Abstract:
ஆலயங்களில் இசை என்பது இறைவனை வழிபடும் பொருட்டு கிரியைகளிலும் பூசைகளிலும்
இசைக்கருவிகளை இசைத்து வழிபாடு செய்யும் முறையாகக் காலங்காலமாகப் பின்பற்றப்பட்டு
வருகின்றது. இதற்கு வரலாறுகள் ஆதாரங்களாக விளங்குகின்றன. இசைக்கலையை
ஆலயங்களில் புகுத்த வேண்டியதன் தேவையே இறைவன் இசை வடிவானவன், ஒளி
வடிவானவன், ஒலி வடிவானவன் என்ற உயர்ந்த எண்ணக்கருக்கள் மக்கள் மனதில் வேரூன்றி
இருப்பதானாலேயே ஆகும். நடராஜர், கண்ணன், நந்தி, சரஸ்வதி போன்ற தெய்வங்கள்
இசைக்கருவிகளை தமது கையில் ஏந்தியிருப்பதைக் காண்கின்றோம். இதிலிருந்து இந்துக்கள்
இறைவனையும் இசையையும் தொடர்புபடுத்தியே வழிபாடு செய்து வந்திருக்கிறார்கள் என்பது
கண்கூடு. பண்டைக்காலம் முதல் இன்று வரை மங்கல இசை ஆலயங்களில் இன்றியமையாத ஓர்
இடத்தைப் பெற்று வருகின்றது. நாதஸ்வரம், தவில் ஆகிய இரு இசைக்கருவிகளும் ஆலயத்தில்
மிக முக்கியத்துவம் வாய்ந்த கருவிகளாக இடம்பெறுவதைக் காணக்கூடியதாக உள்ளது.
நாதஸ்வரத்தில் மட்டுமே மல்லாரி, ரக்தி, ஊஞ்சல் எச்சரிக்கை போன்றவைகள் கிரியைகளின்
போது இசைக்கப்படுகின்றன. காலை முதல் பள்ளியறை செல்லும் வரை பூசை வழிபாட்டில்
நாதஸ்வரம் தவிர்க்க முடியாத ஓர் இசைக்கருவியாக விளங்குகின்றது. திருவுலாப்புறப்பாட்டின்
போது இசைக்கப்படும் ஓர் இசை வடிவமே மல்லாரி ஆகும். மல்லாரி கம்பீர நாட்டை இராகத்தில்
பல்வேறு வகையான தாளங்களில் அமையப் பெற்றிருக்கும். இந்த மல்லாரிகளின் வகைகளையும்
இசைக்கப்படும் சந்தர்ப்பத்தினையும் தற்காலத்தில் எவ்வாறான மல்லாரிகள் வாசிக்கப்படுகின்றன
என்பவை பற்றிய விபரங்கள் இந்த ஆய்வில் முன்வைக்கப்படுகின்றன. இந்த பழைமையான
வாசிப்பு முறைகள் பின்பற்றப்பட்டு வரவேண்டும் என்பதனை வலியுறுத்தும் இந்த ஆய்வு
வரலாற்று ஆய்வாக அமைந்துள்ளது. மரபுவழி வாசிப்பு முறைகள் பின்பற்றப்படுகின்றனவா
என்ற வினாவிற்கு நேர்காணல் மூலம் தரவுகள் சேகரிக்கப்பட்ட சந்தர்ப்பங்களில் கள ஆய்வு
முறை பயன்படுத்தப்படுகிறது.