Abstract:
சைவத்தின் முடிந்த முடிவான கொள்கையே சைவசித்தாந்தமாகும். சித்தாந்தமானது பதி, பசு, பாசம் எனும் முப்பொருள்களை ஏற்று நிற்கின்றது. பாசம் என்பது ஆணவம், கன்மம், மாயை என்பவற்றின் தொகுதியாகும். பசுவினது குறிக்கோள் தன்னைப் பற்றியுள்ள பாசத்திலிருந்து விடுபட்டு பதியினை உணர்ந்து இன்பம் துய்த்தல் வேண்டும் என்பதாகும். அதாவது பசுவானது ஆணவம், கன்மம், மாயை ஆகிய மும்மலங்களிலிருந்து விடுதலை பெற்று அருளோடு கூடியபடி பேரின்பத்தை எய்துவதே மேலான முத்தி என்பது சைவசித்தாந்தக் கொள்ளையாகும். இது இறைவனுடைய அருளினாலும் பசுவினுடைய முயற்சியினாலும் அநாதியான ஆன்மாவைப் பசுத்துவப்படுத்தும் மலங்கள் நீங்கினால் சித்தியாகும். மெய்கண்ட சாத்திர நூல்களில் ஒன்றானதும் உமாபதிசிவாச்சாரியாரால் ஆக்கப்பெற்றதுமான சிவப்பிரகாசத்தில் பொது அதிகாரத்தின் இறுதியில் முக்தி நிலை பற்றிய கருத்தாடலானது ஐம்பதாவது பாடலில் கூறப்படுகிறது. இதில் புறச்சமயத்தவரது பத்து வகையான முக்தி பற்றியும் அவற்றின் பொருத்தமின்மையையும் விளக்கி இறுதியில் சைவசித்தாந்தம் கூறும் சிவாசாயுச்சிய முக்தியே மேலான முக்தி என்பதை நிறுவியுள்ளார். சிவப்பிரகாசமானது புறச்சமைய முக்தியை மறுக்கும் தருக்கமுறையினையும் சைவசித்தாந்த முக்தியின் பொருத்தப்பாட்டினையும் அறிவாராய்ச்சியியல் அடிப்படையில் ஆராய்வதை நோக்கமாகக் கொண்ட இந்த ஆய்வானது விவரண, பகுப்பாய்வு ஆகிய ஆய்வுமுறையியல்களினால் நெறிப்படுத்தப்பட்டுள்ளது. சிவப்பிரகாசத்தில் பிற சமயங்களின் முக்திக்கொள்கைகள் அனைத்தும் விளக்கப்பட்டு அவை யாவும் பரபக்கமென அளவைப்பிரமாணத்தின் வாயிலாக நிராகரிக்கப்படுகின்றன. இவ்வகையில் சிவப்பிரகாசமானது பத்து வகையான முக்தியைக்கூறி மறுத்தாலும் சிறந்த முக்தி அல்லது உன்னதமுக்தியாக சைவசித்தாந்த முக்தியை கூறியிருப்பதை ஆய்வினூடாக அறிந்துகொள்ள முடிகிறது.