுவதாய் அமைகின்றன. பக்திநெறி மூலமாக, நம் வாழ்வியல் முறைமைகளின் மூலம், ஐம்புலன் அடக்கம் கொண்டு விபரணமாக ஆய்வதே இந்த ஆய்வின் நோக்கமாக அமைகிறது. இந்த ஆய்வின் மூலங்களாக பன்னிரு திருமுறை, பன்னிரு திருமுறை வரலாறு, திருமந்திரம் என்பவை நோக்கப்பட்டுள்ளன. இவ் ஆய்வின் எல்லையாக, திருமந்திரப் பாடல்களில் வாழ்வியல் பக்திநெறி சார்ந்த பாடல்கள் எடுத்தாளப்பட்டுள்ளன. பன்னிரு திருமுறையில் திருமந்திரப் பாடல்கள் இயல் வடிவில் இருந்தாலும், இந்த ஆய்வினூடாக, இசையியல் அடிப்படையில் குறித்த சில திருமந்திரப் பாடல்களுக்கு இராக அமைப்பிட்டு ஆற்றுகையினூடாக செயல்முறை ஆய்வாகவும் முன்னெடுக்கப்பட்டுள்ளன. மனித உயிரின் சிறப்பின் மகிமை அறியப்படாத இவ்வாழ்வில், பக்திநெறி மூலமாக மனித உடலைப் பேணலும், உயிரைப் பேணி நடைமுறைப்படுத்தலும் இந்த ஆய்வினூடாகப் பெறப்படும் முடிவுகளாக அமைகின்றன. |
en_US |