Abstract:
மட்டக்களப்பு மக்களது வாழ்வியலில் காணப்படும் தனித்துவ சிறப்பம்சங்களில் ஆகமம்சாரா வழிபாடு இன்றியமையாத ஒன்றாகும். ஆகமம் சார்ந்த வழிபாட்டினைப் பார்க்கிலும் ஆகமம்சாரா வழிபாட்டில் மக்கள் ஈடுபாடும் நம்பிக்கையும் அதிகமாகத் தொன்றுதொட்டு காணப்படுகின்றது. ஆகமம்சாரா வழிபாடானது இசைப்பாடல்கள், இசைக்கருவிகளுடன் பாரம்பரியமாக நிகழ்த்துகை வடிவில் இடம்பெறுகின்றது. ஆகமம்சாரா வழிபாட்டில் பாடப்படுகின்ற காவியம், உலா, அம்மானை, கும்மி, ஊஞ்சல், அகவல், பள்ளு என அனைத்து இசை வடிவங்களும் இசைக்கருவிகளின் உதவியுடன் பாடப்படுகின்றன. இங்கு கையாளப்படும் இசைக்கருவிகளாக பறை, உடுக்கு, மத்தளம், சங்கு, கொட்டு, சிலம்பு. அம்மானைக்காய், மணிகள் என்பவற்றைக் கூறலாம். இந்த இசைக்கருவிகள் அதிகமாக தோற்கருவிகளாகவும், கஞ்சக்கருவிகளாகவும் காணப்படுகின்றன. இங்கு பாடப்படும் இசைவடிவங்களைக் கேட்கும் மக்களுக்கு உளஆற்றுகைப்படுத்துவது போன்று இருக்கும். இதற்குக் காரணம் இசைவடிவங்களுடன் இசைக்கருவிகளும் இணைந்து ஒலிப்பதாகும். கலைக்கண்ணோட்டத்தில் பார்க்கின்ற போது இவ்வழிபாட்டு முறைகள் வேலன் வெறியாடல் போன்ற சங்ககால நிகழ்த்துகை மரபினை ஒட்டி நிற்கின்றன. சடங்கு வடிவில் பாடப்படுகின்ற இசைவடிவங்கள், பாடுகின்ற கலைஞர்கள், இசைக்கப்படுகின்ற இசைக்கருவிகள், அலங்கார அமைப்புக்கள், ஆலயப் பின்னணி என்பன சிறந்த ஒரு ஆற்றுகை நிகழ்வினை மனங்களின் முன் கொண்டுவருகின்றது. இந்த ஆய்வுக்கட்டுரையானது விபரண ஆய்வு, கள ஆய்வு, வரலாற்று ஆய்வு முதலிய ஆய்வியல் முறைகளில் எழுதப்பட்டுள்ளது. ஆகமம்சாரா வழிபாட்டில் பயன்படுத்தப்படும் இசைக்கருவிகளின் தனித்துவங்கள், பங்களிப்புக்களை உலகறியச் செய்வதனை ஆய்வு நோக்காகக் கொண்டு இந்த ஆய்வுக்கட்டுரை எழுதப்பட்டுள்ளது.