Abstract:
முதல்வன் உயிர்கள் மீது கொண்டுள்ள பெருங்கருணையினை அறக்கருணை, மறக்கருணை என்று இரண்டாகப் பிரிக்கலாம். முதல்வனால் உயிர்களுக்கு வரும் இன்பங்கள் அறக்கருணை என்றும் முதல்வனால் உயிர்களுக்கு வரும் துன்பங்கள் மறக்கருணை என்றும் கூறப்படும். முத்திநிலையில் முதல்வன் இன்பத்தைக் கொடுக்க உயிர்கள் அவ்வின்பத்தைப் பெற்று அனுபவிக்கின்றது. இது முழுமையும் அறக்கருணையே. ஆனால் கட்டுநிலையில் உயிர்களின் மலநீக்கத்தின் பொருட்டு துன்பமும் இன்பமும் மாறி மாறித் தரப்படுகின்றன. இது உயிர்கள் கொண்டுள்ள ஆணவ நோய்க்கு ஏற்ப முதல்வனாகிய வைத்தியநாதன் வழங்கும் இனிப்பு மருந்தும் மற்றும் கசப்பு மருந்தும் போன்றன. மன்னன் தன் ஆணைவழிவாரப் பிரசைகளைத் தண்டம் செய்வதும் வைத்தியன் கடுமையான நோயினை ரணசிகிச்சை செய்து குணப்படுத்துவதும் போன்ற ஈசனார் முனிவுமாகும். பஞ்சகிருத்தியத்தில் முதல்வன் உயிர்கது அறிவினை மறைக்கும் திரோபவமும், சங்காரம் செய்வதும் மறக்கருணையே. இந்த ஆய்வானது பன்னிரு திருமுறைகள் மற்றும் பதினான்கு மெய்கண்ட சாத்திரங்களில் காணப்படும் மறக்கருணைபற்றிய கருத்துக்களை ஆய்வு செய்வதை நோக்கமாகக் கொண்டது. குறிப்பாக கண்ணப்பதேவர் திருமறம், கோபப் பிரசாதம் முதலிய திருமுறைகளிலும் சிவஞானபோதம், சித்தியார், போற்றிப் பஃறொடை முதலிய சாத்திர நூல்களிலும் காணப்படும் மறக்கருணை பற்றிய கருத்துக்களை சமூக மற்றும் தத்துவ நோக்கில் ஒப்பீடு, பகுப்பாய்வு மற்றும் விபரண ஆய்வு முறையியல்களைப் பயன்படுத்தி இவ்வாய்வு செய்யப்படுகின்றது. முதல்வனது சக்திகளை இச்சா, ஞானா, கிரியா என்று மூவகையில் அடக்கிவிடலாம். ஞானம், கிரியை வேறுபாட்டிற்கேற்பவே மகேசுர மூர்த்தங்கள் சைவசித்தாந்தத்தில் வகைப்படுத்தப்பட்டுள்ளன. இச்சை பற்றிக் கூறுகின்ற போது முதல்வனது இச்சை உயிர்கள்பால் நேசம் மாத்திரமே அது என்றும் மாறாதது என்பது சித்தாந்தத் துணிபு. தடத்த நிலையில் முதல்வனது சக்தி திரோதாயியாக நின்றே உயிர்க்கு வினையூட்டுதலையும், முதல்வன் பஞ்சகிருத்தியம் செய்யத் துணையாகவும் நிற்கின்றது. இந்நிலையில் உள்ள அவனது சக்தி உயிர்கள் மீது கோபம் கொண்டுள்ளது என்றும் அந்நிலை நீங்குதல் உயிர்க்கு அருள்வதற்காகும்.