dc.description.abstract |
கிழக்கிலங்கை வழிபாட்டு மரபில் முருக வழிபாடு பிரசித்தமானது. அங்கு இயற்றப்படுகின்ற முருகவழிபாட்டிற்கு அடிப்படையாக அமைந்துள்ள திருப்படைக் கோயில்களுக்குக் குறிப்பிடத்தக்க முக்கியத்துவம் உண்டு. கிழக்கிலங்கையின் திருப்படைக் கோயில்களின் வழிபாட்டு முறைகள் பல்பரிமாணத்தன்மை கொண்டவையாகும். திருப்படைக்கோயில்களில் சிறப்பானதும் தனித்துவமானதுமான ஒன்றாகச் சித்தாண்டி சித்திரவேலாயுத சுவாமி ஆலயம் காணப்படுகிறது. திருப்படைக் கோயில்களில் இவ்வாலயத்தில் மாத்திரமே ஆகமம் சார்ந்த வழிபாடு, ஆகமம் சாரா வழிபாடு ஆகியவற்றுடன் சமூகவழமைகளும் இணைவுற்றுக் காணப்படுகின்றன. அந்தவகையில் மயில்கட்டுத் திருவிழாவும் அதில் இடம்பெறும் மரபுவழியான சம்பிரதாயங்களும் அதன் தனித்துவத்தினை எடுத்தியம்புகின்றன. இவ்வாலயத்தில் ஆகம்முறையிலான வழிபாடுகளும், மரபு வழியான சம்பிரதாயங்களை அடியொற்றிய வழிபாடுகளும் இடம்பெறுகின்றன. சித்தாண்டி சித்திரவேலாயுதர் கோயிலில் இடம்பெறும் மரபுவழியான சம்பிரதாயங்களில் ஒன்றாக அடையாளப்படுத்தப்படும் மயில்கட்டுத் திருவிழாவை ஆராய்வதே இக்கட்டுரையின் நோக்கமாகும். மனத மனத்தின் வெளிப்பாடு பண்பாடு ஆகும். இதில் சமூகத்தளமும், சமூக மனமும் சமயத்தளத்தோடும், சமய மனத்தோடும் இணைவுற்றுக் காணப்படுகின்றன. பெருஞ்சமயக் கடவுளர்க்கு வருடந்தோறும் உற்சவத்தில் திருக்கல்யாணம் இடம்பெறுகின்றது. திருக்கல்யாணம் தமிழரின் யதார்த்த வாழ்வில் நிகழ்த்தப்படும் திருமணங்கள் போலச் செய்தலாகவேயுள்ளன. வாழ்வியல் சடங்கிற்கும் தெய்விக திருக்கல்யாணச் சடங்கிற்கும் ஒற்றுமை உள்ளதால் சமூக மனமும் ஒன்றையொன்று பரஸ்பரத்தை பிரதிபலிப்பதாகவே உள்ளது. தெய்வானை இந்திரனின் சபையில் மறுபிறவியெடுத்தமையால் முருகனுக்கும் தெய்வானைக்கும் உயர்ந்த ஆசார முறைப்படி திருமணம் செய்து வைக்கப்படுகிறது. ஆனால் வள்ளியும் திருமாலின் மகளாக குறிப்பிட்டாலும் அவள் பிறந்த வேடகுல மரபிற்கு ஏற்ப வள்ளி திருமணம் நடைபெறுகின்றது. சடங்கு அல்லது திருமணமானது அச்சமுதாயத்தினர் வாழும் இடத்தைப் பொறுத்து உள்ளது. அதாவது இதில் சூழலின் தாக்கம் முக்கியமான ஒன்றாக்க் காணப்படுகின்றது. இதனடிப்படையில் வேடர்குல மரபின் படி சமஸ்கிருதத் தாக்கம் நடைபெறுவதற்கு முன்பாக தமிழருக்கு நடைபெற்ற திருமணமாக முருகன் வள்ளி திருமணம் (மயில்கட்டு) இக்கோயிலில் நடைபெறுகின்றது. இவ்வாலய உருவாக்கத்தின் பின்னரே சித்தாண்டி எனும் ஊரில் மக்கள் குடியேறினர். இதனைக் கூர்ந்து நோக்கும் போது ஆலயத்திற்கும் சமூகத்திற்குமிடையிலுள்ள தொடர்பு பலப்படுகின்றது. முருகனுடைய காதல் திருமணமாகவே மயில்கட்டுத் திருவிழா இடம்பெறுகின்றது. இந்த மயில்கட்டுத் திருவிழா பண்டைய தமிழர் முறைப்படி நடைபெறுவதால், இத்திருமணம் அவ்வூர் மக்களின் வாழ்வியலில் செல்வாக்குச் செலுத்துகின்றது. வாழ்வியல் சடங்கிற்கும், தெய்விக சடங்கிற்குமிடையே ஒப்புவமை நோக்கப்படுகின்றது. சாதாரண பாமர மக்களுக்கும், இறைவனுக்குமிடையேயுள்ள தொடர்பு ஒப்புவமை நோக்கப்பட்டு கடவுளர்களாக இருந்தாலும் சமூக வழக்கங்களுக்குட்பட்டு நடக்க வேண்டும் என்பது இம்மயில்கட்டுத் திருவிழாவினூடாக எடுத்தியம்பப்படுகிறது. இந்த ஆய்வில் விபரண ஆய்வு, ஒப்பீட்ய்வு, பகுப்பாய்வு, வரலாற்றியல் ஆய்வு முறைமைகள் பயன்படுத்தப்பட்டுள்ளன. சித்தாண்டி சித்திரவேலாயுத சுவாமி ஆலயம் பற்றி ஆய்வினை மேற்கொள்பவர்களுக்கு இந்த ஆய்வு ஒரு முன்னோடியாக அமையும். |
en_US |