Abstract:
கலை மற்றும் அழகின் உறைவிடம் ஆலயமாகும். தெய்வ தத்துவத்தைப் பரப்பும் கலைக்கு அழகு
இயல்பாகவே நிறைந்திருக்கும். ஆலயங்களில் கலைகளை உறைவிடமாகச் செழிக்க வைத்த
பெருமைக்குரியவர்களுள் ஆடல்மகளிரும் அடங்குவர். நடனக்கலையை இறைவழிபாட்டுடன்
இணைத்துப் புனிதமாக்கி வளர்த்து வந்தவர்கள் இவர்கள். இத்தகைய ஆடல் மகளிரது
கலைச்சேவை ஆலயங்களில் வந்தடைந்த தன்மையை நோக்குவதாக இந்த ஆய்வு அமைவுறும்.
ஆலயங்களில் ஆகம வழிபாட்டு நெறிக்கமைய பூஜை வேளைகளின் போது ஆடல்மகளிர் ஆற்றிய
கலைப்பணி அளப்பரியது. அந்தவைகையில் ஆலயக் கிரியைகளில் இறைவனுக்கு வழங்கும்
உபசாரங்களில் கீதம், வாத்தியம், நிருத்தம் முதலியவற்றைச் சமர்ப்பித்தல் இன்றியமையாதது
என்பதைப் பூஜாபத்ததிகள் மூலம் அறிய முடிகின்றது. இப்புனிதமான கலை ஆராதனையை
தொன்றுதொட்டு ஆலயங்களில் வழங்கி வந்தவர்கள் தேவரடியார்கள் என்று போற்றப்படும் கலை
மாந்தர் ஆவார். இவர்கள் ஆற்றிய அளப்பரிய இக்கலைப்பணி தற்காலத்தில் ஆலயக்
கிரியைகளில் வழக்கொழிந்து போய்விட்டது எனக்கூறலாம். இந்நிலைக்கான காரணத்தை
ஆராய்வது அவசியமாகும். இக்கலை ஆலயங்களில் இருந்த தன்மையை அறிய வரலாற்றியல்
அணுகுமுறையும், கலைக்கும் வாழ்வியலுக்குமான தொடர்பினை நோக்க சமூகவியல்
அணுகுமுறையிலும் இந்த ஆய்வு நகரும். இக்கலைச் செயற்பாட்டைப் பூஜை வழிபாட்டின் போது
ஆகமங்கள் கூறியதற்கு அமைவாக எவ்வாறு பின்பற்றினர் என்பதை ஆராய்வது அவசியம்.
கலைகள் வளர்ச்சியடையச் சான்றாக அமைந்தது ஆலயங்கள் என்பதை மையமாகக் கொண்டும்,
அதிலும் நடனக்கலை ஆலய வழிபாட்டு முறைகளில் நிகழ்த்தப்பட வேண்டும் என்பதை
நோக்கமாகக் கொண்டும் இந்த ஆய்வு நகர்கின்றது.