Abstract:
இறைவனை அடைவதற்குரிய எளிமையான வழியாக இசை கொள்ளப்படுகின்றது. இசையால்
இறைவனை வழுத்தி இறையின்போம் பெற்றோர் அனேகர். இந்துசமய வரலாறு இசைவழி
சாதகர்களாகப் பலரை அடையாளப்படத்தி நிற்கின்றது. இந்த அடிப்படையிலே இறைவனை
மனம்ஈ மொழி, மெய்களால் வணங்கி இசைபாடி வழிபடுதல் என்பது மிகச்சிறந்த சாதனையாகக்
கொள்ளப்படுகின்றது. இசை வழிபாடு என்பது இந்து சமயத்திற்கானது மாத்திரமல்ல. எல்லா
சமயங்களும் இசையினால் இறைவனை வழிபடுவதற்கு முக்கியத்துவம் கொடுக்கின்றன.
ஆயினும் இந்து சமயமே இறைவனை இசையோடு இணைத்துப் பார்க்கின்ற சமயமாகக்
காணப்படுகின்றது. நாமசங்கீர்த்தனம், மந்திர உச்சாடனம், பஜனை, திருமுறை போன்றன
இறைவனைப் பாடிப்பரவுவதற்கானவை. இசைவழி இறை வழிபாடு என்பது இந்து சமயத்திலே
முக்கியம் பெற்றிருக்கின்றது. சம்மந்தப்பெருமானின் கோளறு பதிகமும் தீட்ஷிதருடைய கிருதிகள்
இரண்டுக்குமான தொடர்பும் பொருத்தப்பாடும் போன்ற பண்புநிலைகளின் பின்னணியில்
கருத்துப் பொருண்மைகளை வெளிக்கொணர்வதே இந்த ஆய்வின் நோக்கமாகும்.
சம்பந்தப்பெருமானின் கோளறு பதிகமும், முத்துஸ்வாமி தீட்ஷிதருடைய நவக்ரஹகிருதிகளும்
முக்கியமான ஆய்வுப் புலங்களாகக் கொள்ளப்படுகின்றன. அவற்றினுடைய எழுத்துருக்களும்,
ஒலிப்பதிவுகளும் இங்கு பயன்படுத்தப்பட்டிருக்கின்றன. மேலும் விபரண ஆய்வு முறை, இவ்விரு
பாடல் தொகுதிகளுக்கிடையிலான ஒப்பு நோக்கும் ஆய்வுமுறைமை என்பன
பயன்படுத்தப்பட்டுள்ளன. இவ்வாய்வினூடாக இருவேறு தளங்களிலே நவக்கிரஹ வழிபாட்டு
முறையியலிலே இருக்கக் கூடிய நடைமுறைகள் பற்றியும், இசையின் தளத்தை அடியாகக்
கொண்டு இவ்விரு படைப்புக்களில் காணப்படுகின்ற சிறப்புக்களையும் இனங்காணக்கூடியதாக
உள்ளது. மேலும் இசையியற் ஆய்வியற் புலங்களிலே இசையியல் நுட்பங்களைப் பற்றி, பக்தி
நெறி நின்று பார்க்கக் கூடிய ஒரு தெளிவினை ஏற்படுத்துவதாகவும் இந்த ஆய்வுக் கட்டுரை
அமைகிறது.