Abstract:
இறைவனே மெய்ப்பொருள் என்றுணர்ந்து இறைவனுடன் ஒன்றறக் கலக்குமிடமே ஆலயமாகும். இத்தகைய சிறப்புப் பெற்ற ஆலயங்கள் கலைகளின் வளர்ச்சியில் முக்கிய இடம் வகிக்கின்றது. அந்தவகையில் இசைக்கலை வளர்ச்சியில் இந்து ஆலயங்கள் சிறப்புப் பெறுகின்றன. பல்வேறு கோணங்களில் இசைக்கலையானது ஆலயங்களினூடாகவே வளர்ச்சிபெற்றன. இசை வடிவங்களைச் சிற்பங்களாக ஓவியங்களாக உருவாக்குதல், இசைத்தூண்கள், இசைக் கல்வெட்டுக்கள், ஆலயங்களில் தேவரடியார்களை நியமித்து அவர்களுக்கான மானியங்களை வழங்குதல் போன்றவற்றைக் குறிப்பிடலாம். இவற்றிற்கான பெருமையும் சிறப்பும் பண்டைய காலத்தில் வாழ்ந்த மன்னர்களையே சாரும். பண்டைய ஆலயச் சின்னங்களும் சான்றுகளுமே தற்காலம் வரை எமது இந்து கலாசார விழுமியங்களையும் தமிழர் கலாசாரங்களையும் உலகமறியச் செய்கின்றன. அத்துடன் எமது முன்னோர்களில் அறிவியல் சார்ந்த விடயங்களை சிலர் மூட நம்பிக்கை என்று கூறுகின்ற பொழுதிலும், உலக ஆய்வாளர்கள் அவர்களின் அறிவாற்றலைக் கண்டு வியக்கின்றனர். அந்த வகையில் இந்து ஆலயக் கட்டுமானங்களில் இசைசார் பின்னணிகள் புராதன காலத்தில் எவ்வாறு செல்வாக்குச் செலுத்தியது மற்றும் தற்காலத்தில் எவ்வாறு செல்வாக்குச் செலுத்துகின்றது. அவற்றில் உள்ள இடர்பாடுகளை ஆராய்தலே இந்த ஆய்வின் நோக்கமாக உள்ளது. இந்த ஆய்வின் ஒரு பகுதியாக ஈழத்தில் அமைந்த இந்து ஆலயக்கட்டுமானங்கள் பற்றியும் தரவுகள் சேகரிக்கப்பட்டு ஆராயப்பட்டுள்ளது. ஈழத்தில் தற்காலத்தில் புதிதாக எழுகின்ற ஆலயங்கள், அவற்றின் கட்டு மானங்களில் பாரம்பரிய இசைப் புலமைத்துவங்கள் எவ்வாறு அமைக்கப்படுகின்றன. பாரம்பரிய மரபுசார் முறைகளைப் பாதுகாப்பதில் எவ்வாறான பிரச்சினைகள் உள்ளன? அதற்கான தீர்வுகளை நாம் எவ்வாறு பெற்றுக் கொள்ளலாம் என்பது பற்றி இந்த ஆய்வில் ஆராயப்படுகின்றது.